சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஒன்றிய அரசு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் கடந்த 2019ம் ஆண்டு நவ.18ம் தேதி தமிழ்நாடு ஆளுநராக அப்போது இருந்த பன்வாரிலால் புரோகித்தின் தனி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் அவரது செயலாளராகவும் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நீடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஒன்றிய அரசு பணிக்காக சென்றுள்ளார். அதன்படி, ஒன்றிய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை இணைச்செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கபட்டுள்ளார். ஏற்கனவே, சமீபத்தில் தமிழகத்தில் இருந்து ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய தொலை தொடர்பு துறை செயலாளராக நீரஜ் மிட்டல் ஆகியோர் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.