அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஒசூர், சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் பூக்கள் வருகிறது. விசேஷ நாட்கள், திருமண உள்ளிட்ட முகூர்த்த நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிந்துள்ளது. இன்று காலை ஒரு கிலோ மல்லி, முல்லை ஆகிய பூக்கள் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கனகாம்பரம் 250க்கும் சமங்கி 20க்கும் சாக்லெட் ரோஸ் 50க்கும் பன்னீர் ரோஸ் 30க்கும் அரளி பூ 150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் விசேஷ நாட்கள், திருமண உள்ளிட்ட முகூர்த்த நாட்கள் முடிந்துவிட்டதால் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. அனைத்து பூக்களின் விலை குறைந்த நிலையில் சென்னை புறநகர் சில்லரை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர். வரும் 19ம் தேதி அமாவாசை நாட்கள் என்பதால் பூக்களின் விலை உயரும்’ என்றார்.