Sunday, May 12, 2024
Home » திருக்கடையூர் அபிராமியம்மன்

திருக்கடையூர் அபிராமியம்மன்

by Kalaivani Saravanan

1 ஈசனின் அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்று திருக்கடையூர்.

2 காலனை வென்று, மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு எனும் சிரஞ்சீவித்துவம் அளித்த தலம்.

3 தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வந்த அமிர்தம் இருந்த குடமே, இத்தல நாயகனான அமிர்தகடேஸ்வரராக அருள்வதாக ஐதீகம்.

4 எம பயத்தைக் கடக்க உதவும் ஊர் என்பதால் கடவூர் ஆயிற்று.

5 இத்தலத்தை வில்வவனம், பிஞ்சில வனம் என்றும் அழைப்பர்.

6 பிரம்மன் ஈசனிடம் ஞானோபதேசம் பெற விரும்பிய போது, ஈசன் வில்வ விதை ஒன்றை நான்முகனிடம் தந்து, அது எங்கு ஒரு முகூர்த்தத்திற்குள் முளைக்கிறதோ அங்கு தன்னை வழிபட்டால் ஞானோபதேசம் கிட்டும் என அருள, அந்த வில்வ விதை அவ்வாறே இத்தலத்தில் முளைக்க, இத்தலமே வில்வவனமாயிற்று.

7 மார்க்கண்டேயர் காசியிலிருந்து கங்கையுடன் ஜாதிமல்லிகைக் கொடியையும் இத்தலத்திற்கு எடுத்து வந்தார். தட்சிணாமூர்த்தி சந்நதிக்கு அருகில் உள்ள அந்த கொடியில் ஆண்டுதோறும் பூக்கும் பூக்களைக் கொண்டு இத்தல இறைவனை பூஜிக்கிறார்கள்.

8 மார்க்கண்டேயருக்கு அருள சிவலிங்கத்திலிருந்து ஈசன் வெளிப்பட்டதால் மூலவரின் திருமேனியில் வெடிப்பும், எமன் வீசிய பாசக்கயிற்றின் தழும்பும் இப்போதும் காணப்படுகின்றன.

9 இத்தல காலசம்ஹார மூர்த்தியின் திருவுருவம் அற்புதமானது. அவருக்கு அருகில் இறைவி பாலாம்பிகையாக அருள்கிறாள்.

10 இந்த சந்நதியில் மிருத்யுஞ்ஜய யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

11 காலசம்ஹாரமூர்த்தியின் முன் யமதர்மராஜன் எருமை மீது அமர்ந்து, ஈசன் அருளை வேண்டி கைகூப்பிய நிலையில் தோற்றமளிப்பது அற்புதம்.

12 இங்குள்ள சங்கு மண்டபத்தில் 1008 வலம்புரிச்சங்கினால் ஈசனை மார்க்கண்டேயன் அபிஷேகம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.

13 தேவர்கள் தம்மை வழிபட மறந்ததால், அமிர்தகலசத்தை மறைத்து வைத்த இத்தல விநாயகர், கள்ளவாரணர் எனும் பெயரில் வழிபடப்படுகிறார்.

14 அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயனார் இத்தலத்தில் அவதரித்தவர்.

15 இத்தல கீழ்க்கோபுரத்தில் முனீஸ்வரர் தங்கியிருப்பதால், இக்கோபுரம் முனீஸ்வரன் கோபுரம் என அழைக்கப்படுகிறது.

16 இத்தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரதசாந்தி, ஆயுஷ்யஹோமம், மிருத்யுஞ்ஜயஹோமம், ஜபம், பாராயணம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

17 அற்புத திருக்கோலத்தில் மூன்றடி உயர பீடத்தில் அன்னை அபிராமி அருள்கிறாள். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய அன்னை இவள்.

18 இந்த அபிராமியை வழிபடுவோர்க்கு வாழ்வில் 16 பேறுகளும் கிட்டும் என்பது பட்டரின் வாக்கு.

19 தல தீர்த்தமான மார்க்கண்டேய தீர்த்தத்தில் பங்குனி மாதம் சுக்ல பட்ச அசுவனி நட்சத்திரத்தன்று ஈசன் தீர்த்தம் கொடுத்து அருள்வது வழக்கம்.

20 மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கடையூர்.

You may also like

Leave a Comment

18 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi