Tuesday, May 14, 2024
Home » யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50 ஆக குறைப்பு அடுக்குமாடி குடியிருப்புக்கு மின் கட்டண சலுகை: நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் கட்டணம் ரத்து; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50 ஆக குறைப்பு அடுக்குமாடி குடியிருப்புக்கு மின் கட்டண சலுகை: நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் கட்டணம் ரத்து; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: ‘‘அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது வசதிகளுக்கான மின் இணைப்பு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும். தென்சென்னை பகுதியில் உள்ள நாவலூர் சாலையில் இன்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வகுத்துத் தரும் திட்டங்கள் சீரிய வகையிலும், பொதுமக்கள் போற்றும் வகையிலும் அவர்களை சென்றடைந்து வருகின்றன. குறிப்பாக, ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் உங்கள் அனைவரின் பங்களிப்பால் திறம்பட செயலாக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன் 2வது தவணை தொகையையும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் புதுமைப் பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம், முதல்வரின் முகவரி, நான் முதல்வன் திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று, மக்களை சென்றடைந்துள்ளது.

குறிப்பாக சாலை பணிகள், குடிநீர் திட்டங்கள், பாலங்கள், சமூகநல திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி தருவது தான் நமது இலக்காக இருக்க வேண்டும். ஒருசில பணிகளில் தொய்வு இருக்கிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திட்டங்கள் உத்தேச நாட்களுக்குள் முடிவடையாதபோது திட்டத்திற்கான செலவு அதிகரிப்பதோடு, நிறைவேறாத பணிகளினால் அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். எனவே, இதை தவிர்க்க வேண்டும். நலத்திட்டங்களும் விளிம்பு நிலை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தவித குறைபாடுகளுமின்றி முழுமையாக குறிப்பிட்ட காலத்திற்குள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.

இந்த அரசு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. எனவே, அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக இலக்கு மக்களின் குடும்பங்களை மேம்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை கோரும் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் பயன்பெறுவதை உறுதி செய்வது, முதல் தலைமுறை பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க கடனுதவி பெற வழிவகை செய்வது போன்ற பலவழிகளிலும் ஏழை, எளிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் வாழ்வில் வளம்பெற நீங்கள் உதவ வேண்டும். இந்த தருணத்தில் நான் இரண்டு முக்கிய அறிவிப்புகளை இந்த கூட்டத்தின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்.

* முதலாவதாக, தென்சென்னை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்த அரசு பதவி ஏற்றவுடன், ராஜிவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் உள்ள பெருங்குடி கட்டண சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர். தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நாளை (இன்று) முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும்.

* இரண்டாவதாக, சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இதனை பரிசீலித்து, 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொது பயன்பாட்டிற்கான புதிய சலுகை கட்டண முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். இதன்கீழ், பொது பயன்பாட்டிற்கு செலுத்த வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாயில் இருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர், சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* தினசரி காலை பத்திரிகைகளை படிக்க வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘மாவட்ட ஆட்சி தலைவர்கள், காலை பத்திரிகைகளை தினமும் படிக்க வேண்டும். ஊடகங்களை தொடர்ந்து நீங்கள் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால்தான், என்ன நாட்டில் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்னை என்பதை நீங்கள் உடனடியாக புரிந்துகொள்ள முடியும். அப்படி உங்களது மாவட்டங்களை பற்றி ஏதாவது செய்திகள் வந்தால், அந்த செய்திகளுக்கு உடனே பரிகாரம் காண வேண்டும். பரிகாரம் காண்பது மட்டுமல்ல, அது எந்தவகையில் பரிகாரம் காணப்பட்டிருக்கிறது என்பதை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். அதை காலை முதல் கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi