பிராடிஸ்லாவா: கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளின் ஒன்றான ஸ்லோவாக்கியாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் மாஜி அதிபரே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1993ல் செக்கோஸ்லோவாக்கியா பிரிவினைக்கு பிறகு உருவான சிறிய நாடு ஸ்லோவாக்கியா. அதன் மக்கள் தொகை சுமார் 55 லட்சம். கடந்த மே மாதத்திலிருந்து அங்கு காபந்து அரசு ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் அங்கு பொதுத்தேர்தல் நடந்த நிலையில் அதில் மாஜி அதிபரும் இடதுசாரி ஸ்மெர் கட்சி தலைவருமான ராபர்ட் பிகோ (59) வெற்றி பெற்றுள்ளார். அவர் கடந்த 2018ல் அவரது ஆட்சியில் நடந்த ஊழல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தியதாக பத்திரிக்கையாளர் குசியாக் என்பவரை கொன்ற வழக்கில் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
முந்தைய ஆட்சிகளில் ரஷ்யா, உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஸ்லோவாக்கியா ராணுவ உதவியை அளித்தது. போர் அகதிகளாக வரும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவும் அளித்தது. இந்த நிலையில் ராபர்ட் பிகோ தான் வென்றால் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவும், அமெரிக்க எதிர்ப்பும், உக்ரைனுக்கு ராணுவ உதவியை நிறுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஊழல் பின்னணி கொண்ட அவரது வெற்றி ஸ்லோவாக்கியாவுக்கு கெட்ட செய்தி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.