Friday, May 31, 2024
Home » திட்டமிடு வெற்றிபெறு

திட்டமிடு வெற்றிபெறு

by Porselvi

ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்று தீர்மானித்தால், அதற்குரிய தாள், எழுதுகோல்கள், சிறந்த வண்ணங்கள் உள்ள குப்பிகள் ஆகியவற்றை அதற்குரிய கடைகளில் இருந்து ஆய்வு செய்து வாங்கி வருதலில் தொடங்குகிறது. நமது திட்டமிடுதல், அவையும் சரியாக அமைந்து விட்டால் உங்கள் கற்பனையில் உருவான ஓவியத்தை வரைய தொடங்கும் பணி எளிதாகிவிடும். அதனைப் போட்டிக்கு அனுப்பி வைத்தலும், பின்தொடர்ந்து பரிசு பெறுதலும் சாத்தியமாகும். தொடக்க கால திட்டமிடுதலில் குளறுபடி நேர்ந்தால் பின்னால் ஏற்படும் காரியம் சாத்தியமில்லாமல் போய்விடும்.எனவேதான் திட்டமிடுதலை மிக முக்கிய பணியாக தன்னம்பிக்கை சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
தொழில் தொடங்க நினைக்கிறார் ஒருவர். அந்த தொழில் பற்றி அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.வங்கியை முறையாக அணுகி ஆவணங்களை வழங்கி முதலீடு பெற வேண்டும். உரிய கருவிகளை வாங்க வேண்டும். உரிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். சொந்தமாகவோ, நீண்ட நாள் ஒப்பந்த வாடகைக்கு அந்த இடத்தை உறுதி செய்ய வேண்டும். நல்ல ஆலோசகர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களது அறிவுரையின் படி உற்பத்தி பணியை தொடங்க வேண்டும். உற்பத்தி தொடங்கும் போதே அதனை உரிய வகையில் விற்பனை செய்யக்கூடிய சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அதற்கு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வகையான திட்டமிடுதல் பணிகளை செய்துமுடித்த பின் தொழிலகப் பணிகளை தொடங்கினால் வெற்றி நிச்சயம். இவ்வளவு முன்னேற்பாடுகளும், திட்டங்களும் நமது தொழிலை சரியான திசையில் கொண்டு செலுத்த உதவி செய்யும். இதுபோன்ற சரியான திட்டமிடுதலுடன் இளம் தொழில் முனைவோர் ஆகி சாதித்தவர் தான் ஆபா சிங்கால்.

சவாலான குழந்தைப் பருவம், பகுதி நேர வேலையுடன் உயர்கல்வி, மாடலிங் என இளம் வயதிலேயே பல்வேறு பாதை களைக் கடந்த ஆபா சிங்கால், இந்திய உணவு விற்பனைத் தளத்தில் வெறும் ரூ.3 லட்சத்துடன் கால் பதித்து ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ (Khichdi Express) என்ற உணவு வர்த்தகத்தில் ரூ.50கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக உருவாக்கி சாதித்துள்ளார் ஆபா சிங்கால்.தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்-அப்கள் மேலோங்கி இருக்கும் காலத்தில் ‘கிச்சடி’ போன்ற மிகவும் எளிமையான ஓர் உணவுப் பொருளைத் தயாரித்து விற்பதன் மூலம் பல கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைக்க முடியும் என்று சாதித்து உள்ளார்ஆபா சிங்கால் என்னும் இளம்பெண் தொழில் முனைவோர்.ஆபாவின் குழந்தைப் பருவம் பல சவால்களை சந்தித்து கஷ்டம் நிறைந்ததாக அமைந்தது. 12வயதாக இருந்தபோது பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டார்கள், அது அவருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.அவருக்கு குடும்பச் சூழல் சரியாக அமையவில்லை வீட்டில் இருந்ததை விட விடுதிகளிலும்,உறைவிடப் பள்ளிகளிலும் கழித்த வாழ்க்கைதான் அதிகம்.

ஆபா சந்தித்த பண கஷ்டங்கள் மிகவும் மோசமானவை. இந்த நெருக்கடி களின் பின்னணியில்தான் ஆபா தன்னிடம் இருந்த மிகக் குறைந்த உடைமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு நண்பரின் வாடகைக் குடியிருப்பில் வசிப்பது, குறைந்த செலவில் வாழ்வது என்பதாகவே அவர் வாழ்க்கை சிரமத்தில் தள்ளப்பட்டது.எனினும், அடுத்தடுத்த துன்பங்களும் பணக் கஷ்டங்களும் ஏற்பட்டாலும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆபாவின் திறமையால் லண்டனில் எம்.பி.ஏ படிப்பதற்காக கல்வி உதவித்தொகை கிடைத்தது.வெளிநாட்டில் இருந்த காலத்தில், படித்துக் கொண்டே பகுதிநேர வேலைகளைச் செய்தார். அப்போதுதான் அவருக்கு கிச்சடி மீது ஆர்வம் ஏற்பட்டது.சமைக்க எளிதான, சத்தான இந்திய உணவான கிச்சடி மீது ஆர்வம் இருக்கலாம். ஆனால், அதை வர்த்தக சக்தியாக மாற்றினால் என்ன? என்று யோசித்தார்.

ஆபா இந்தியா திரும்பியதும் விதி வேறு திட்டத்தை வகுத்தது. ஒரு விளம்பர இயக்குநரை சந்திக்க நேர்ந்தது.அதன்மூலம் ஆபாவுக்கு மாடலிங் உலகின் கதவுகள் திறந்தன.சாம்சங்,கேட்பரி மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற முக்கிய பிராண்டுகளுக்கான விளம்பரங்களை அவர் அலங்கரித்தார்.இருப்பினும், ஆபா மாடலிங் வாழ்க்கை என்பது தற்காலிகம் என உணர்ந்தார். நிலையான ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணினார்.நெருங்கிய தோழி ஒருவருடன் சாதாரணமாக பேசி கொண்டு இருக்கும் போது கிச்சடி மீதான ஆபாவின் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. எனவே முறையான திட்டமிடுதல் உடன் 2019-இல் ஹைதராபாத்தில் ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ தொடங்கினார் ஆபா. இரண்டு பேர் கொண்ட குழுவுடன் வெறும் 3 லட்ச ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆபாவின் நோக்கம் வெறும் கிச்சடியை மட்டும் பரிமாறுவது மட்டும் அல்ல.அவரது விற்பனை நிலையங்கள் பக்கோடாக்கள் மற்றும் பிற உள்ளூர் உணவு வகைகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. Swiggy மற்றும் Zomato போன்ற ஆன்லைன் தளங்களில் அவரது சுவையான, புதுமையான கிச்சடி சுவை உணவுப் பிரியர்களின் வரவேற்பை பெற்றது.சவாலான கோவிட் காலத்தில் கூட ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக முன்னோக்கி நகர்ந்து,தேவைப்படுவோருக்கு இலவச உணவை விநியோகித்ததும் பாராட்டை பெற்றது.ஆபா 4 ஆண்டுகளில் தனது வணிகத்தை ரூ.50 கோடி வர்த்தகமாக மாற்றி உள்ளார். விரைவில் அதை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வெற்றி நடை போட்டு வருகிறார். இப்போது பல்வேறு நகரங்களில் ஆபாவின் விற்பனை நிலையங்கள் பலவிதமான கிச்சடிகளை சுவையுடன் வழங்குகின்றன.

மெக் டொனால்ட்ஸ், கேஎஃப்சி போன்ற ஜாம்பவான்களுக்கு நிகரான உலகளாவிய பிராண்டாக ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ உருவாக வேண்டும் என்ற நீண்ட கால திட்டமிடலுடன் செயல்பட்டு வருகிறார் ஆபா சிங்கால்.எனவே இவரைப் போலவே திட்ட மிடத் தயாராகுங்கள்.திட்டமிடுதலில் கவனம் செலுத்தாதவர்கள் சிறந்த வெற்றியை பெற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. எந்தவொரு விஷயத்திலும் குறுகிய காலத் திட்டம், நீண்ட காலத் திட்டம் ஆகியவற்றை வகுத்துக் கொண்டு அதற்கேற்ப இலக்கை நோக்கி சென்றால் வெற்றி உறுதியாக வசப்படும்.

You may also like

Leave a Comment

11 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi