ஊட்டி : பிக்கட்டி பேரூராட்சிக்குட்பட்ட சிவசக்தி நகருக்கு மாசடைந்த குடிநீர் வழங்கப்படுவதாக தண்ணீர் கேனுடன் கவுன்சிலர் உட்பட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே சிவசக்தி நகர் உள்ளது. பிக்கட்டி பேரூராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு சிவசக்தி நகர் அருகேயுள்ள கொடமரா என்ற பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்த கடந்த 40 ஆண்டுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
தடுப்பணையில் இருந்து வழங்கப்படும் இந்த குடிநீர் எவ்வித சுத்திகரிப்பு செய்யப்படாமல், நேரடியாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் மிகவும் மாசடைந்து வருகிறது.
இதனால், இதனை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த குடிநீரை பயன்படுத்தும் அப்பகுதி மக்களுக்கு உடல் உபாதைகளும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பிக்கட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைவர் ஆகியோருக்கு பல முறை மனு அளித்தும், நேரடியாக தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சிவசக்தி நகர் பகுதிக்கு தற்போது வரும் மாசடைந்த குடிநீர் கேனுடன், 9வது வார்டு பகுதி கவுன்சிலர் சிவகாமி மற்றும் பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், தங்களுக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். அதற்காக தாங்கள் 3 ஆயிரம் மீட்டர் பிளாஸ்டிக் பைப்புகளும் வைத்துள்ளதாகவும்,அதனை பயன்படுத்தி சிவசக்தி நகருக்கு சுத்தமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தனர்.