சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் 2வது நாளாக என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கான பணி நடந்து வருகிறது. 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் நிலக்கரி சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணியை துவங்க முடிவு செய்து கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழகன், சாத்தப்பாடி, ஊ.ஆதனூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் 2011ம் ஆண்டில் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடாக நிர்ணயம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
என்.எல்.சி. நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்தாமல் இருந்து வந்ததால் விவசாயிகள் வழக்கம்போல் விவசாயம் செய்து வந்தனர். கையகப்படுத்திய விளைநில பகுதிகளில் சுரங்கம் அமைக்கவும், புதிய பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணிகளை நேற்று முன்தினம் வளையமாதேவி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் துவங்கியது. 30க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியை துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் மீது பாமகவினர் உள்ளிட்டோர் கல்வீசி கண்ணாடிகளை உடைத்ததால் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் நேற்று 2வது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. வளையமாதேவி கிராமத்தில் இருந்து கரிவெட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் வடிகால் வாய்க்கால் அமைப்பது, மேலும் அந்தப் பகுதியில் இருந்து தர்மநல்லூர் கிராமம் வரை வயல் பகுதியில் வடிகால் வாய்க்கால் வெட்டுவது போன்ற பணிகள் நடந்து வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி எஸ்பிக்கள் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் எறும்பூர், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு, ஆனைவாரி, தர்மநல்லூர் ஆகிய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.