Monday, May 20, 2024
Home » பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.10,417.22 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.10,417.22 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Arun Kumar

சென்னை: பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.10,417.22 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை நாளை (27.2.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (27.2.2024) தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 8,801 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 1615 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

* முதலமைச்சர் அவர்களால் நாளை திறந்து வைக்கப்படவுள்ள முடிவுற்ற திட்டப் பணிகள்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ், இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி அருகாமையிலும், ஈவினிங் பஜார் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கேயும் 9 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் சுரங்க நடைபாதை:

நீர்வளத்துறை சார்பில் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 111 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாசன கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பில், கொள்ளிடம் ஆற்றில் 414 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நீரொழுங்கி:

நீர்வளத்துறை சார்பில் செயற்பொறியாளர்களின் மற்றும் உதவி பயன்பாட்டிற்காக 4.48 கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஈப்புகள் வழங்குதல்:

வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 210 கோடியே 75 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்கள்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 12 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கோட்டாசியர் குடியிருப்புகள், வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், கிராம நிருவாக அலுவலகம் மற்றும் குடியிருப்பு

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில், 7300 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்கள், 209 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் 67 துணை மின் நிலையங்களில் 1089 எம்.வி.ஏ அளவிற்கு திறன் மேம்படுத்தப்பட்ட 69 மின் மாற்றிகளின் செயல்பாடு மற்றும் நாகப்பட்டினத்தில் 4 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகக் கட்டடம்:

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 7 கோடியே 85 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம், தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்கு திருவுருவச் சிலை, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் திரு.எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் குதிரையில் அமர்ந்து போர்புரிவது போன்று கம்பீர தோற்றத்துடன் கூடிய புதிய சிலை;

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிப்புலத் துறையில் 7 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் மார்பளவு சிலை;

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 14 கோடியே 14 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்:

உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 134 கோடியே 15 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 6.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்;

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் 10 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மதுரை-அரசு இராஜாஜி மருத்துவமனையில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள், 29 கோடி ரூபாய் செலவில் அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சமயநல்லூர், சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையம் மற்றும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்கள்:

என மொத்தம் 8801 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை (27.2.2024) மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.

* முதலமைச்சர் நாளை அடிக்கல் நாட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகள்:

நீர்வளத்துறை சார்பில் அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 6 தென் மாவட்டங்கள் மற்றும் மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 726.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 503 நிரந்தர சீரமைப்பு. வெள்ளத் தணிப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் 115 கோடி ரூபாய் செலவில் 5814.295 கி.மீ. நீளத்திற்கு 1004 சிறப்பு தூர்வாரும் பணிகள்:

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 558 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சென்னை தீவுதிடலில் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புர பொது சதுக்கம், மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்தில் புதிய நடை மேம்பாலம், புதிய பள்ளி வளாகம் கட்டுதல், மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்துதல், விளையாட்டு
மைதானத்தை புனரமைத்தல், மிதி வண்டி மற்றும் நடைபாதை அமைத்தல், கடற்கரை மற்றும் குளங்களை மேம்படுத்துதல் ஆகிய திட்டப் பணிகள்:

உயர்கல்வித் துறை சார்பில் 86.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கல்விசார் கட்டடங்கள்:

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா;

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சென்னை, சைதாப்பேட்டை நாய் வளர்ப்பு பிரிவில் 5 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் விரிவாக்கக் கட்டடம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கட்டப்படவுள்ள 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் 40 எண்ணிக்கையிலான மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் மற்றும் 27.50 கோடி ரூபாய் மதிப்பிலான 6 வட்ட செயல்முறை கிடங்குகள்:

என மொத்தம் 1615 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை (27.2.2024) அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர். துறைச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்

 

You may also like

Leave a Comment

5 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi