Thursday, April 18, 2024
Home » முகப்பேரில் மகப்பேறு அருளும் ஸ்ரீனிவாசப்பெருமாள்

முகப்பேரில் மகப்பேறு அருளும் ஸ்ரீனிவாசப்பெருமாள்

by Lavanya

`ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம்’

இந்த ஸ்லோகமானது, திருப்பதி மலைமீது குடி கொண்டுள்ள வேங்கடவனை நினைவூட்டுகிறது. அங்கு வாசம் செய்யும் மலையப்பஸ்வாமியே.. பெருமாளே.. மங்கலங்களைத்தருபவரே, வேண்டிய வரங்களையெல்லாம் வழங்குபவரே, துதிப்போர் அனைவருக்கும் நன்மைகளைப்பொழிபவரே, ஸ்ரீநிவாசா.. அநாதரக்ஷதா.. ஆபத்பாந்தவா.. என அவனின் திருநாமங்களையெல்லாம் சொல்லி வேண்டுவோம். திருமலையில் இருக்கும் ஸ்ரீ னிவாசரை போலவே, சென்னையில் உள்ள முகப்பேரில், `சந்தான ஸ்ரீனி
வாசப் பெருமாள் பக்தர்களுக்கு மகப்பேறு அதாவது குழந்தை வரமளித்து வருகிறார். அவரை பற்றிஇந்த தொகுப்பில் காணலாம்.

`ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
சந்தான குடி நிவாஸாய சந்தான ஸ்ரீனிவாசாய மங்களம்’

என்றே இவரையும் மலையப்பஸ்வாமி போலவே, துதித்து வேண்டுகிறார்கள். தன்னை வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு மகப்பேறு வழங்குவதற்காகவே, இந்த முகப்பேர் மேற்கில், `ஸ்ரீ சந்தான ஸ்ரீனிவாச பெருமாளாக’ எழுந்தருளியிருப்பதாக இங்கு பூஜைகளை மேற்கொண்டு வரும் கோயிலின் மூத்த பட்டர் அண்ணா ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். மேலும், பிரதிமாதம் வருகின்ற பௌர்ணமி, புனர்பூசம், சுவாதி, ரேவதி, ஸ்ரவண, ரோகிணி ஆகிய ஆறு நாட்களில் `சந்தானபூஜை’ நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தம்பதி சகிதமாக இந்த திருத்தலத்தில் வரவேண்டும். அவர்களை பெருமாளின் முன்பு அமரவைத்து, மடியினில் சந்தான கோபாலரை ஏலம் செய்து, இந்த சந்தானபூஜை நடைபெறும். தொடர்ந்து மூன்று முறை வந்திருந்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். அப்படி, மேற்கொண்ட பல தம்பதிகளுக்கு மகப்பேறுகிட்டி சௌபாக்கியம் அடைந்திருக்கிறார்கள். என்று பட்டர் சொல்லும் போதே இந்த பிராத்தனையை ஒரு தம்பதி செய்து கொண்டிருந்தார். சற்று இடைவெளிக்கு பின், மீண்டும் பட்டர் பேசத் தொடங்கினார்.

இந்த கோயில், மிக பழமை வாய்ந்தது. மூலவரான சந்தான ஸ்ரீனிவாச பெருமான், சுமார் 9 அடி மிக உயரமானவர். மேலும், இவர் அபயஹஸ்த தாரி. ஸ்ரீனிவாசப்பெருமாள், அபயஹஸ்த தாரியாக காட்சியளிப்பது வேறெங்கும் காணக்கிடைக்காதவை. ஒரு காலத்தில், இந்த சந்தான ஸ்ரீனிவாசப்பெருமாள், இங்கு கோயில் கொண்டு மகப்பேறு வரங்களை தந்தமையால் `மகப்பேறு இடம்’ என்றே பெயர் பெற்றது. அது காலப் போக்கில் மருவி, மகப்பேறு – முகப்பேறு என்றாகிவிட்டது.

இந்த பெருமாளின் சந்நதியை தவிர, சந்தான லட்சுமி என்னும் தாயார் சந்நதியும் தனியாக உள்ளது. வெள்ளிக் கிழமை தோறும் விஷேச அலங்காரங்கள் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. அதனைத்தொடர்ந்து, ஆண்டாள் சந்நதி, அனுமார் சந்நதி, சாஸ்தா (ஐயப்பன்) சந்நதி, நவகிரக சந்நதி ஆகிய அனைத்து தெய்வங்களும் ஒரு சேர அருள்பாவிக்கிறார்கள். அதே போல், சங்கு – சக்கரத்துடன் விநாயகப்பெருமான் காட்சியளிக்கிறார். இவை காணக்கிடைக்காத அபூர்வமாக இந்த திருக்கோயிலில் பார்க்கப்படுகிறது.

இவை எல்லாத்திற்கும் மேலாக, நாம் முன்பே கூறியதை போல, இந்த கோயிலில் ஸ்ரீனிவாசப்பெருமாள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கிய மருளுகிறார். என்று கூறி அதன் முழுவிவரத்தையும் பட்டர் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

பௌர்ணமி, சுவாதி, ஸ்ரவண, ரேவதி, புனர்பூசம், ரோகிணி ஆகிய ஆறு நாட் களில், `சந்தானபூஜை’ நடைபெறுகிறது. இந்த ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் புத்திர பாக்கியத்திற்கும் தொடர்புண்டு.

பௌர்ணமி அன்று சந்தான பாக்கியத்திற்காக பூஜை செய்யும் விசேஷநாள். தம்பதிகள் சௌகரியமாக இருக்க பௌர்ணமி அன்று பூஜை செய்வது சிறந்தது. லட்சுமி நரசிம்மரின் திருநட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் இந்த பூஜை செய்வதால், ஏதேனும் காத்து கருப்பினால் தடைப்பட்ட குழந்தைப்பேறு சரியாகும். அதே போல், கருடாழ்வாரின் திருநட்சத்திரமும்கூட. இந்த பூஜையினை செய்வதற்கான அருமையான நாள். ஸ்ரவண நட்சத்திரம், சாட்ஷாத் அந்த மலையப்பசுவாமியின் நட்சத்திரம். ஆகையால், இந்த நட்சத்திரமும் உகந்தது. அதே போல், ரேவதி நட்சத்திரமும்கூட பெருமாளின் நட்சத்திரம்தான். இந்த நட்சத்திரத்தில் செய்வதாலும் பலனுண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில், புத்திரகாமேஷ்டி யாகம் செய்துதான் ராமபிரான் பிறந்தார். ஆகையால், இந்த நட்சத்திரத்தில் பூஜை செய்வதால், சந்தான ஸ்ரீநிவாசன் குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

ரோகிணி நட்சத்திரம், எல்லாருக்கும் தெரிந்ததே! கண்ணபிரான் பிறந்த நட்சத்திரம். அதனால், இந்த நட்சத்திரத்தில் பூஜை செய்வதால், கண்ணனைப் போன்றே குழந்தை பிறப்பான் என்பது ஐதீகம்.

மேலே கூறிய ஏதேனும் ஒரு நட்சத்திர நாட்களில், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தம்பதி சகிதமாக சந்தான ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு காலை 6.00 மணிக்கு வந்திருந்து (எதையும் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றுடன் வருவது நல்லது அல்லது காபி – டீ போன்ற நீராகாரத்தை மட்டும் குடித்து வரலாம்) கோயில் பட்டரிடம் `சந்தான பூஜை’ செய்ய வேண்டும் என்று சொன்னால், அவர்கள் அந்த தம்பதிகளை அழைத்துக் கொண்டு, பெருமாளின் முன்பாக அமரவைத்து, ஆயிலை சந்தான கோபால கிருஷ்ணரை (விக்ரகம்) தம்பதியின்
மடியினில் வைத்து,

“தேவகி ஸுத் கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
தேஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் கதஹ
தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்’’

என்னும் மந்திரத்தை உச்சரிக்க சொல்லிக் கொடுப்பார்கள். சில முறை கோயிலிலேயே தம்பதிகளாக சேர்ந்தே சொல்லிய பிறகு, அதனை வீட்டிலும் மனமுருகி வேண்டிக் கொண்டு, இருவரும் சேர்ந்து சொல்லவேண்டும். இரவில், தூங்குவதற்கு முன்பாக தம்பதிகள் வெண்ணெய், தேன் ஆகியவற்றை உட்கொள்ளவேண்டும். அதேபோல், வாரம் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிடவேண்டும். இந்த வேண்டுதல் முடியும் வரை சைவ சாப்பாட்டினை மட்டும் சாப்பிடுவது சிறந்த பலனைக் கொடுக்கும். இந்த கோயிலுக்கு, இந்த பூஜையினை மேற்கொள்ள தொடர்ந்து மூன்று முறை வரவேண்டும். எந்த நட்சத்திரத்தில் வருகிறார்களோ, அதே நட்சத்திரத்தில்தான் வரவேண்டும். உதாரணத்திற்கு; ரேவதி என்றால் அடுத்த மாதம் வருகின்ற ரேவதியில்தான் வரவேண்டும். இவை அனைத்தையும் கடைப்பிடிப்பவர்களுக்கு, நிச்சயம் சந்தான ஸ்ரீநிவாச பெருமாள் சந்தானத்தை அருள்வார்.

திருமலை திருப்பதியில் எப்படி பிரதி வெள்ளிக்கிழமை மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுேமா, அதே போன்று இங்கும் மூலவரான சந்தான ஸ்ரீனிவாச பெருமாளுக்கு, வெள்ளிக் கிழமை அபிஷேகம் நடைபெறும். மேலும், திருக்கல்யாண மகோற்சவம், சொர்ண புஷ்பார்ச்சனை போன்றவைகளும் நடைபெறும்.

புரட்டாசி மாதம் அன்று நான்கு சனிக்கிழமைகளிலும் விசேஷ அலங்காரத்துடன் பெருமாள் சேவைசாதிக்கிறார். ஆனிமாதம் ரேவதி நட்சத்திரத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம், பிரதி பௌர்ணமி கருடசேவை, பவித்தோற்சவம் போன்றவை சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், மார்கழி மாதத்தில் விடியற் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள் முடிந்து, வைகுண்ட ஏகாதசி அன்று “பரமபத வாசல்’’ திறந்து, அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்.

போகிப்பண்டிகையன்று, ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகிறது. மேலும், தாயாருக்கு ஆடி – தை மாதத்திலும், நவராத்திரி போன்ற நாட்களிலும் ஊஞ்சல் சேவை நடைபெறும். ஆழ்வார்கள் பாசுரத்தின் படியே இந்த கோயில்களின் நடைமுறைகள் இருப்பதினால், கிட்டத்தட்ட திவ்ய தேசமாகவே கருதப்படுகிறது, இந்த கோயில்.

அத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருக்கோயிலில், 12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகின்ற கும்பாபிஷேகம் நடைபெறயிருக்கிறது. அதனையொட்டி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி பாலாலய சம்ப்ரோக்ஷணம் அதாவது கோயிலை புதுப்பித்தல் நடைபெற்றது. அந்த பாலாலயத்தை தொடர்ந்து, கோயிலின் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வேலைப் பாடுகள் எல்லாம் முடிவடைந்தவுடன், தேதி நிர்ணயித்து, சந்தான லட்சுமி சமேத சந்தான ஸ்ரீனிவாசப் பெருமானுடைய மஹாசம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெறயிருக்கிறது. கோயில் திறந்திருக்கும் நேரம்: ஞாயிறு முதல் வெள்ளி வரை – காலை: 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை. மாலை: 4.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை. சனிக்கிழமை அன்று காலை 5.30 மணிக்கு திறந்து இரவு 09.30 மணி வரை.

முகவரி: ஸ்ரீ சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம், வெள்ளார் தெரு, முகப்பேர், சென்னை – 37.
தொடர்புக்கு: 90030 32742.

ரா.ரெங்கராஜன்

You may also like

Leave a Comment

twelve − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi