Wednesday, June 5, 2024
Home » மாடியில் காய்த்துக் குலுங்கும் மாம்பழங்கள்… !

மாடியில் காய்த்துக் குலுங்கும் மாம்பழங்கள்… !

by Porselvi
Published: Last Updated on

பலாயிரம் கைதட்டல்களுக்கு மத்தியில் இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முன்னால் தான் நிற்பேன் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை‘ எனப் பூரிக்கிறார் பங்காரு ஜான்சி. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பங்காரு ஜான்சி தனது மொட்டை மாடியை இயற்கையான மாம்பழங்கள், ஆரஞ்சு மற்றும் பலாப் பழங்கள் கொண்ட பசுமையான சொர்க்கமாக மாற்றியிருக்கிறார். மாடியில் பலா மற்றும் மாம்பழங்களா என்னும் ஆச்சர்யம் உண்டாகிறதல்லவா?! இதனை சாத்தியப்படுத்திய காரணம்தான் கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்காரு ஜான்சி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரிடமிருந்து மதிப்புமிக்க டாக்டர் IV சுப்பா ராவ் ரிது நெஸ்தம் விருதைப் பெற்றார். அவரிடம் விருது பெற்றதை என்னால் இப்போதும் உண்மை என நம்பமுடியவில்லை. பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் உணர்கிறேன்‘ என நெகிழ்கிறார் பங்காரு ஜான்சி.

28 வயதான ஜான்சி தனது மொட்டை மாடியில் 800 சதுர அடி பரப்பளவில் பசுமையான காட்டையே அமைத்துள்ளார். பல்வேறு வகையான அலங்கார மற்றும் மருத்துவக் குணம் கொண்ட செடிகள், பச்சைக் காய்கறிகள், பூக்கள் குறிப்பாக ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பெரும் தோப்புகளில் வளரும் மரங்களுடன், அவரது தோட்டம் – விசாகப்பட்டினம் மேயர் ஹரி வெங்கட குமாரி உட்பட பல பிரபலங்கள், முக்கிய அரசு அதிகாரிகள் என பலரையும் ஈர்த்திருக்கிறது. விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த ஜான்சி பிகாம் பட்டதாரி. படித்து முடித்த பின் மூன்று ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றியிருக்கிறார். 2021ல் திருமணத்திற்குப் பின்னர்தான் ஜான்சி வேலையை விட வேண்டிய சூழல் உருவானது.

‘திருமணமாகி நான் என் கணவர் வீட்டுக்கு வந்த வேளை அங்கே ஒரு செடி கூட கிடையாது. என்னுடைய சிறுவயதிலிருந்தே வீட்டுத் தோட்டங்கள், மாடித் தோட்டங்கள் என வைப்பது வழக்கம், என் பெற்றோர் வீட்டிலும் இதைக் கடைப்பிடித்தேன். அந்தப் பழக்கத்தை அப்படியே சிறுசிறு செடிகளாக வைக்கத் துவங்கி இப்போது சில சிறுகுறு மரங்களையும் கூட அதற்கான பராமரிப்புகளுடன் நடத் துவங்கினேன். இப்படியே சுமார் 600க்கும் மேலான செடிகளால் மாடியை நிறைக்கத் துவங்கினேன்’ என்னும் ஜான்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர் அவர் பாட்டி. ‘என்னுடைய பாட்டி தோட்டக்கலையில் ஆர்வம் மிகுந்தவர். அவர் பல முறைகளையும், நுணுக்கங்களையும் எனக்குக் கற்றுக்கொடுத்தார். எந்நேரமும் பாட்டி தோட்டத்தில் ஏதேனும் வேலை செய்துகொண்டே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பூ பூத்தால், காய்த்தால் எங்களை எல்லாம் கூப்பிட்டு ஆனந்தமாக சொல்லி பகிர்வார். அதன் வழிதான் நானும் ஈர்க்கப்பட்டேன். மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் தென் கொரிய விவசாயி சோ ஹான்-கியூவின் புத்தகத்தை விரும்பிப் படிப்பேன். அதில் பலவிதமான தோட்டக்கலைகள், விதிகள், என அனைத்தும் இருக்கும்’ என்கிறார் ஜான்சி.

“பயிர் விளைச்சலை அதிகரிக்க பல விவசாயிகள் யூரியா மற்றும் பூச்சிக்கொல்லி போன்ற இரசாயன உரங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுதான் என்னை இயற்கை முறையில் செடிகள் வளர்க்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும் என்னைத் தூண்டியது. மேலும், எங்கள் உற்பத்தியின் தரத்திற்கும் சந்தையில் நாம் வாங்கும் காய்கள், பழங்களின் தரத்திற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எங்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் தனித்துவமான நறுமணங் களையும் அதீத சுவையும் கொடுக்கின்றன’ எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் ஜான்சி.

இன்று, நகர்ப்புற தோட்டக்காரர், கத்தரி, ஓக்ரா, தக்காளி, கீரை, புதினா, தர்பூசணி, முருங்கைக்காய், வெங்காயம், நட்சத்திரப் பழங்கள், மூன்று வகையான மாம்பழங்கள், மஞ்சள் மற்றும் சிவப்புநிறப் பலாப்பழங்கள் உட்பட குறைந்தது 85 வகையான செடிகள் , பழ மரங்களை வளர்க்கிறார் ஜான்சி. இரண்டு வகையான ஆரஞ்சுகள், பார்படாஸ் செர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள், அவுரிநெல்லிகள், மல்பெர்ரிகள், கஸ்டர்ட் ஆப்பிள், ஆம்லா, பப்பாளி, திராட்சை, கரும்பு, ஆப்பிள், டிராகன் பழங்கள், லிச்சிஸ், கொய்யா இன்னும் எத்தனையோ பூக்கள் என எங்கும் ஜான்சியில் மாடி ஒரு கனவுக் கானகம் போல் தென்படுகிறது. எங்கும் பட்டாம்பூச்சிகள், விதவிதமான பறவைகள், பூச்சிகள், மேலும் தேனீக்கள் உட்பட ஜான்சியின் தோட்டம் பூத்துக் குலுங்குகிறது.

ஜான்சியின் சில குறிப்புகள்:

*ஒட்டு மரங்களை கத்தரிக்கவும்: சாதகமான பருவம் தொடங்கும் முன் செடிகளை கத்தரித்து பரிந்துரைக்கிறார். “இது தாவரங்களை நல்ல வளர்ச்சிக்கும் மேம்பட்ட காற்றுச் சுழற்சிக்கும் தயார்படுத்துகிறது. மேலும், கத்தரிப்பதன் மூலம், தாவரத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, பூச்சி சேதத்தின் அபாயத்தைக் குறைக்கலாம்.
*தொட்டிகளில் மண் கலவை: சரியான பானை கலவையில் 30 சதவீதம் மண்புழு உரம்/சமையலறை கழிவு உரம்/மாட்டு சாணம், 30 சதவீதம் மண், 30 சதவீதம் கோகோபீட் மற்றும் 10 சதவீதம் பிண்ணாக்கு ஆகியவை சேர்த்து கலவையாக வைத்து அதில் விதைகளை நட வேண்டும். மேலும் இந்தத் தொட்டிக் கலவையில் மண்ணின் எடை மிகக் குறைவாக இருப்பதால் இது மாடியின் எடையையோ அல்லது வீட்டின் கூரையையோ சேதப்படுத்தாது.
*பயோ உரங்கள் சேர்ப்பு: பயிரிட்ட பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு தொட்டிகளில் உயிர் உரங்கள் மற்றும் திரவ உரங்களை சேர்க்க வேண்டும். ஜான்சியின் பையோ உரக் கலவைகளில் ஒன்றான டிரைக்கோடெர்மா-செறிவூட்டப்பட்ட உயிர் உரம் தயாரிப்பு முறை: 100 கிலோ பசுவின் சாணம், 10 கிலோ வேப்பம் பொடி, இரண்டு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை நன்கு கலந்து சிறிது தண்ணீர் தெளிக்கவும். பருத்தித் துணியால் மூடி, நிழலில் வைக்கவும். ஏழு நாட்களுக்குப் பிறகு, வெள்ளை நிற நல்ல பாக்டீரியா உருவாகும். பின்னர், நேரடியாக மாட்டுச் சாணத்துடன் உரம் கலந்து மண்ணில் சேர்க்கலாம்,
* பூச்சிகளை அகற்றுவது எப்படி: மாவுப்பூச்சி போன்ற பூச்சிகளை அகற்ற வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். ஆரம்பத்தில் பூச்சிகளை கைகளாலேயே அகற்றலாம். பின்னர், ஒவ்வொரு வாரமும் வேப்ப எண்ணெய் தெளிக்கவும். இதற்கு மேலும் செடியில் பூச்சிகளைக் கண்டால், அரிசி நீரில் மிளகாய் மற்றும் பூண்டு விழுது கலந்து தெளிக்கவும். இது நிச்சயமாகப் பூச்சிகளை இயற்கையாக அகற்றும்.
*விளைச்சலை அதிகரிக்க உதவும் கனிம உரம்: ஒளிமின்னழுத்தம், ஒளிச்சேர்க்கையை ஒழுங்குபடுத்துதல், கார்பன் மற்றும் நைட்ரஜன் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதன் மூலம் தாவரங்களில் ஆரோக்கியமான வளர்ச்சியை உண்டாக்கலாம்.
*திரவ உரம் தயாரிப்பு முறை: ஒரு கிலோ கடல் மீன் மற்றும் 1 கிலோ வெல்லம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டெரகோட்டா பானை அல்லது பிளாஸ்டிக் கொள்கலனில் சேர்த்து ஒரு குச்சியின் உதவியுடன் கலக்கவும். பின்னர், அதை ஒரு பருத்தித் துணியால் மூடி, நிழலின் கீழ் வைக்கவும். தினமும் காலையிலும் மாலையிலும் கடிகார சுழற்சி முறையில் கிளறவும். 15 நாட்களுக்குப் பிறகு உரம் தயாராகிவிடும். 10 மில்லி மீன் அமினோ அமிலத்தை எடுத்து ஐந்து லிட்டர் தண்ணீரில் கரைத்து, பின்னர், செடிகளின் இலைகள் மற்றும் மண்ணின் வேர்களுக்கு அடியில் தெளிக்கவும். மேலும் எப்படி கர்ப்பம் தரித்த பெண்களுக்கு புளித்த காய்கள், கனிகளைக் கொடுக்கிறோமோ அதே போன்ற பழங்கள், காய்களை குறிப்பாக சிட்ரஸ் பழங்களை கடைகளின் கழிசல்களாகக் கேட்டு வாங்கி அவற்றையும் ஊட்டச்சத்தாகக் கொடுக்க, செடிகள் விரும்பி அதன் ஊட்டச்சத்துகளை உறிந்துகொள்ளும்.
– கவின்

You may also like

Leave a Comment

fifteen + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi