Monday, June 10, 2024
Home » “காற்றினிலே வரும் கீதம்” : மேடைகளை மெருகேற்றும் லாவண்யா!

“காற்றினிலே வரும் கீதம்” : மேடைகளை மெருகேற்றும் லாவண்யா!

by Porselvi

சினிமாவில் நடித்து கோடிகளில் சம்பாதித்து பேரும் புகழும் பெற பலரும் ஆசைப்படும் இக்காலகட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக எந்த எதிர்ப்பார்ப்புமின்றி தனக்கென தனிப்பாதையை வகுத்து நாடக உலகில் சக்கை போடு போட்டுவருகிறார் நாடக நடிகை லாவண்யா வேணுகோபால். அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான இவர் நாடக கலையின் மேல் பெரும் ஈர்ப்புகொண்டு அத்துறையில் தற்போது கோலோச்சி, புகழ்பெற்ற மேடை நட்சத்திரமாக மின்னி வருகிறார். நாடகத் துறை மீதான அதீத காதலில் தனது சக நாடக கலைஞருடன் சேர்ந்து “Three” என்ற நாடக குழுவினை சொந்தமாக அமைத்து மேடை நாடகங்களை நடத்தி வருகிறார். நாடகத் துறை அனுபவங்கள் குறித்து லாவண்யா பகிர்ந்ததிலிருந்து …

உங்களை பற்றி….

ஒரு சுபயோக சுபதினத்தில் குடந்தை மாலி அவர்களால் நாடக நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் காத்தாடி ராமமூர்த்தி சாரின் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றேன். நான் நடித்த நாடக ட்ரூப்களில் அனைத்திலுமே சிறப்பானபலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆகப்பெறும் வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை 25 நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டு. புகழ்பெற்ற நாடகங்களான “துப்பறியும் சாம்பு” “ஹனிமூன் கப்புள்” “கௌரி கல்யாணம்” போன்ற புகழ்பெற்ற நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோலிக்கும் பெரும் வாய்ப்பு அமைந்தது. “என் வீடு என் கணவன் என் குழந்தை” என்கிற மிகப்பிரசித்தி பெற்ற நாடகத்தில் ஆச்சி கேரக்டரில் “அன்னபூரணி\” யாக நடித்தது எனது மாபெரும் பாக்யம். 500 ஷோக்களில் கிட்டத்தட்ட 17 நாடகங் களில் நடிக்கும் பெரும் பேறு கிடைத்தது.

உங்கள் “Three” க்கு வரவேற்பு எப்படி இருந்தது?

நிறைய மேடை நாடகங்களில் நடித்த அனுபவங்களை சேர்த்து சொந்த குழுவை உருவாக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் உருவாக்கப்பட்டதே “three” . ஒவ்வொரு நாடகங்களும் பலமுறை மேடைகளில் அரங்கேற்றிய நடித்த அனுபவத்தினை கொண்டே சொந்த நாடகக் குழுவை உருவாக்கும் மாபெரும் ஐடியா கிடைத்தது. எனது சக நாடக கலைஞர் M.V பாஸ்கர் அதற்கு பல்வேறு உதவிகள் செய்ய, அவரோடு சேர்ந்து “Three” நாடக குழுவை ஆர்வமுடன் ஆரம்பித்தேன். அதன் மூலம் எனது சில்வர் ஜூப்ளி நாடகமாக “பாயும் ஒளி” நாடகத்தினை முதல் நாடகமாக மேடையேற்றினோம். இதுவரை “பாயும் ஒளி” நாடகத்தை பலமுறை மேடையேற்றி பலரது பாராட்டுதல்களை பெற்று கொண்டோம். பெங்களூரில் உள்ள ரங்கசங்கரா அமைப்பில் எங்கள் நாடகத்தை மேடையேற்றும் அரிய வாய்ப்பினை பெற்றோம். “பாயும் ஒலி” க்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைத்ததா? “பாயும் ஒலி” நாடகத்தை எழுதி இயக்கியிருக்கும் வத்சன்க்கு நாடக உலகில் 25 வருடகால அனுபவம் உண்டு. இந்த நவீன கால நாடகத்தை மிக அருமையான எங்களுக்காக எழுதி இருந்தார். நாங்கள் இந்த நாடகத்தை இதுவரை 17 முறை மேடையேற்றியுள்ளோம். அரங்கேற்றிய அத்தனை இடங்களிலும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது . இதில் “நர்மதா” கதாப்பாத்திரம் எனக்கு மிகபெரிய பெயரையும் பெற்று தந்தது. நடுத்தர வயது காதல் குறித்த விஷயத்தை நாடகத்தில் சொல்லி இருக்கிறோம்.

“காற்றினிலே வரும் கீதம்” உங்கள் ஆசையா?

எம்எஸ் சுப்புலட்சுமி அம்மா பாடகி என்பதை தாண்டி ஒரு அருமையான மனுஷி என்பது எல்லாருக்குமே தெரியும். அவரே எனது மிகப்பெரிய இன்ப்பிரேஷன் . எனக்கு அவர் குறித்த நாடகத்தில் ஒரு சின்ன கதாபாத்திரமாவது நடிக்க வேண்டும் என்கிற தீராத ஆசை இருந்தது. ஆனால் எனது பெரும் அதிஷ்டமாக நானே அதனை செய்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதற்கு எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான திரு. ரமணன் அவர்களின் “காற்றினிலே வரும் கீதம்” புத்தகம் ரொம்பவும் உதவியாக இருக்கிறது. எனது அடுத்த அதிர்டஷமாக நாடக உலக ஜாம்பவானான “ பாம்பே ஞானம்” அவர்கள் அதனை இயக்குவதாக சொல்லியுள்ளார். எம்எஸ் அம்மாவின் பிறந்தநாளன்று இதனை மேடையேற்றலாம் என்கிற அதீத ஆசையோடு அதற்கான வேலைகளை முழு முயற்சியோடு செய்து வருகிறேன். நிச்சயம் அது எனது நாடக உலக வாழ்வில் மைல்கல்லாக கூட அமையலாம். கிடைத்த விருதுகள் குறித்து…. நான் நடிக்க வந்த முதல் வருடமே நாடக உலகின் ஆஸ்கார் என்று அழைக்கப்படும் மைலாப்பூர் அகடமி விருது கிடைத்தது . கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த நடிகைக்கான விருதினை இரண்டு முறை கிடைத்தது. performance excellence award, சிறந்த தியேட்டர் ஆர்டிஸ்ட் விருது, யுவஷக்தி விருதினையும் பெற்றேன்.

இந்த வருடம் துவக்கத்தில் “இன்னர்வீல்” என்கிற சர்வதேச அமைப்பிடமிருந்து சிறந்த நாடக நடிகை அவார்ட் மற்றும் மார்கழி விழாவில் “பாரத் கலாச்சார்” அமைப்பிடமிருந்து சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசினை பத்மா சுப்ரமணியம் அவர்களின் கையால் வாங்கினேன். எனது நாடக உலக குருக்களிடமிருந்தும், பல்துறை பிரபலங்களிடம் கிடைத்த பல நேரடி பாராட்டுகள் விருதினை விட பெரிய மகிழ்ச்சி.நாடக துறையை நான் தேர்ந்தெடுத்தற்கு நாடகக்கலையை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே காரணம். இந்த நாடக கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய சிறு முயற்சியாக எங்கள் “Three” நாடக குழு அமையும் என்பது எங்களது நம்பிக்கையாக இருக்கிறது. “Three” ஆரம்பித்த ஒரு வருடத்தில் 25 காட்சிகளை நடத்த வேண்டும் என்கிற எங்கள் ஆசையில் முக்கால் பாகம் நிறைவேறிவிட்டது. Three குழு மூலம் தொடர்ந்து நாடகத்துறையில் பல பரிட்சார்த்தமான புதிய முயற்சிகளில் இறங்கவே வேண்டும் , மேலும் நாடகத்துறைக்கென்று பெரும் அங்கீகாரத்தையும் பெற்று தர வேண்டும் என்பதும் எனது ஆசை மற்றும் லட்சியம் என்கிறார் லாவண்யா வேணுகோபால்.
– தனுஜா
ஜெயராமன்

You may also like

Leave a Comment

nineteen − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi