Saturday, May 11, 2024
Home » திருநாங்கூரில் நடைபெறும் தெய்வத் தமிழ் விழா!

திருநாங்கூரில் நடைபெறும் தெய்வத் தமிழ் விழா!

by Lavanya

திருநாங்கூர் கருடசேவை

ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆழ்வார் திருமங்கை ஆழ்வார். இறைவனின் “தாள்” பிடித்து அருள் பெற்றவர்கள் மற்ற ஆழ்வார்கள். ஆனால், திருமங்கையாழ்வார் “வாள்” பிடித்து அருள் பெற்றவர்.

“வாழி பரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ மாயோனை “வாள் வலியால் மந்திரங்கொள்’’ மங்கையர் கோன் தூயோன் சுடர்மானவேல்’’.

என்று ஆச்சாரியர்கள் போற்றிப் பாடினார்கள். அவருடைய பாசுரங்கள் சாதாரணமான பாசுரங்கள் அல்ல.

“நெஞ்சுக்கு இருள் கடி தீபம், அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம், தமிழ நன்நூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம், ஆரணசாரம், பர சமயப் பஞ்சுக் கனலின் பொறி, பரகாலன் பனுவல்களே என்று பாடுவார் ஆழ்வான்’’.

பொதுவாகவே, தமிழுக்கு மயங்கும் பெருமாள் திருமங்கையாழ்வாரின் தங்கத் தமிழுக்கு தன்னையே தந்தான். தன் உற்சவத்தையும் தந்தான். அப்படித் தந்த உற்சவம்தான் தைமாதம் நடைபெறும் மஞ்சள்குளி உற்சவம். அந்த உற்சவத்தின் நீட்சிதான் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் திவ்ய தேசத்தில் நடக்கக்கூடிய 11 கருட சேவை. சுவையான அந்த வரலாற்றின் பின்னணி, படிக்கப்படிக்கச் சுகம் தரும். எம்பெருமானின் அருளாசி எனும் நலம் தரும்.

திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்

வைணவத்தில் 11 என்ற எண் உயர்வானது. ஆழ்வார்கள் 12 பேரில், ஆண் உருவம் கொண்ட ஆழ்வார்கள் 11 பேர். பூமியின் அம்சமான ஆண்டாள் நாச்சியார் மட்டுமே, பெண் பிள்ளை. திதிகளில் ஏகாதசி உயர்ந்தது. அது பதினோராவது திதி. விஷ்ணு மயமானது. விஷ்ணுவை அடைய வழி செய்வது. முப்பத்து முக்கோடி தேவர்களின் ருத்ரர்கள் 11 பேர். அந்த ஏகாதச ருத்ரர்கள் இருக்கக்கூடிய திருத்தலம்தான் திருநாங்கூர். (சீர்காழிக்கு அருகே உள்ளது)அவர்கள் விபரம் வருமாறு

1. திருநாங்கூர் மதங்கேஸ்வரர்
2.திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர்
3. திருயோகீஸ்வரம் யோகநாதசுவாமி
4. கார்த்தியாயினி இருப்பு (காத்திருப்பு) சுவர்ணபுரீஸ்வரர்
5. திருநாங்கூர் ஜ்வரஹரேஸ்வரர்
6. அல்லிவிளாகம் நாகநாதசுவாமி
7. திருநாங்கூர் நம்புவார்க்கு அன்பர்
8. திருநாங்கூர் கயிலாயநாதர்
9. திருநாங்கூர் சுந்தரேஸ்வரர்
10. பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்
11. அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர்.

இதைப் போலவே, 11 பெருமாள் திருத்தலங்களும் திருநாங்கூரைச் சுற்றி உண்டு. திருநாங்கூர் என்பது பதினொரு திருப்பதிகளைக் கொண்ட தொகுப்பு என்று சொல்லலாம்.

1. திருமணிமாடக்கோயில் (நாராயணப் பெருமாள்)
2. திரு அரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தர்)
3. திருச்செம்பொன்செய்கோயில் (செம்பொன் அரங்கர்)
4. திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால்)
5. திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள்)
6. திருவண்புருடோத்தமம்
(புருஷோத்தமப் பெருமாள்)
7. திருமணிக்கூடம் (வரதராஜப் பெருமாள்)
8. திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன்)
9. திருத்தேவனார்த் தொகை (மாதவன்)
10. திருப்பார்த்தன்பள்ளி
(தாமரையாள்கேள்வன்)
11. திருக்காவளம்பாடி (கோபாலன்)

திருநாங்கூர் என்ற பெயரைச் சொன்னாலே இந்த பதினோரு திருத்தலங்களும் நினைவுக்கு வந்துவிடும். மிகமிக அருகில் 11 பெருமாள் திருத்தலங்களும் அமைந்திருக்கக் கூடிய இங்கேதான், உலகப் பிரசித்தி பெற்ற பதினொரு கருட சேவை விடியவிடிய நடக்கிறது. நம்மாழ்வார் அவதரித்த தாமிரபரணி கரையில், ஆழ்வார்திருநகரியைச் சுற்றி 9 திருப்பதிகள் (நவதிருப்பதிகள்) விளங்குவதைப் போல, ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருத்தலத்தைச் சுற்றி பதினொரு திருப்பதிகள் உள்ளன. இவைகளை ஏகாதச திருப்பதிகள் ‘‘திருநாங்கூர் திவ்ய தேசங்கள்’’ என்று அழைக்கிறார்கள்.

எப்படி ஆரம்பித்தது இந்த உற்சவம்?

திருமங்கை ஆழ்வார் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. திருவரங்கத்தில் அனுதினமும் எம்பெருமானைத் துதித்து, வேத மறைகளோடு, வேதத் தமிழிலும் பாடுவதை வழக்கமாகக் கொண்டவர் திருமங்கையாழ்வார். அவர் எழுதிய பிரபந்தங்களில் நிறைவான பிரபந்தம் திருநெடுந்தாண்டகம். இந்த திருநெடுந்தாண்டகத்தில், அரங்கனின் ஈடுபாடு அதிகம்.
இதைக் கேட்டுக் கேட்டு மகிழ்வார். கையில் தாளத்தோடும் அபிநயத்தோடும் அழகான தேவகானத்தில் பாடும் இசை அரங்கனை மயக்கும்.

தை மாதத்தில் அமாவாசை நாள்

ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் மிக முக்கியமான நாட்கள் அல்லவா! உத்தராயணத்தில் முதல் அமாவாசை, தை அமாவாசை. அன்று, வட திருக்காவேரியில் (கொள்ளிடம்) அரங்கனுக்கு மஞ்சள்பொடி உற்சவம் நடப்பது வழக்கம். அப்படித்தான் அன்றும் நடந்தது. வாசனாதி மஞ்சள் தைலக்காப்பு சாத்திக் கொண்டிருக்கிறார், அரங்கன்.பனிக்காலம் விலகினாலும், மெல்லிய குளிர் காற்று காவேரியை தொட்டுக் கொண்டு, கலகலப்பாக இருக்கிறது. அதோடு, இந்த சந்தனக் காப்பின் மணமும், மலர்ச்சியும் அரங்கனின் மனதுக்கு குளிர்ச்சியைத் தந்தது. பக்தர்களின் ஆரவாரம், வட காவேரியை, பூலோக வைகுந்தமாக மாற்றிக் கொண்டிருந்தது. அரங்கனுக்கு திடீரென்று திருமங்கை ஆழ்வார் எண்ணம் மனதில் எழுகிறது. அடியார்களை சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருப்பவன்தான், அரங்கன். அவனுக்கு, தான் அனுபவிக்கும் இந்த தைல காப்பை, திருநெடுந்தாண்டகம் பாடிய திருமங்கை ஆழ்வாருக்கும் தரவேண்டும் என்று நினைத்து, அர்ச்சகர் மீது ஆவேசப்பட்டு, ‘‘நமக்கு அளிக்கும் தைலக்காப்பு உற்சவத்தை திருமங்கை ஆழ்வாருக்கும் தரவேண்டும்” என்று ஆணையிடுகிறான். ‘‘நாயந்தே’’ என்று கை கூப்பி, அரங்கனின் முன்வந்து நிற்கிறார் திருமங்கை ஆழ்வார். தனக்கு உரிய உற்சவம் தன் பிள்ளைக்கும் கிடைக்கட்டும் என்று நினைக்கும் தகப்பன் ஸ்தானத்தில் அரங்கன் குளிரப் பார்க்கிறான். அன்றிலிருந்து தைலக்காப்பு உற்சவம் திருமங்கை ஆழ்வாருக்கும் நடக்கிறது.

எப்படி இந்த உற்சவம் நாங்கூருக்கு வந்தது?

ஆழ்வார் காலம் வரை, அரங்கன் ஆரம்பித்துவிட்ட இந்த உற்சவம், திருவரங்கத்தில் நடந்தது. திருமங்கை ஆழ்வார் விபவ தசையில் நடந்த (உயிருடன் இருக்கும் போது) உற்சவம், அர்ச்சையிலும் நடக்கவேண்டும் என்று, திருமங்கையாழ்வாரின் திருமேனிக்கும் தொடர்ந்து நடந்தது. அதன் பின், அவர் தங்கை கணவரால், திருவரங்கத்தில் நடைபெற்ற இந்த உற்சவம், இடம்மாறி, சீர்காழிக்கு அருகில் திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் அருகே, காவிரியின் கிளை நதியான மணிகர்ணிகா ஆற்றங்கரையில், இன்றைக்கும் நடைபெறுகின்றது. அரங்கன் ஆழ்வாருக்குத் தந்த அற்புத உற்சவம்தான் மஞ்சள்குளி உற்சவம் என்பது இந்த உற்சவத்தின் மிகப் பெரிய ஏற்றம்.இறைவன்: கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள நாராயணன், அளத்தற்கரியான்; இறைவி புண்டரீகவல்லித் தாயார், தீர்த்தம்: இந்திர புஷ்கரணி மற்றும் ருத்ர புஷ்கரணி, விமானம்: பிரணவ விமானம், திருமணிமாடக் கோயிலுக்கு எதிரே உள்ள இந்திர புஷ்கரணியை ஒட்டி நீண்ட அலங்காரப் பந்தல் போடப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கிறார்கள். அடியார்களுடைய வாழ்த்தொலி விண் முட்டுகிறது.

குமுதவல்லி நாச்சியாரோடு, கூர்மையான வேலை தோளில் சாய்த்துக் கொண்டு, சுடர்விடும் முகத்தோடும், சுந்தரத் தமிழோடும், ஒவ்வொரு பெருமானையும் கை கூப்பி சுற்றிவந்து, எதிரில் நின்று மங்களாசாசனம் செய்கின்றார். அந்தந்த திவ்ய தேசத்து பாசுரங்கள் பாடப்படுகின்றன. தமிழ் கேட்ட மகிழ்ச்சி எம்பெருமானின் முகத்தில் தாண்டவமாட, அவர்களுடைய திவ்ய பிரசாதம் திருமங்கை ஆழ்வாருக்கு வழங்கப்படுகின்றது. இந்த கோலாகலம் முடிய மாலை 4 மணி அல்லது 5 மணி ஆகிவிடுகிறது. பிறகு, உள் மண்டபத்தில் எழுந்தருளுகின்றார். அங்கே ஒரே நேரத்தில் எல்லா எம்பெருமான்களுக்கும் திருமஞ்சன சேவை நடைபெறுகின்றது. அந்தந்த எம்பெருமான்கள் கருட வாகனத்தில் ஏறி அமர்கிறார்கள். கருடனுக்கும், அந்தந்த திவ்யதேசத்து எம்பெருமான்களுக்கும் அழகான அலங்காரங்கள் நடைபெற்று, அந்த திருமணிமாடக் கோயில் மகாமண்டபம் பூலோக வைகுண்டம் போல ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதிலிருந்தும் இந்த கண்கொள்ளாக் காட்சியை காண மக்கள் வெள்ளம் திரண்டு நிற்கிறார்கள். ஆங்காங்கு, உபன்யாசம், இன்னிசை நாம சங்கீர்த்தனங்கள், என்று திருநாங்கூர் களை கட்டி நிற்கிறது.

விடிய விடிய கருட சேவை

மணி இரவு 11 ஆகிவிட்டது. அதிர்வேட்டுகள் முழங்குகின்றன. ஆராதனைகள் முடிந்து கருடசேவை புறப்பாடு நடக்கிறது. திருமணி மாடக் கோயிலைச் சுற்றி லட்சக்கணக்கான மக்கள் இந்த கருட சேவையை பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேதத்தின் பிரதி பிம்பமாக கருடனும், அந்த வேதத்தின் பொருளாக எம்பெருமானும் காட்சி அளிக்கக் கூடிய அற்புதமான விஷயம் அல்லவா கருடசேவை.

“வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை,
விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை,
நந்தனார் களிற்றை,
குவலயத்தோர் தொழுதுஏத்தும்
ஆதியை, அமுதை, என்னை ஆள் உடை
அப்பனை’’

– என்று கருசேவையை அல்லவா ஆழ்வார் வர்ணிக்கிறார்.வேதமும், வேதத்தின் பொருளும் இணைந்த தோற்றம்தான் கருடசேவை என்பது பரம வைதிகமான விஷயம். வேதப் பொருளை கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், கருட சேவையின் போது மட்டும், அதை நம்முடைய புறக்கண்ணால் கண்டுகளித்து, அகக்கண்ணின் மூலமாக நம்முடைய அந்த ராத்மாவில் கலந்துவிட முடியும். இதோ ஆரவாரம் விஞ்சி நிற்கிறது. எங்கே பார்த்தாலும் “கோவிந்தா கோவிந்தா” என்ற உற்சாக கோஷம். சுவாமி மணவாள மாமுனிகள் தோளுக்கினியானில் முதலில் வெளியே வருகின்றார்.அதற்கடுத்து அழகான அன்னவாகனத்தில் தன்னுடைய நாச்சியார் குமுத வல்லியாரோடு திருமங்கை ஆழ்வார் அருட்காட்சி தருகின்றார்.

அத்தனை எம்பெருமான்களையும் வரவழைக்கும்படியாக அவருடைய முகக் குறிப்பு இருக்கிறது.‘‘மக்களே… இதோ பாருங்கள்! வேதத்தின் பொருளை பாருங்கள். வேதத்தின் சுவைப் பயனைப் பாருங்கள்’’ என்று சொல்வது போல அவர் வேதப் பொருளை நமக்கெல்லாம் காட்டுகின்றார். ‘‘நான் கண்டுக் கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’’ என்று முதல் பிரபந்தத்தில் அவர் பாடினார் அல்லவா. ‘‘நான் கண்டேன், மனதில் கொண்டேன்” நான் கண்டு கொண்ட அந்த நாராயண நாமத்தின் பொருள் என்ன தெரியுமா? இதோ அந்தப்பொருள் சற்று நேரத்தில் உங்களுக்கு அருட்காட்சி தர இருக்கிறது. நீங்களும் கண்டு கொள்ளுங்கள். அப்பொருள் என்னவெல்லாம் தரும்?

“குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும்
பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டு
கொண்டேன் நாராயணா வென்னும்நாமம்.’’

“இத்தனையும் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால், இந்த காட்சியை நீங்களும் உங்களுடைய கண்ணால் பருகுங்கள்” என்று சொல்லாமல் சொல்வது போல, திருமங்கையாழ்வார் திருமுகத் தோற்றம் அமைந்திருக்கிறது. நம்முடைய இதயம் எல்லாம் கொள்ளை கொள்ளும் வண்ணம், அந்த மணிமாடக் கோயில் மகா துவாரத்திலிருந்து (வாசலில் இருந்து) சற்றே தலை சாய்த்து, ஆடி அசைந்து, அற்புதமான தங்க கருட வாகனத்தின் மேல் ஏறி, தலைவனாகிய எம்பெருமான் அருட்காட்சி தர, வரிசையாக திருநாங்கூர் திவ்ய தேசத்து எம்பெருமான்கள் வெளியே வருகின்றார்கள்.

வீதியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வைகுந்தத்தில் காணாத காட்சி இந்த மண்ணுலகத்தில் கிடைப்பதால், அந்த நித்யசூரிகளும், இந்திரன் உள்ளிட்ட தேவாதி தேவர்களும் கூடியிருந்து மங்கல வாழ்த்து பாடுகின்றார்கள்.வருடத்திற்கு ஒருமுறை திருநாங்கூர் வீதிகளில், விடியவிடிய இந்த வீதி உலா நடக்கிறது. இதைக் கண்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அதை கண்டு தங்கள் மனதில் கொண்டவர்கள் இன்னும் கொடுத்து வைத்தவர்கள். அந்தக் கொடுத்து வைத்தவர்களின் வரிசையில் நாமும் ஒருவராக இருக்க வேண்டாமா? வாருங்கள், திருநாங்கூர் திருப்பதிக்கு வந்து பாருங்கள், 11 கருடசேவை தரிசனத்தை. திருமங்கை ஆழ்வாரின் ஆசிகளைப் பெற்று உய்வோம் வாருங்கள்…

எஸ். கோகுலாச்சாரி

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi