Thursday, February 29, 2024
Home » தீரா வழக்கை தீர்த்தருளும் தாமோதரன்

தீரா வழக்கை தீர்த்தருளும் தாமோதரன்

by Kalaivani Saravanan

திருக்கண்ணங்குடி

வசிஷ்ட மகரிஷி தொழுததாலேயே அவ்விடம் சட்டென்று தேஜோமயமாக ஜொலித்தது. ராஜகோபுரங்களும், விமானங்களும் தானாகத் தோன்றின. பிரம்மனும், தேவர்களும் வந்து குவிந்தனர். ரிஷிகள் கூடிக் குளிர்ந்தனர். பிரம்மா பிரம்மோத்ஸவம் நடத்தி எம்பெருமானை வழிபட்டார். இப்படி கண்ணன் கட்டுண்டு குடியமர்ந்ததால் கண்ணங்குடியாயிற்று. அழகிய தமிழில் திருக்கண்ணங்குடி என்று ஆழ்வார்கள் அன்பாக அழைத்தனர்.

கிருஷ்ணனின் அளவிலாப் பேரரருள் காடாக செழித்துக் கிடந்தது. இடைவெளியற்ற இறையின் சாந்நித்யம் அங்கு சுழன்றடித்தது. எங்கேயோ திருவரங்கனின் திருப்பணிக்காக யாரிடமும் கேட்காமல் என்ன வேண்டுமோ அதை தானே கவர்ந்து கொண்டிருந்த திருமங்கையாழ்வாரை இத்தலம் சுழற்றி இழுத்தது. பேராறாகப் பெருகும் அருள் வெள்ளத்தில் சிக்குண்டவர் ஆற்றின் இழுவையிலேயே மிதந்து சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணன் எனும் பொருளுக்கேற்றவாறு இருள் உலகைச் சூழ்ந்தது. அவரும் நாகை புத்தவிகாரத்தில் பொற்சிலையை எவரும் அறியாவண்ணம் கவர்ந்தார். பொற்சிலையை இடுப்பில் வைத்துக்கொண்டு கிருஷ்ண கானகத்தை நோக்கி வந்தார். ஊரை நெருங்கினார். வெகுதூரம் வந்ததால் கால்கள் மரத்துப்போயின. உடல் தளர்ந்தது. அந்த காரிருளில் ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்தார். எதிரே பதமான மண்ணை நிரவி வைத்திருந்தனர்.

பொற்சிலையை அதில் புதைத்தார். என்னைவிட பெருங்கள்வன் எவரேனும் கவர்ந்துபோவரோ என்று ஐயம் கொண்டார். சரி, என்று தனக்குமேல் குடையாய் இருந்த புளியமரத்தோடு பேச ஆரம்பித்தார். ‘‘இதோ பார் புளியமரமே, நான் அரங்கனுக்காக ஆலயம் அமைக்க பொருள் சேர்க்கிறேன். இங்கு சற்று அயரவே வந்தேன். இந்த பொன்சிலையை இரவு முழுதும் நீ தூங்காமல் பாதுகாக்க வேண்டும் என்ன’’ என்றார்.

தளிர்கள் சிலுசிலுவென அவர் மீது கொட்டின. கண்கொட்டாமல் விழித்திருப்பதாகச் சொல்லின. அவர் நிம்மதியாகத் தூங்கினார். விடிகாலை வேளையிலே புளியந்தளிர்கள் மழைபோல அவர்மீது பொழிந்தன. இதென்ன ஏதேனும் சூறாவளியா என்று கண்விழித்துப் பார்த்தபோது வயலில் உழவன் ஒருவன் நிலத்தில் உழுதுகொண்டிருந்தான். புளிய மரத்தைப் பார்த்து உறங்காப்புளியே உமக்கு என் நன்றிகள் என்றார்.

உழவனை உழவிடாது தடுத்தார். என் நிலத்தில் நீ உழுவதா’’ என்றார். கேட்டவன் அதிர்ந்தான்.

‘‘நீர் யாரய்யா திடீரென்று இப்படிக் கேட்கிறீர். ஊருக்கே புதியவர் போன்று இருக்கிறீர்’’ என்று பதிலுக்குக் கேட்டான்.

‘‘ஆஹா.. நீ புதியவனா நான் புதியவனா. என் தந்தை தாமோதரர் எனக்கு எழுதித் தந்துள்ளார்’’ என்றார்.

எதுவும் புரியாது விழித்த உழவன் ஊர் பஞ்சாயத்திற்கு இந்த வழக்கை கொண்டுபோனான். ஊரும் உழவன் பக்கம் நின்றது. திருமங்கையாழ்வார் சில தினங்கள் பொறுங்கள் அரங்கத்திலிருந்து ஆதாரத்தோடு வருகிறேன் என்றார். விசித்திரமான இவ்வழக்கிற்கு முடிவு காண இயலாமல் ஊரார் பஞ்சாயத்தைத் தள்ளி வைத்தனர். இப்படியொரு வினோத மனிதராக இருக்கிறாரே என்று யோசனையே செய்யாமல் ஊரார் நின்றனர். அதுகுறித்து மங்கைமன்னன் வியப்பெய்தினார்.

நேராக திருக்கண்ணங்குடி கோயில் நோக்கி ஓடினார். நீருண்ட மேகம்போல நிற்கும் அவன் பேரழகில் தன்னை மறந்தார். அவருள் ஊற்றுப் பெருக்காக பாசுரங்கள் பொங்கின. ‘‘வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய’’ என்று கண்ணங்குடி அழகனை பாடலால் ஆராதித்தார். கோயிலைச் சுற்றிலும் அவனது திவ்ய நாமத்தைச் சொன்னவாறே ஆனந்தக் கூத்தாடினார். அசதி இன்னும் மேலிட மகிழமரத்தடியில் அமர்ந்தார். அவர் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

ஆனால், வயிற்றுப் பசியால் உடல் சோர்ந்தது. கண்ணும் அயர்ந்தது. கண்ணன் தோள் தொட்டு எழுப்பினான். உறக்கத்திலேயே உண்டார். விழித்தெழுந்தவர் யார் வந்தது என்று சுற்றிலும் பார்வையை படரவிட்டார். வந்தது தாமோதரனே என்று தெளிந்தார். அந்த மகிழமரத்தைப் பார்த்து நீ இன்று போலவே என்றும் காயாமகிழாக இருக்க வேண்டும் என்று ஆனந்தித்தார். தொண்டை வறட்சி அதிகரிக்க ஊரிலுள்ள ஓர் வீட்டின் முன்பு நின்று குடிக்க தண்ணீர் கேட்டார்.

‘‘நீங்கள் கேட்டபடி நீரைக் கொடுத்தால் செம்பும் குடமும் எனது என்பீர். கொடுக்கமாட்டேன் போங்கள்’’ என்றாள். திருமங்கையாழ்வார் மிகவும் மனம் நொந்தார். அந்தப் பெண்ணைப் பார்த்து நான் என்ன திருப்பணிக்கு செல்கிறேன் என்று தெரியாது, நீங்களும் வழக்கை முடிக்காது அனுப்புகிறீர்கள். தாகத்தால் தவிக்கும் எனக்கு நீரும் தரவில்லை. இனி இவ்வூரில் எந்த வழக்கும் தீராது. எந்த கிணற்றிலும் இனி நீர் ஊறாது என்றார். நிரம்பியிருந்த கிணறுகள் வற்றின. ஊரார் அதிர்ந்தனர்.

திருமங்கையாழ் வாரின் பாதம் பற்றிக் கதறினார்கள். தாங்கள் யாரென்று தெரியாது பேசிவிட்டோம். இந்த வழக்கைத் தாங்களே தீர்க்க வேண்டும் என்று வாய்பொத்திக் கேட்டனர். ‘‘இத்தலத்து லோகநாதனையும், உற்சவராக எழுந்தருளியிருக்கும் தாமோதர நாராயணப் பெருமாளையும் கேளுங்கள். தீரா வழக்கெல்லாம் தீரும்’’ என்றார்.

‘‘நீலமேக வண்ணனாக இவனிருக்க வேறு நீர் எதற்கு இங்கு. இவனை சேவித்தால் போதுமே ஞானமெனும் தாகத்திற்கே நீர் கொடுத்து தணிப்பான்’’ என்று சொல்லாமல் சொன்னார்.
இந்த லீலாவைபவம் அனைத்தையும் திருமங்கையாழ்வாரை முன்னிட்டுக்கொண்டு திருக்கண்ணங்குடி எம்பெருமானே செய்வித்தான். இன்றும் திருக்கண்ணங்குடியில் கிணறே இல்லை. கோயிலின் சிரவண புஷ்கரணி மட்டுமே திருமஞ்சனத் தீர்த்தமாக உள்ளது. கீழ்வேளூரிலிருந்து குழாய் மார்க்கமாகத்தான் நீர் வருகிறது. அது போலவே எந்த நியாயமான வழக்கானாலும் இத்தல தாமோதரனை வேண்டிக்கொள்ள எளிதில் முடிந்து விடுகிறது என்கிறார்கள்.

திருமங்கையாழ்வாராலேயே உறங்காப்புளி, தோலா வழக்கு, ஊறாக்கிணறு, காயா மகிழ் என்று பிரபலமானது. மூலவர் லோகநாதர் என்றும், தாயார் லோகநாயகி எனும் திருநாமங்களோடு நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். உற்சவப்பெருமானுக்கு தாமோதர நாராயணன், அரவிந்தநாயகி எனும் திருப் பெயர்களோடு காட்சியளிக்கின்றனர். தாமோதரன் கோபாலனாக இடுப்பில் கைவைத்து நின்று காட்டும் அழகு ஆயுள் முழுதும் கண்டாலும் சலிக்காது. இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் போக்குவரத்துச் சாலையில் ஆழியூர் பள்ளிவாசல் என்கிற இடத்திலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. போக்குவரத்து வசதியற்ற இத்தலத்திற்கு தனி வாகனம் மூலம்தான் செல்லமுடியும்.

– ராதாகிருஷ்ணன்

You may also like

Leave a Comment

twenty − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi