Sunday, June 16, 2024
Home » நம்பிக்கையுடன் செயல்படு, உச்சம் தொடு!

நம்பிக்கையுடன் செயல்படு, உச்சம் தொடு!

by Porselvi

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார்.அதற்கு அவர் எனது தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் என்றார்.எவ்வளவு ரூபாய் நஷ்டம்? என்றார்,50 கோடி ரூபாய் என்றார்.“அப்படியா, நான் யார் தெரியுமா?” இந்த ஊரின் பிரபல செல்வந்தர் என்றார் அந்த பெரிய மனிதர்.அசந்து போனார் நஷ்டம் அடைந்த அந்த நிறுவனர். சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா? என்று கேட்டார். அதற்கு உடனே முகமலர்ச்சியுடன் ஆமாம் எல்லாம் சரியாகி விடும் என்றார் நிறுவனத்தின் தலைவர்.

பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி இதில் 500 கோடிக்கு செக் நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒரு வருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் கொடுத்து விட்டு சென்றார் அந்த பெரிய மனிதர்.பின் நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார்.பின் தனது உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களையும் நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது. ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிவு செய்து உள்ளேன். நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.பின்னர் ஒவ்வொரு பணியும் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப்பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு,மூச்சு, செயல் சிந்தனை, தூக்கம் அனைத்தும் அவருடைய தொழிலைப் பற்றியே இருந்தது.

மிக சரியாக ஒரு வருடம் கழிந்தது.கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியாக 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம்.அடுத்த நாள் காலை அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக்கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார்.காலை நேரம் என்பதால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரைக் கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் நடுவே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார். அந்த செல்வந்தரை காணவில்லை.
இவர் சென்று அந்த பெண்மணியிடம் எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்? என்றார். அதற்கு அந்த பெண்மணி பதற்றத்துடன் உங்களுக்கும் அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? என்றார்.

இவர் இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் என்றார். அந்த பெண்மணி இல்லை அய்யா அவர் மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையெழுத்திட்டு கொடுத்து விடுவார் என்றார். ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு ஒன்றுமே பேசமுடியவில்லை. அப்போது தான் அவருக்கு புரிந்தது, நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை புரிந்து கொண்டார். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும். இதற்கு உதாரணமாய் உலகில் உச்சம் தொட்ட சாதனைப் பெண் நேஹா நர்கடேவை சொல்லலாம்.நேஹா நர்கடே என்ற இளம்பெண் தற்போது உலகின் வெற்றிகரமான முன்னணி தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின், புனேவை சேர்ந்த இவர், சாவித்திரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். மேலும், தனது மேற் படிப்பை அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா டெக்கில் முதுகலை தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் ஆரக்கிள் மற்றும் லிங்க்ட்இன் போன்ற நிறுவனங்களில் அவருக்கு வேலை கிடைத்தது. தன் திறமையினால் சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேலையைப் பெற்றார் நேஹா. 2014-ஆம் ஆண்டில், அவர் தனது இரண்டு லிங்க்ட்இன் சகாக்களுடன் ‘கான்ஃப்ளூயன்ட்’ (Confluent) என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.இந்நிறுவனம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

கன்ஃப்ளூயன்ட் நிறுவனம் என்பது முழு அளவிலான தரவு ஸ்ட்ரீமிங் தளமாகும்.இது தொடர்ச்சியான, நிகழ்நேர ஸ்ட்ரீம்களாக தரவை எளிதாக அணுகவும், சேமிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் இந்த நிறுவனம் உதவுகிறது. இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு என்னும் ஒரு துறை ராட்சசனாக வளர்ந்து வருவதற்கு இந்த தரவு ஸ்ட்ரீமிங், டேட்டா மைனிங் போன்ற துறைகள் பெரிய அளவில் நங்கூரம் பாய்ச்சியுள்ளன.

நேஹா நர்கடே, தற்போது 2021ல் நிறுவிய ‘மோசடி கண்டறிதல்’ (fraud detection) நிறுவனமான Oscilar-ஐ நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ரூ.160 கோடி முதலிட்டுடன் இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்துவருகிறார்.கான்ஃப்ளூயெண்ட் நிறுவனம் 2021ம் ஆண்டில் பங்குச்சந்தையில் பொதுமக்களுக்கான வெளியீட்டிற்கு வந்தது. இதன் மதிப்பு 9.1 பில்லியன் டாலர்கள் (ரூ.75,000 கோடிக்கு மேல்) என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிறுவனத்தில் நேஹாவுக்கு 6 விழுக்காட்டிற்கும் மேல் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தன் துணிச்சல், உறுதியான நம்பிக்கை மற்றும் அறிவுத்திறன் மூலம் அமெரிக்காவில் தொழில்முனைவோர் உலகத்தில் வெற்றிகரமாகத் தனது கால் பதித்து கலக்கி வருகிறார் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர் நேஹா நர்கடே. அமெரிக்காவின் பணக்காரப் பெண்களின் பட்டியலில் இடம்பெற்றதுடன்,சுயமாக தொழில் முனைவோராக உருவாக்கிய இளம் பெண் தொழிலதிபராகவும் தனக்கென ஓர் அங்கீகாரத்தைப்
பெற்றுள்ளார்.

38 வயதான நேஹா நர்கடே, தற்போது 520 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமெரிக்காவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 57-வது இடத்தில் உள்ளார்.தன் வெற்றிக்குக் காரணம் தன் தந்தையே என்று கூறும் நேஹா, சிஎன்பிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியது, என்னவென்றால், தடைகளைக் கடந்து உச்சம் தொட்ட பெண்களின் வெற்றிக்கதைகள் அடங்கிய புத்தகங்களை என் தந்தை எனக்கு அளித்ததுதான் எனது வெற்றிக்கு அடித்தளம் என்கிறார்.இந்திராகாந்தி, இந்திரா நூயி,கிரண்பேடி ஆகிய வெற்றிப் பெண்மணிகள் பற்றிய புத்தகங்களை தான் படித்ததாக நேஹா நர்கடே கூறியுள்ளார். இந்த வெற்றிக் கதைகளைப் படித்ததன் மூலம் தான் ஒரு சக்தியைப் பெற்றதாகவும், ஊக்கம் அடைந்து உச்சம் தொட்டதாகவும் நேஹா தெரிவிக்கின்றார்.இவரைப் போலவே நீங்களும், அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள், உச்சபட்ச வெற்றியை பெறுங்கள்.

You may also like

Leave a Comment

3 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi