Sunday, June 16, 2024
Home » எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

by Porselvi

சென்னை: எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது. இதை உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஜனவரி 22 ஆம் நாளே அவ்வழக்கு இறுதி விசாரணைக்கு வர வாய்ப்பிருக்கும் நிலையில், வழக்கு விசாரணையை வலுவான வாதங்களுடன் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையில் அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள், ஆலையிலிருந்து அடிக்கடி வெளியேறும் நச்சு வாயுக்கசிவு ஆகியவற்றால் தூத்துக்குடி பகுதியில் வாழும் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கின. அக்கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பகுதியில் உள்ள மக்கள் நடத்தி வந்த அறவழிப் போராட்டம் கடந்த 22.05.2018 ஆம் நாள் நூறாவது நாளை எட்டியதைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து தான் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மே 23 ஆம் தேதி முதல் தற்காலிகமாகவும், மே 29 ஆம் தேதி முதல் நிரந்தரமாகவும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.

அதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான மேல்முறையீட்டு மனு தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. உலகம் முழுவதும் வணிகத் தொடர்புகளையும், அதிகார உறவுகளையும் கொண்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், அதைப் பயன்படுத்தி ஆலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயலும். இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

ஆனால், அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை ஏற்றுக் கொண்டாலும் கூட, அதற்காக ரூ.100 கோடி அபராதம் செலுத்தி விட்டு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அனுமதித்து தீர்ப்பு வழங்கியதை தமிழ்நாடு மறந்துவிடக்கூடாது.

ஸ்டெர்லைட் போன்ற நாசகார ஆலைகளின் இயக்கத்தை நாம் பார்க்கும் பார்வைக்கும், உச்ச நீதிமன்றம் பார்க்கும் பார்வைக்குமிடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அங்கு ஏற்பட்ட வாயுக்கசிவுகள், விபத்துகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்களின் எதிர்ப்பு ஆகியவையே நமது பார்வையாக இருக்கும்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையோ, உலகிலேயே தங்கள் ஆலையில் தான் மிகக்குறைந்த செலவில் தாமிரம் உற்பத்தி செய்யப் படுகிறது, இந்தியாவின் ஒட்டுமொத்தத் தேவையில் 55% தாமிரம் ஸ்டெர்லைட் ஆலையில் தான் தயாரிக்கப் படுகிறது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியா தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உருவாகியிருகிறது, நேரடியாகவும், மறைமுகமாகவும் 20,000 பேர் வேலையிழந்து விட்டனர் என்பன போன்ற பொருளாதாரம் சார்ந்த புள்ளிவிவரங்களையே உச்ச நீதிமன்றத்தில் வாதமாக முன்வைக்கும்.

ஸ்டெர்லைட் ஆலையின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாதவாறு, அதனால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளையும், கடந்த காலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஸ்டெர்லைட் ஆலை மதிக்காததையும் தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை 1996ம் ஆண்டு தொடங்கப் பட்டதிலிருந்து 2018&இல் மூடப்பட்டது வரையிலான 22 ஆண்டுகளில் ஏற்பட்ட அழிவுகள் கொஞ்சநஞ்சமல்ல.

1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் கொல்லப்பட்டாலும் இருவர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்குக்காட்டப்பட்டது. 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. தொடங்கப்பட்ட நாள் முதல் 2013-ஆம் ஆண்டு வரை 82 முறை நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. 2018 வரை கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். 1994 முதல் 2004க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர். மேலும் பல உயிரிழப்புகள் வெளி உலகிற்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை 2013 ஆம் ஆண்டில் திறக்க அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், அதற்காக ரூ.100 கோடி அபராதம் மற்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. ஆனால், அதன்பின் 5 ஆண்டுகள் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, உச்ச நீதிமன்றம் விதித்த பெரும்பான்மையான நிபந்தனைகளை கடைபிடிக்கவே இல்லை. இந்த உண்மைகள் அனைத்தையும் அது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைக்க வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 22 ஆம் தேதியோ அல்லது அதற்கு அடுத்த சில நாட்களிலோ விசாரணைக்கு வரக்கூடும். அதை எதிர்கொள்ள தமிழக அரசு இப்போதே தயாராக வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்த மூத்த வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்களுடன் வழக்கறிஞர்கள் குழுவினர் கலந்துரையாடி தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவே இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது. இதை உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

6 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi