நியூயார்க்: ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று ஐ.நா சபையில் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் பேசும்போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்’ என்று கோரினார். அதற்கு இந்தியாவின் தரப்பில் முதன்மை செயலாளர் பெடல் கெலாட் அளித்த பதிலடியில், ‘ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எங்களது நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை.
அவர்கள் மற்றவர்களின் உள் விவகாரங்களில் எட்டிப்பார்க்கும் முன், தங்களது நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் கோட்டையாக பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தானை பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாற்றியுள்ளனர். ஐ.நா சபையை தவறாகப் பயன்படுத்துவது பாகிஸ்தானுக்கு பழக்கமாகிவிட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த இந்து, சீக்கியர், கிறிஸ்தவ பெண்களின் நிலைமை, உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது.
தெற்காசியாவில் அமைதி நிலவ வேண்டுமானால், சர்வதேச எல்லையை தாண்டி, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதிகளின் மறைவிடங்களை மூட வேண்டும். பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும். பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறினார்.