Wednesday, June 12, 2024
Home » ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது: ராமதாஸ்

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது: ராமதாஸ்

by Porselvi

சென்னை: தமிழகத்தின் நலனுக்கு எதிரான, ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் நோக்குடன் அங்கு 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க தமிழக அரசிடம் மத்திய அரசின் ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் விளை நிலங்களை மலடாக்கி, பாலைவனமாக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது. இந்த பேரழிவுத் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை வட்டத்திலும் இந்த சோதனை கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இத்தகைய கிணறுகளை அமைக்க முடியாது என்பதால், 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனைத்தும் ஏறக் குறைய 3000 அடி ஆழத்துக்கு அமைக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு கிணறும் ரூ.33.75 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வேதிப் பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவில் உள்ள மீத்தேன் எரிவாயு எவ்வாறு எடுக்கப்படுமோ, அதேபோல் தான் ஹைட்ரோகார்பன் வளமும் நீரியல் விரிசல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும்.

இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இந்தத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், ராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முயல்வது இது முதல் முறையல்ல.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையின் அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலத்தின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரியின் காரைக்கால், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க மத்திய அரசிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்திருந்தது. அப்போதே இந்தத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்கக் கூடாது என்று நான் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், அதன் பின் மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதிகளை பெற்று விட்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம், அடுத்தக் கட்டமாக இப்போது தமிழக அரசின் சுற்றுச்சூழல் அனுமது கோரி விண்ணப்பித்திருக்கிறது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்துக்கு தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது தமிழகத்தின் நலன்களை தாரை வார்ப்பதற்கு ஒப்பானது ஆகும்.

தமிழகத்தில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த இதுவரை 5 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படி மொத்தம் 7250 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டால், அடுத்தடுத்து பிற திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன் பின் தமிழகத்தின் பெரும் பகுதி பாலைவனமாவதை யாராலும் தடுக்க முடியாது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், மத்திய அரசால் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போது, பாமக கொடுத்த அழுத்தத்தால், தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டமும் அனுமதிக்கப் படாது என்று சட்டப்பேரவையில் அரசு வாக்குறுதி அளித்தது. அதைத் தொடர்ந்து தான் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில் இப்போதைய அரசும் அதே நிலைப்பாட்டைத் தொடர வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு வெளியில் இருந்தாலும் கூட, அங்கும் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால், தமிழகத்தின் நலனுக்கு எதிரான, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இது தொடர்பாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் திடம் ஓ.என்.ஜி.சி தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.” என ராமதாஸ் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

19 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi