திருமலை: திருப்பதியில் 23ம் தேதி நடைபெறும் நிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு யாக டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்படும் என இணை செயல் அதிகாரி தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்து சனாதன தர்மபிரசாரத்தின் ஒரு பகுதியாக அலிபிரியில் உள்ள சப்த பசு பிரதட்சண மந்திரத்தில் இந்த மாதம் 23ம் தேதி முதல் னிவாச திவ்ய அனுகிரக சிறப்பு யாகம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அலிபிரியில் யாகத்திற்கான ஏற்பாடுகளை இணை செயல் அதிகாரி வீரபிரம்மன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, யாகம் நடத்துவதற்கும், பக்தர்கள் அமர்வதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் இதுகுறித்து வீரபிரம்மன் கூறுகையில், யாகத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் நவம்பர் 16ம் தேதி(இன்று) மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. டிக்கெட் விலை ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டில் இருவர் அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்’ என்றார்.