பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர்ப் பகுதியான நான்டெரில் அல்ஜீரியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மவ்நியா என்ற பெண்ணின் 17 வயது மகன் நிஹல் மெர்டொவ்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களின் நடவடிக்கையால் அப்பகுதியே கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதுபற்றி எந்த கவலையும் இல்லாமல் ஒரு இளைஞர் சான்ட்விச்சை வெளுத்துக்கட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், ஒருபக்கம் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர மோதல் நடக்கிறது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை அதிரடியாக வீச, உயிருக்குப் பயந்து பலரும் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்த களேபரத்திலும் ஒரு வாலிபர் ஒரு ஓரமாக அமர்ந்து, சான்விட்ச்ஐ ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதைத்தான் ஒருவர் வீடியோ எடுத்து வலைதளத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது. இதை ஆதரித்தும், கண்டித்தும் நெட்டிசன்கள் வெளியிடும் கருத்துகளும் பரவி வருகிறது.