Monday, June 3, 2024
Home » வெட்டிவேரு வாசம்…

வெட்டிவேரு வாசம்…

by Porselvi

எல்லோரும் சிங்கப்பூர் போனால் செழிப்பாக வாழலாம் என்பார்கள். எனக்கு என்னவோ வெளிநாட்டு வேலை இழப்பைத்தான் தந்தது. ஊருக்கு வந்து என்ன செய்யலாம் என யோசித்தபோது வெட்டிவேர் சாகுபடி செய்து பார்க்கலாம் என தோன்றியது. அந்த யோசனைதான் இப்போது என் வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது’’ நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் பாண்டியன். பாண்டியனுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. வெட்டிவேர் பாண்டியன்தான் அந்தப் பெயர். தமிழகத்தில் வெட்டிவேர் சாகுபடி பரவலாக இவர் முக்கிய காரணம். வெட்டிவேரில் அழகு சாதனப்பொருள், மாலை, சோப்பு, பாய், தலையணை என பலவும் செய்து அசத்துகிறார். இவரைப் பார்த்து இப்போது பலரும் வெட்டிவேர் சாகுபடியிலும், அதனை மதிப்புக்கூட்டுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள குருவாடிப்பட்டியில் பாண்டியனின் வெட்டி வேர் பண்ணைக்குச் சென்றோம். சிறிதும் பெரிதுமாக வகை வகையாக வளர்ந்திருக்கின்றன வெட்டிவேர்ப் புற்கள். சில இடங்களில் ஆளே மறையும் அளவில் வளர்ந்து நிற்கின்றன. தொடர்ந்து அதில் பராமரிப்பு, அறுவடை, அறுவடை செய்த வெட்டிவேரை பதப்படுத்துதல் என பல பணிகளில் தீவிரமாக இருந்த பாண்டியனை ஒரு உச்சிப்பொழுதில் சந்தித்தோம். தொடர்ந்து நம்மிடையே உரையாடினார்.

“பி.காம், சிஏ படித்திருக்கிறேன். படித்துவிட்டு வேலைக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டேன். அங்கு 96 – 97 வாக்கில் மேன் பவர் சப்ளை தொழிலில் ஈடுபட்டேன். கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தேன். பின்பு ஊருக்குத் திரும்பினேன். 2004 – 2005ல் கோயம்புத்தூர் சென்று எலெக்ட்ரானிக் மார்க்கெட்டிங் தொழில் செய்தேன். அப்போது ஊரில் அம்மா மட்டும்தான் இருந்தார். எங்களுக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருந்தது. அதைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை. அம்மாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும், என்ன செய்யலாம் என யோசித்தேன். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெட்டிவேர் குறித்து ஒரு கருத்தரங்கில் ஒருமுறை கலந்துகொண்டேன். அப்போது வெட்டிவேரின் நன்மைகள் குறித்து தெரிந்துகொண்டேன். இதை வைத்து ஏதாவது செய்யலாமே என தோன்றியது. அப்போது வெட்டிவேருக்கு மார்க்கெட்டில் அவ்வளவாக மதிப்பில்லை. இதை வைத்து நாம் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும். அதுவும் மற்றவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என தீர்மானமாக நினைத்தேன்.

நமக்குத்தான் நிலம் இருக்கிறதே, வெட்டிவேர் சாகுபடியில் இறங்கலாம் என முடிவெடுத்து விட்டேன். அப்போது எங்களின் பக்கத்து வயல் வரப்புகளில் எல்லைக்காக வெட்டிவேர்ச் செடிகளை வைத்திருப்பார்கள். அந்தச் செடிகளின் வேரை எடுத்துவந்து எனது நிலத்தில் நடவு செய்தேன். செடிகளைப் பராமரித்து வெட்டிவேரை அறுவடை செய்து, வேர்களைப் பாக்கெட்டில் போட்டு 2000ம் ஆண்டில் கோயம்புத்தூரில் நடைபெற்ற கொடிசியா கண்காட்சியில் காட்சிப்படுத்தினேன். அப்போது அங்கு வந்த வயதானவர்கள், வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் போடலாம், குடிநீரில் போட்டு குடிக்கலாம் எனக் கூறியபடி ஆர்வத்துடன் வாங்கிச் சென்றார்கள். இந்தக் கருத்துகளை பிட் நோட்டீசாக அச்சடித்து மறுநாளில் வருவோர், போவோருக்குக் கொடுத்தேன். அவர்கள் படித்துவிட்டு வாங்கி சென்றார்கள். இதனால் 2வது நாளே நான் எடுத்து சென்ற வெட்டிவேரின் விற்பனை பிய்த்துக்கொண்டு போனது. 4வது நாளில் வெட்டிவேர் முழுவதும் காலியாகி விட்டது. இந்த சம்பவம் எனக்கு உத்வேகம் தருவதாக இருந்தது. இதனால் வெட்டிவேர் சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்தினேன். அதில் இருந்து பல மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன். அதுவும் நன்றாக விற்பனை ஆனது. இப்போது வெட்டிவேரில் இருந்து மாலை, மின்விசிறி, மெத்தை, தலையணை, சீட் குஷன், சோப்பு, சென்ட், ஹேண்ட் பேக், கேஷ் பேக், அர்ச்சனைக் கூடை, அலங்காரப் பொருட்கள் என சுமார் 50 பொருட்களைத் தயாரிக்கிறேன்’’ என மகிழ்வுடன் பகிர்ந்துகொண்ட பாண்டியனிடம் வெட்டிவேர் சாகுபடி குறித்து கேட்டோம்.

“எங்களுக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்திலும், குத்தகை அடிப்படையில் 10 ஏக்கர் நிலத்திலும் வெட்டிவேரை சாகுபடி செய்கிறோம். அதுமட்டுமில்லாமல் பை பேக் முறையில் 5 ஏக்கரில் சாகுபடி செய்கிறோம். சில விவசாயிகள் சாகுபடி செய்வார்கள். நான் வெட்டிவேரை வாங்கிக் கொள்வேன். நான் சிம்விருத்தி, தரணி, கேஎஸ்-1 ஆகிய ரகங்களைப் பயிர் செய்கிறேன். வெட்டிவேரை சாகுபடி செய்ய 60 சதவீதம் மணல்பாங்கான நிலம் தேவை. செம்மண் மற்றும் ஆற்றோரப்பகுதிகள் இதற்கு ஏற்றவையாக இருக்கின்றன. அதுபோன்ற நிலத்தில் ஆழமாக உழவு செய்ய வேண்டும். அதாவது ஒன்றரை அடி ஆழத்திற்கு 2 முறை உழ வேண்டும். பின்பு ரோட்டேவேட்டர் கொண்டு உழவு செய்வோம். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் இடுவோம். பின்பு ஒன்றரை அடிக்கு ஒன்று என செடிகளை நடவு செய்வோம். ஒரு வருடம் வளர்ந்த நாற்றுகளில் இருந்து நடவுக்கான செடிகளை எடுத்துக்கொள்வோம். அதனை பாசனம் செய்த ஈரத்தில் 1 அங்குல ஆழத்தில் நடுவோம். மறுநாள் ஒரு பாசனம் அவசியம். 30 நாட்களுக்கு மேல்மண் ஈரம் காயாத அளவுக்கு பராமரிப்பது முக்கியம். அதன்பிறகு வாரம் ஒருமுறை பாசனம் செய்தால் போதும். ஒன்றரை மாதம் கழித்து நிலத்தில் வரும் களைகளை அகற்றுவோம். இவ்வாறு செய்து வர 5 மாதத்தில் செடிகள் ஒன்றரை அடி உயரத்திற்கு உயர்ந்திருக்கும். அப்போது செடியில் உள்ள தாளை வெட்டிவிடுவோம். இதனால் பக்கக் கிளைகள் அதிகரித்து அதிக வேர் விடும்.

6 மாதம் கழித்து 15 நாளுக்கு ஒரு பாசனம் செய்வோம். இதில் வெள்ளை ஈ தாக்குதல் இருக்கும். தண்ணீரை நன்றாக பீய்ச்சி அடித்தாலே அதைக் கட்டுப்படுத்தி விடலாம். இது ஒரே நாளில் முட்டை பொரித்து வயல் முழுக்க பரவிவிடும். ஒரு வாரத்தில் பறக்க ஆரம்பித்து சேதத்தை ஏற்படுத்தும். இந்தப்பூச்சிகள் தாக்கினால் இலைகள் கருப்பு நிறமாகிவிடும். செடியில் ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி பாதிக்கும். அதனால் வேரின் வளர்ச்சி மட்டுப்படும். எனவே இந்தப்பூச்சிகளை கவனமாக விரட்டியடிக்க வேண்டும். நாங்கள் இதில் ரசாயனத்தை பயன்படுத்துவதே கிடையாது. முழுக்க முழுக்க இயற்கைதான். நடவு செய்ததில் இருந்து வேர்களை அறுவடை செய்யலாம். அப்போது செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் ஒன்றரை அடியில் இருந்து 2 அடி ஆழத்தில் தோண்டி எடுப்போம். அறுவடை செய்த செடிகளை மேலே பிடித்து அசைக்கும்போது, அதில் உள்ள மண் கொட்டிவிடும். அதை அலசி வேரை மட்டும் தனியாக வெட்டுவோம். 1 ஏக்கர் நிலத்தில் 30 ஆயிரம் செடிகள் வரை இருக்கும். இதில் 10 சதவீதம் வீணாகும். சுமார் 25 ஆயிரம் செடிகள் பலன்கொடுக்கும். இதில் செடிக்கு தலா 80 கிராம் என 2 டன் உலர்ந்த வேர் கிடைக்கும். இப்போது ஒரு கிலோ வேர் ரூ.200 என விற்கப்படுகிறது. இதன்மூலம் ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வருமானமாக கிடைக்கும். இதில் 1 லட்சம் செலவு போக ரூ.3 லட்சம் சுளையா லாபம் பெறலாம். வெட்டிவேரில் இருந்து ஆயில் எடுத்தும் வருமானம் பார்க்கலாம். 1 டன் வேரில் இருந்து 10 கிலோ ஆயில் கிடைக்கும்.

2 டன் வேரில் 20 கிலோ ஆயில் கிடைக்கும். ஒரு கிலோ வெட்டிவேர் ஆயில் ரூ.30 ஆயிரம் என விற்கப்படுகிறது. 2 டன் ஆயில் மூலம் ரூ.6 லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். இந்த ஆயிலை கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் வாங்கிக் கொள்கின்றன. நான் வெட்டிவேரில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதால் கூடுதல் லாபம் பார்க்க முடிகிறது. 50 பேருக்கு தினசரி வேலை கொடுக்க முடிகிறது. எனது மதிப்புக்கூட்டப்பொருட்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது’’ என கூறி, தனது வெட்டிவேர் தயாரிப்புகளைக் காண்பித்து விடைகொடுத்தார்.
தொடர்புக்கு:
பாண்டியன்: 96779 85574.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi