Saturday, June 1, 2024
Home » மஞ்சள்… சின்ன வெங்காயம்… பச்சை மிளகாய்… தரமான லாபம் தரும் 3 அடுக்கு விவசாயம்!

மஞ்சள்… சின்ன வெங்காயம்… பச்சை மிளகாய்… தரமான லாபம் தரும் 3 அடுக்கு விவசாயம்!

by Porselvi

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள திங்களூர், பாப்பம்பாளையம் பகுதிகளில் நெசவுதான் பிரதான தொழில். நாள் முழுக்க ஓய்வில்லாமல் தறி ஓடிக்கொண்டிருக்கும். வேட்டி, துண்டு உள்ளிட்ட ஆடைகள் நெய்யப்பட்டு பல பகுதிகளுக்கு பார்சல் ஆகும். இப்படி ஒரு தொழிலைச் செய்துகொண்டிருந்தவர்தான் பாப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ். பவர்லூம் மூலம் சில ஆடைகளை நெய்து தொழில் செய்து வந்த இவர் விவசாயத்தில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். செய்து வந்த தொழிலை கைவிட்டு விட்டு, சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி காட்டுப்பகுதிக்கு குடிபெயர்ந்து முழு நேர விவசாயியாக மாறி இருக்கிறார். வாழை, மஞ்சள், பீன்ஸ், தக்காளி, சின்ன வெங்காயம், ஒட்டுக்கத்திரி என பல பயிர்களை சாகுபடி செய்து லட்சங்களில் லாபம் பார்க்கிறார்.

முதுமலை புலிகள் சரணாலயத்தைக் கடந்து, தாளவாடி, தொட்டகஜனூர் உள்ளிட்ட பசுமையான கிராமங்களைப் பார்த்துக்கொண்டே சென்றால் கெட்டவாடி என்ற கிராமத்தை அடையலாம். இந்த கிராமத்தில் தனது 15 ஏக்கர் நிலத்தில் பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொரு பயிராக சாகுபடி செய்கிறார் தங்கராஜ். இதில் ஒரு ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டு இருக்கிறார். அதில் ஊடுபயிராக சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சாகுபடி செய்திருக்கிறார். இவர் சாகுபடி செய்து, அறுவடை செய்த நேரம் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்திருக்கிறது. இதனால் சின்ன வெங்காயத்திலேயே சிறப்பான வருமானம் பார்த்திருக்கிறார். சில்லென்ற ஒரு காலைப்பொழுதில் தங்கராஜை சந்தித்தோம்.

“எங்கள் குடும்பத்திற்கே பாரம்பரியத் தொழில் நெசவுதான். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. என் மனைவியின் ஊர் கோபிசெட்டிப்பாளையம். அவரது அப்பா சுப்பிரமணியன் நல்ல விவசாயி. தாளவாடி மலைப்பகுதியில் விவசாயம் செய்வார். இந்த பகுதிக்கு வந்து செல்லும்போது விவசாய ஆசை தொற்றிக்கொண்டது. 2017- 2018 காலகட்டம். பவர் லூமுக்கு மதிப்பு குறைந்து ஆட்டோ லூம் அறிமுகம் ஆனது. இது மிக வேகமாக ஆடை நெய்யும். நாம் இதில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. லாபமோ, நட்டமோ இனி விவசாயம்தான் நமக்கு வாழ்க்கை என துணிந்து இறங்கி விட்டேன். மனைவியுடன் பேசி முதலில் 8 ஏக்கர் நிலம் வாங்கினேன். நல்ல அற்புதமான வண்டல் நிறைந்த மண் இது. சீதோஷ்ண நிலையும் சிறப்பாக இருக்கும். வாழை, பீன்ஸ், மஞ்சள் என பல பயிர்களைப் பயிரிட்டேன். நம்பிக்கை பொய்க்கவில்லை. அனைத்து பயிர்களும் லாபம் தரத் தொடங்கின. அந்த நம்பிக்கையில் மேலும் 6 ஏக்கர் வாங்கினேன். இப்போது 14 ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். இதை விட எந்த தொழில் லாபம் தரும்? என்ற கேள்விதான் எழுகிறது’’ என நெசவில் இருந்து விவசாயத்திற்கு கதையுடன் பேச ஆரம்பித்த தங்கராஜிடம் மஞ்சள், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சாகுபடி குறித்து கேட்டோம்.

“ஒரு ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்திருக்கிறேன். அதில் ஊடுபயிராக சின்ன வெங்காயமும், பச்சை மிளகாயும் பயிரிட்டு இருக்கிறேன். ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிலத்தை 5 கலப்பை கொண்டு, நன்றாக 2 முறை உழவு செய்வோம். பின்பு அடியுரமாக 50 கிலோ பயோ கம்போஸ்ட், 100 கிலோ டிஏபி, 100 கிலோ சூப்பர் ஆகியவற்றை கலந்து இடுவோம். தொழுவுரம் போட்டால் மஞ்சளில் கொன்னைப்புழு தாக்குதல் இருக்கும். கிழங்கு அழுகல் நோய் வரும். இதனால் தொழுவுரம் போட மாட்டோம். உரமிட்ட பின்பு ரொட்டேவேட்டர் கொண்டு உழுது நிலத்தில் கட்டியில்லாமல் பொலபொலப்பாக மாற்றுவோம். அதன்பிறகு 1 அடி இடைவெளியில் மூன்றரை அடி அகலம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைப்போம். அந்த மேட்டுப்பாத்தியில் இரண்டு வரிசையாக மஞ்சள் கிழங்குகளை ஊன்றுவோம். ஒவ்வொரு வரிசைக்கும் 2 அடி இடைவெளி இருப்பது போல் பார்த்துக்கொள்வோம். விதைக்கு விதை முக்கால் அடி இடைவெளி இருக்க வேண்டும். இதற்கு முன்பு சாகுபடி செய்து அறுவடை செய்த மஞ்சளில் இருந்து தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து விதைப்போம். ஒரு ஏக்கருக்கு 1 டன் விதைக்கிழங்கு தேவைப்படும். விதைக்கிழங்குகளை சூடோமோனாஸ், விரிடி, பேசியாலஸ் ஆகியவற்றை கலந்து, அதில் விதை நேர்த்தி செய்து சணல் சாக்கில் போட்டு கட்டி வைப்போம். காற்றோட்டம் இருக்க வேண்டும்
என்பதால் சணல் சாக்கில் வைக்கிறோம். விதை மஞ்சளை மர நிழலில் கொட்டி ஓலை போட்டு மூடியும் வைத்து பாதுகாக்கலாம்.

மஞ்சள் கிழங்கு ஊன்றிய பிறகு 4 நாள் கழித்து பாசனம் செய்து சின்ன வெங்காயம் விதைப்போம். சொட்டுநீர்ப்பாசனம்தான். மேட்டுப்பாத்தியில் முக்கால் அடி இடைவெளியில் 3 வரிசையாக வெங்காயத்தை ஊன்றுவோம். ஏக்கருக்கு 300 கிலோ விதை தேவைப்பட்டது. திருச்சி துறையூரில் இருந்து விதை வெங்காயம் வாங்கி வந்தோம். துறையூர் பகுதியில் கிடைக்கும் சின்ன வெங்காயம், இந்தப்பகுதிக்கு நன்றாக வருகிறது. விதை ஊன்றிய மறுநாளில் களைக்கொல்லியை டேங்குக்கு 10 லிட்டர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிப்போம். ஒரு ஏக்கருக்கு 15 டேங்க் தேவைப்படும். அதாவது 150 லிட்டர் களைக்கொல்லி தேவைப்படும். விதைத்த 4வது நாளில் வெங்காயம் முளைத்துவிடும். 15-20 நாளில் மிளகாய்ச்செடிகளை நடவு செய்வோம். இந்தச்செடிகளை அருகில் உள்ள நர்சரியில் வாங்குவோம். 2 பாத்திகள் இடைவெளி விட்டு, அடுத்த பாத்தியில் மிளகாய்ச் செடிகளை நடுவோம். செடிக்கு செடி 4 அடி இடைவெளி கொடுப்போம். பச்சை மிளகாய்ச் செடிகளை அதிகமாக பயிரிட்டால் மஞ்சள் செடிக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் மிளகாயைக் குறைவாகவே பயிரிடுவோம். பச்சை மிளகாயைப் பயிரிட்ட பிறகு 6 நாளுக்கு ஒரு முறை பாசனம் செய்வோம். வெங்காயம் அறுவடை செய்யும் வரை குறைவாகவே பாசனம் செய்ய வேண்டும். வெங்காயத்தை அறுவடை செய்த பிறகு பாசனத்தைக் கூட்டலாம். வெங்காயம் விதைத்த 20வது நாளில் சத்து டானிக், பூஞ்சானக்கொல்லி ஆகியவற்றைக் கலந்து தெளிப்போம். 30-40வது நாளில் 20: 20: 20 பாக்டம்பாசை ஏக்கருக்கு 75 கிலோ என்ற அளவில் கலந்து இடுவோம். அதன்பிறகு பாசனம் செய்வோம். வெங்காயம் பயிரிட்ட 30 மற்றும் 45வது நாளில் களைக்கொத்து கொண்டு களையெடுப்போம்.

60வது நாளில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு வந்துவிடும். நான் அறுவடை செய்தபோது சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை. கிலோ ரூ.102 என கிடைத்தது. 3 டன் மகசூல் கிடைத்ததால் ரூ.3 லட்சத்து 6 ஆயிரம் வருமானமாக கிடைத்தது. சின்ன வெங்காயத்திற்கு வழக்கமாக ரூ.20 முதல் 40 வரை விலை கிடைக்கும். சில சமயங்களில் ரூ.7 கூட கிடைக்கும். இப்போது மிக நல்ல விலை கிடைத்தது. இது ஊடுபயிர் என்பதால் ரூ.30 விலை கிடைத்தாலே நல்ல லாபம்தான். ரூ.102 என விற்றதால் அமோக லாபம் கிடைத்திருக்கிறது.வெங்காயத்தை அறுவடை செய்த பிறகு பாசனம் செய்து களைக்கொத்து மூலம் களையெடுக்க வேண்டும். நிலத்தை நன்றாக சுத்தம் செய்து மோனாகுரோட்டாபாஸ், பூஞ்சானக்கொல்லி, சத்து டானிக் ஆகியவற்றை கலந்து தெளிப்போம். மஞ்சளில் குருத்துப்புழு தாக்குதல் இருக்கும். இதனை மோனோகுரோட்டபாஸ் கட்டுப்படுத்தும். ஒரு வாரம் கழித்து தண்ணீர் பாய்ச்சி டிஏபி 2 மூட்டை, 20: 20: 20 காம்ப்ளக்ஸ் 2 மூட்டை, பொட்டாஷ் 1 மூட்டை நுண்ணூட்டக்கலவை 15 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 100 கிலோ என கலந்து மேட்டுப்பாத்தியில் வீசுவோம். இந்தக்கலவையை முதல் நாளே கலந்து வைத்திருக்க வேண்டும். உரமிட்ட பிறகு ஒரு பாசனம் செய்வோம். 3 மாதத்தில் மஞ்சள் செழிப்பாக வளர்ந்து நிற்கும். பச்சை மிளகாய் நடவு செய்த 90வது நாளில் இருந்து அறுவடை எடுக்கலாம். ஏக்கருக்கு 2 டன் மகசூல் கிடைத்திருக்கிறது. கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை கிடைக்கிறது. சராசரியாக ரூ.15 என்று வைத்தால் கூட ரூ.30 ஆயிரம் வருமானமாகக் கிடைத்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் சூடோமோனாஸ் 3 லிட்டர், விரிடி 3 லிட்டர் என கலந்து சொட்டுநீர் மூலம் கொடுத்தோம். இதேபோல நவம்பர் (தற்போது) மாதத்தில் கொடுப்போம். அதன்பிறகு 15 நாள் கழித்து பொட்டாஷ் 25 கிலோ, சல்பேட் 15 கிலோ கலந்து இடுவோம். இதேபோல 15 நாள் இடைவெளியில் 3 முறை கொடுப்போம்.

பிப்ரவரி முதல் வாரத்தில் மஞ்சள் தாள் பழுத்து நிற்கும். இதுதான் அறுவடைக்கான தருணம். அப்போது தாள்களை அறுத்து வயலிலேயே வரிசையாக வைப்போம். 20 நாள் கழித்து தாள்களை அப்புறப்படுத்தி விட்டு, தண்ணீர் விட்டு, மஞ்சளை அறுவடை செய்வோம். இந்த நிலத்தின் தன்மை, எங்களின் பராமரிப்பு காரணமாக பச்சை மஞ்சளாக 20 முதல் 25 டன் வரை மகசூல் கிடைக்கும். அதை வேக வைத்து, உலர வைத்தால் நான்கரை டன் கிடைக்கும். மற்ற இடங்களில் பொதுவாக ஏக்கருக்கு சுமார் 3 டன் தான் வேக வைத்து, உலர வைத்த மஞ்சளை மகசூலாக பெற முடியும். வேக வைத்து உலர வைத்த மஞ்சளுக்கு நல்ல விலை. ஒரு கிலோ மஞ்சள் ரூ.13 என விற்பனை ஆகும். ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.13 ஆயிரம் வரை விலை கிடைக்கும். சராசரியாக ரூ.10 விலையாக கிடைத்தாலும் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் கிடைக்கும். ஒரு டன் மஞ்சளுக்கு ரூ.1 லட்சம் கிடைக்கும். நான்கரை டன் மஞ்சளுக்கு ரூ.4.5 லட்சம் வருமானமாகக் கிடைக்கும்.

மஞ்சள் சாகுபடியில் நிலம் தயார் செய்தல், விதைப்பு, களை, உரம், பூச்சி மருந்து, அறுவடை, வெட்டி வேக வைத்தல் என ரூ.2 லட்சம் செலவாகும். மீதி ரூ.2.5 லட்சம் லாபமாக கிடைக்கும். சின்ன வெங்காயத்தில் ரூ.3 லட்சம் வருமானம் கிடைத்திருக்கிறது. இதில் செலவு அதிகப்படியாக ரூ.1 லட்சம் என வைத்துக்கொண்டாலும் ரூ.2 லட்சம் லாபம் கிடைத்திருக்கிறது. பச்சை மிளகாயில் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைத்திருக்கிறது. இதில் செடி, நடவு, அறுவடை என ரூ.15 ஆயிரம் செலவு ஆகும். அதுபோக ரூ.15 ஆயிரம் லாபம் கிடைத்திருக்கிறது. ஆகமொத்தம் 4.65 லட்சம் கிடைப்பது உறுதி’’ என மகிழ்ச்சியுடன் கூறி சிரிக்கிறார்.
தொடர்புக்கு:
தங்கராஜ் – 77081 86113.

கூடுதல் லாபம்
சின்ன வெங்காயத்தைப் பொறுத்தவரை ரூ.7 என கூட விலை குறைவாக போகும் காலம் உண்டு. சராசரியாக ரூ.20 முதல் 40 வரை விலை கிடைக்கும். இந்த முறை தங்கராஜூக்கு ரூ.102 என விலை கிடைத்திருக்கிறது. இவர் செய்வது ஊடுபயிர்தான். இதில் ரூ.30 என விலை கிடைத்தாலே நல்ல வருமானம்தான். இப்போது கிடைத்திருப்பது உச்சபட்ச லாபம்.

விதை நேர்த்தி
மஞ்சள் விதைக்கிழங்குகளை விதை நேர்த்தி செய்வது அவசியம். இதுகுறித்து தங்கராஜ் கூறுகையில், ` கடந்த பட்டத்தில் அறுவடை செய்ததில் தரமான விதைக்கிழங்குகளைத் தேர்ந்தெடுத்து சூடோமோனாஸ், விரிடி, பேசியாலஸ் ஆகியவற்றைக் கலந்து, அதில் விதை நேர்த்தி செய்து சணல் சாக்கில் போட்டு கட்டி வைப்போம். காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதால் சணல் சாக்கில் வைக்கிறோம். விதை மஞ்சளை மர நிழலில் கொட்டி ஓலை போட்டு மூடியும் வைத்து பாதுகாக்கலாம்’.

You may also like

Leave a Comment

eighteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi