Thursday, May 2, 2024
Home » இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Lavanya

கோச்செங்கட் சோழன் குருபூஜை 9.3.2024 – சனி

சிவநெறிச் செல்வர்களாக விளங்குகின்ற 63 நாயன்மார்களின் வரலாற்றை நாம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது ஒரு சிறப்பு தெரியும். 63 நாயன்மார்களில் ஆண்டிகளும் உண்டு, அரசர்களும் உண்டு. ஒருவர் சிவனை சிந்தையில் நிறுத்தி, சிவனடியார்களை, சிவனைப் போலவே எண்ணி பூஜித்து, உலகத்தை சிவமாக கருதி, உலக உயிர்களுக்குத் தொண்டு செய்யும் உயர்வுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிறப்பினாலோ, பெறும் கல்வியினாலோ, செல்வத்தினாலோ, பட்டம், பதவிகளாலோ, உலகில் வருகின்ற வேறுபாடுகளைக் கடந்து நாயன்மார்கள் என்கின்ற உன்னத நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள். அப்படி உயர்ந்தவர்தான் கோச்செங்கட் சோழ நாயனார். கோச்செங்கட் சோழ மன்னனின் பிறப்பின் பின்னணியில் ஒரு அற்புதக் கதை உண்டு.

திருவானைக்கோயில் என்கின்ற திருத்தலத்தில் நாவல் மரத்தடியில் உள்ள சிவலிங்கத் திருமேனியை வெள்ளை யானை ஒன்று தினமும் தன்னுடைய துதிக்கையால், நன்னீரைக் கொண்டு வந்து, திருமஞ்சனம் செய்து மலர் தூவி, வழிபாடு செய்தது. அப்படிச் செய்ததால் அந்த தலத்திற்கு “திரு ஆனைக்கா’’ என்ற பெயர் வந்தது. அதே நேரத்தில், அந்த மரத்தின் மேலிருந்து, எந்த தூசுகளும் லிங்கத்தின் மீது விழாமல் இருக்க, சிலந்தி ஒன்று வாய் எச்சிலை நூலாக்கி, வலை கட்டி பந்தல் போட்டது.

அடுத்த நாள் யானை, இந்தப் பந்தலைப் பார்த்து, “யார் இப்படிச் செய்தது?” என்று கோபித்து, அந்தப் பந்தலை பிரித்துப் போட்டது. சிலந்தி பந்தலை போடுவதும் யானை அதைப் பிரித்து தள்ளுவதுமாக சில காலம் நடக்க, கோபம் கொண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது.

வலி பொறுக்க முடியாத யானை, நிலத்தில் விழுந்து இறந்தது. துதிக்கையை தரையில் அறைந்ததால் சிலந்தியும் இறந்தது. அந்த யானைக்கு உடனடியாக வீடு பேறு கிடைத்தது. ஆனால், அந்த சிலந்தி மறுபிறப்பாக சிவத் தொண்டு புரிய சோழ குலத்தில் மன்னனாக உதித்தது. சோழ மன்னன் சுபதேவனின் பட்டத்தரசி கமலவதி சிறந்த சிவபக்தை.

அவளுக்கு ஜோதிடர்கள் சொன்னார்கள். “குழந்தை பிறக்கும் வேளையை ஒரு நாழிகை தள்ளிப் போட்டால் குழந்தை மூன்று உலகத்தையும் ஆள்வான்.” உடனே அரசி, ‘‘அப்படியானால், என்னுடைய கருவில் இருக்கும் குழந்தை வெளிவராத வண்ணம், என்னை தலைகீழாக ஒரு நாழிகை நேரம் தொங்கவிடுங்கள்’’ என்று சொல்ல அப்படியே செய்தனர்.

சொன்ன வண்ணமே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ரத்தம் முழுக்க பரவி கண்கள் சிவந்து பிறந்த அந்த குழந்தைக்கு “செங்கண் சோழன்’’ என்ற பெயரும் கிடைத்தது. அவர் சோழதேசத்தை விரிவுபடுத்தி சாம்ராஜ்ய சக்கர வர்த்தியானார். சைவ நெறி சிறக்க பல
சிவாலயங்களை எழுப்பினார்.

ஏற்கனவே சிலந்தியாக, தான் இருந்தபோது யானை வந்து பந்தலைப் பிரித்ததால், (பூர்வ வாசனையால்), யானை ஏற முடியாதபடிக்கு படிகளை அமைத்து மாடக்கோயிலாக எழுப்பினார். சைவக் கோயில்கள் மட்டு மல்லாது வைணவக் கோயில்களையும் புதுப்பித்தார். சைவ சமயத்தை சார்ந்தவரானாலும், பிற சமயத்தையும் மதிக்கும் பெரும் குணத்துடன் திகழ்ந்தார். பலகாலம் சிவத்தொண்டு புரிந்து, அம்பலவாணன் திருவடி நிழலை அடைந்தார். சிவனடியாரான இவர், திருமாலுக்கும் தொண்டு செய்தார். இவர் திருநறையூர் (நாச்சியார் கோயில்) கோயிலில் செய்த திருப்பணிகளை, திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் பதிவு செய்கிறார்.

“அம்பரமும், பெருநிலனும், திசைகள் எட்டும்,
அலைகடலும், குலவரையும், உண்டகண்டான்
கொம்பு அமரும் வட்மரத்தின் இலைமேல்
பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்?
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசமுண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்தகோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’’.

இன்றைக்கு சதய நட்சத்திரம். சதயம் அற்புதமான நட்சத்திரம். பெரும்பாலும் சோழ மகாராஜாக்களின் நட்சத்திரம் சதய நட்சத்திரமாக அமைந்திருப்பது ஒரு சிறப்பு. சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாவீரர்களாகவும், உலகை ஆளும் சாம்ராஜ்ய தலைவர்களாகவும் விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட கோச்செங்கனாரின் குருபூஜை தினம் (மாசி சதயம்) இன்று.

அமாவாசை 10.3.2024 – ஞாயிறு

இன்று மாசி மாத அமாவாசை. முன்னோர்களை நினைத்து பூஜை செய்ய வேண்டிய நாள். சனிக்குரிய கும்ப ராசியில் சூரியனும் சனியும் (அப்பாவும் பிள்ளையும் இருக்க) அம்மாவுக்குரிய சந்திரன் இணையும் நாள் அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது ஒன்றையொன்று சந்தித்துக் கொள்கிறது. அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலை முறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். எனவே, பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து நற்பலன் பெற வேண்டும்.

ராமேஸ்வரம் காலை இந்திர விமானம், இரவு தங்க ரிஷபம்
10.3.2024 – ஞாயிறு

நாட்டிலுள்ள முக்கிய சிவதலங்களில், ராமேஸ்வரம் கோயிலும் ஒன்று. அதனால், இக்கோயிலில் மாசி மாத மகாசிவராத்திரி விழா, வெகு விமர்சையாக நடைபெறும். ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா, 12 நாட்கள் விழாவாக நடத்தப்படுவது வழக்கம். இதில் தினந்தோறும் இரவில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில்
எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இன்று காலை இந்திர விமானம், இரவு தங்க ரிஷபத்தில் சுவாமியும் அம்பாளும் வீதிவலம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பம் 7 நாட்கள்
11.3.2024 – திங்கள்

பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பம் 7 நாட்கள் நடைபெறும். இங்குள்ள தீர்த்தத்திற்கு “கோவிந்த கைவீரனி சரஸ்’’ (அல்லிக் கேணி தீர்த்தம்) என்று பெயர். இத்தீர்த்தத்தில் இந்திர, சோம, அக்கினி, மீன, விஷ்ணு என ஐந்து தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாம். கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், மீன்கள் இதில் வசிப்பதில்லை. திருமஞ்சனத்திற்கு இதுவே பயன்படுகிறது. இந்தத் திருக்குளத்தில் ஒருமுறை நீராடினால், கங்கையில் அறுபதாயிரம் ஆண்டுகள் நீராடிய பலன் கிடைக்குமாம். பிரம்மஹத்தி தோஷமும் நீங்குமாம். புஷ்கரணியில்தான் பார்த்தசாரதி தெப்போற்சவம் ஏழு நாட்கள் நடைபெறுகிறது. சிறப்பான திருவிழா.

காரடையான் நோன்பு 14.3.2024 – வியாழன்

இன்று காரடையான் நோன்பு விரதம். பூஜை செய்து சரடு கட்டிக் கொள்ள உகந்த நேரம், காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை. இனி இந்த விரதம் குறித்து சுருக்கமாகக் காண்போம். எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும், பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும். சுமங்கலி பெண்கள் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மகத்தான விரத நாள்தான் இது. மாசி மாதத்தின் இறுதி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது. இது சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. எந்தப் பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன், பூரண
ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் காரடையான் நோன்பு விரதத்தின் நோக்கமாகும். கார் அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்த நாளில் மஞ்சள் பூசிய நோன்புக்கயிற்றை பெண்கள் கட்டிக் கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக்கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். ‘மாசிக்கயிறு பாசி படியும்’ என்ற சொல்வடைக்கு ஏற்ப, பங்குனி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். படைக் கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

சம்பத்கௌரி விரதம் 14.3.2024 – வியாழன்

முதலில் பங்குனி மாதப் பிறப்பு என்பதால், மாத பிறப்புப் பூஜையைச் செய்வார்கள். முன்னோர்களுக்கான மாத தர்ப்பணத்தை செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்குரிய விரத நாள்களை ‘‘கௌரி விரத நாள்கள்’’ என்று சொல்வார்கள். ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதில் பங்குனி மாதம் அதாவது இன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டிய கௌரி விரதம், சம்பத் கௌரி விரதம். சகல விதமான செல்வாக்குடன் பெண்கள் வாழ்வதற்கும், குடும்ப கருத்து ஒற்றுமைக்கும் இந்த விரதமானது அனுசரிக்கப்படுகிறது. காரடையான் நோன்பு நாளாகவும் இந்த நாள் அமைவதால், இரண்டு விரதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அம்பாளை வழிபடுவதுதானே முக்கியமான நோக்கம்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு 15.3.2024 – வெள்ளி

இன்று ஸ்ரீ வில்லிபுத்தூரில், ஆண்டாள் புறப்பாடு நடைபெறும். காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயிலில், வெள்ளிக்கிழமை தாயார் புறப்பாடு நடைபெறும்.

கார்த்திகை விரதம்/சஷ்டி 15.3.2024 – வெள்ளி

முருகப் பெருமானை எண்ணி வணங்கும் பக்தர்கள் தவறாமல் இருக்கும் நட்சத்திர விரதம் கிருத்திகை விரதம். இது மாதம் ஒரு முறை வரும். சில மாதங்களில் இரண்டு முறையும் வரலாம். அதே போலவே திதியின் அடிப்படையில் முருகப் பெருமானை எண்ணி உபவாசம் இருந்து வழிபடும் நாள் ஆறாவதுதியான சஷ்டி நாள். இந்த நாளில் காலை முதல் உணவு ஏதும் அருந்தாமல் அல்லது எளிதான பால், பழம் மட்டும் அருந்தி, முருகப் பெருமானுடைய தோத்திரங்களையும், திருப்புகழ் முதலிய நூல் களையும் பாராயணம் செய்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றி, முருகப் பெருமான் படத்திற்கு மலர் மாலைகள் சாற்றி, தூபதீபம், நிவேதனம் செய்து, இயன்றால் அருகாமையில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். அதுவும் இன்றைய நாள் சந்திரனுக்குரிய திங்கட்கிழமை, முருகனுக்குரிய விசாக நட்சத்திரத்தில் தொடங்குகிறது. விசாகம் குருவின் உடைய நட்சத்திரம் அல்லவா. இன்றைய தினம் கீழ்க்காணும் கந்தர் அனுபூதிப் பாடலை பாராயணம் செய்வது சிறப்பு.

“உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே’’.

வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதார நட்சத்திரம் கார்த்திகை (கிருத்திகை). பெரும்பாலான பெருமாள் கோயில்களில் திருமங்கை யாழ்வார் சந்நதி இருக்கும். அங்கே இன்று திருமங்கையாழ்வாருக்கு திருமஞ்சனமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும். இன்றைய தினம் இந்த திருமங்கையாழ்வார் பாசுரத்தை பூஜை வேளையில் சேவிக்க நற்பலன்கள் விளையும்.

“மின்னுமா மழை தவழும் மேகவண்ணா
விண்ணவர்தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே’’

108 திவ்ய தேசங்களில் ஒன்று, மதுரையில் பிரசித்தி பெற்ற கூடலழகர் கோயில். அங்கே இன்றைய தினம் கூடல் அழகர் பெருமாள் ஆண்டாள் கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

 

You may also like

Leave a Comment

5 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi