சோட்டா உதேபூர்: குஜராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களுக்கான செயல் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து நடப்பாண்டிற்கான சில அரசு திட்டங்களுக்கு ரூ.3.75 கோடி மானியம் கோரி திட்ட நிர்வாக அலுவலகத்திற்கு ஆவணங்கள் வந்துள்ளன. இதில் சந்தேகமடைந்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், நீர்பாசன துறைக்கு சோட்டா உதேபூரில் செயற்பொறியாளர் அலுவலகமே இல்லை என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
அதைவிட அதிர்ச்சிகரமாக, கடந்த 2021-22 மற்றம் 2022-23 நிதியாண்டுகளில் போலி அரசு அலுவலகத்திற்கு அரசு மானியமாக முறையே ரூ.1.97 கோடியும், ரூ.2.18 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மொத்தமும் டிஜிட்டல் முறையில் இ-பேமெண்ட்டாக தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலி அரசு அலுவலகத்தை நடத்தி வந்த சந்தீப் ராஜ்புத் மற்றும் அவரது கூட்டாளி அரசு கான்ட்ராக்டர் அபு பக்கர் சையத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தீப் ராஜ்புத் தன்னை ஒரு அரசு அதிகாரி எனக் கூறி 2021ல் இந்த போலி அரசு அலுவலகத்தை அமைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.