Tuesday, February 27, 2024
Home » கேதுவுக்கு வைடூரியம்

கேதுவுக்கு வைடூரியம்

by Kalaivani Saravanan

கேது கிரகத்துக்குரிய ராசி கல் வைடூரியமாகும். இதனை ஆங்கிலத்தில் கேட்ஸ் ஐ (CATS I), பூனைக் கண் என்பர். ஆழ்ந்த பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் இக்கல் இருக்கும். நடுவில் ஒரு வெண் ரேகை காணப்படும். இந்த வெள்ளை கோடு பிரகாசமாக இருந்தால் மட்டுமே இக்கல் நல்லபலனைத் தரும். கேது ஞானகாரகன் என்றாலும், அவன் தரும் பலன்கள் நிரந்தரமானவை. ராகுபோல், கொடுத்து கெடுக்க மாட்டான். கேது, ராகுவைப் போல் ஏமாற்றுக்காரன் அல்ல. எதையும் நிதானமாகக் கொடுப்பான். ஆனால், நிரந்தரமாகக் கொடுப்பான் என்பதால், நல்ல வைடூரியமாக பார்த்து வாங்கி அணிந்தால், முழுமையான பலன் கிடைக்கும்.

எங்குக் கிடைக்கும்?

கேரளாவில் நல்ல வைடூரியங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஒரிசாவிலும் கிடைக்கும். அவை சற்று தரம் குறைந்திருப்பதால், விலையும் குறைவு. இந்தியா தவிர, அமெரிக்கா, பிரேசில், இலங்கை முதலிய நாடுகளிலும வைடூரியம் கிடைக்கிறது.

யார் அணியலாம்?

கேது திசை நடப்பவர், கேது நட்சத்திரங்களில் பிறந்தவர், கேது புத்தி நடப்பவர், ஏழாம் எண்காரர்கள் ஆகியோர்கள் அணியலாம். சர்ப்பதோஷம் உடையவர்கள் அணிவது நல்லது. திருமணம், கருவுறுதல் போன்றவற்றில் தோசம் உண்டாக்கும் கால சர்ப்பதோஷம், நாகதோஷம், நாக கன்னிதோஷம் இருப்போர் அணியலாம்.

நிறமும் தரமும்

வைடூரியத்தில், மஞ்சள் அல்லது பழுப்பு நிறம் அதிகமாக இருந்தால், புலி கண் என்று அழைப்பர். ஆழ்ந்த பச்சை அதிகமாகி கொஞ்சம் கருப்படித்து இருந்தால், அதனை எருமைக் கண் என்பர். கல்லில் உள்ளே புள்ளிகள் தெரிந்தாலும், பள்ளம் இருந்தாலும், அந்தக் கல்லை வாங்கி அணியக் கூடாது.

என்னென்ன நோய் தீரும்?

கேது பகவான் மனக் கலக்கம், மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்தை தருகின்ற கிரகம் ஆகும். கேதுவின் பாதிப்புக்கு உள்ளானோர் தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டனர் என்று அஞ்சி நடுங்குவர். எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார். மந்திரவாதிகளையும் செய்வினை சூனியம் ஏவல் எடுப்போரையும் வைப்போரையும் தேடித் தேடிப் போய், தம் நிம்மதியைத் தொலைத்து சாவார்கள். சிலர், தன்னை, இறந்தவர்களின் ஆவி, பேய், பிசாசு தாக்க வருவதாகப் பயந்து நடுங்குவார்கள்.

தன்னை யாரோ கொல்ல வருவதாக அடிக்கடி சொல்லி, வீட்டில் இருப்போரின் நிம்மதியை கெடுப்பார்கள். சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டதாக உற்றார் உறவினர்களிடம் புகார் செய்வர். இவர்களுக்கு வைடூரியம், நல்ல பலனைத் தரும். வீண் அச்சத்தைப்போக்கும். மன தைரியத்தையும் மற்றவர் மீது நன்னம்பிக்கையையும் ஊட்டும். ராகு கேதுக்கள், பாம்பு கிரகங்கள் என்பதால், தனது திசாபுத்திகளில் அல்லது ராசி லக்கினத்தை நோக்கும் போது, தோல் நோயை உண்டாக்கும். தோலில் தடிப்பு, அரிப்பு, சொறி, நீர் வடிதல், கருப்பு தேமல் அல்லது சிவப்பு தேமல் படர்தல் உண்டாகும்.

கால் கை இடுக்குகளில் அரிப்பு, கருமை படர்தல், முட்டி, கணுக்கால்களில் கருமை படிந்து தோல் தடித்துப் போதல், தோல் சொரசொர வென்று தடித்துக் காணப்படுதல், தோல் செதில் செதிலாக உதிர்தல், சிவப்பு கொப்புளங்கள் போன்ற நோய்கள் தோன்றும். வைடூரியம் அணிவதால் இந்த நோய்த் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

கேதுவின் ஆதிக்கத்தில் இருப்போர், இன்றோவேர்ட் எனப்படும், உள்மன நோக்கர்களாக இருப்பார்கள். எதையும் வெளிப்படையாக யாரிடமும் பேசமாட்டார்கள். இவர்களுக்கு நண்பர் பகைவர் என்று எவரும் இருக்க மாட்டார். எல்லோர் மீதும் அச்சமும் சந்தேகமும் இருக்கும். அதனால், எல்லாவற்றையும் தன் மனதுக்குள் போட்டு மூடி வைத்து உள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பார்.

இவர்கள் வைடூரியம் அணிவதால், மன இறுக்கம் தளர்ந்து யாராவது ஒரு சிலரிடம் மனம் விட்டுப் பேசுவர். எல்லாவற்றையும் சிலரிடம் சொல்லி பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்க இயலாது. கொஞ்சம் இதயச் சன்னலைத் திறந்து வைத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வார். தோல்நோய், மனோபயம், பேய் – பிசாசு பயத்தில் இருந்து விடுபட, மனதில் தைரியமும் தனக்கு வந்த நோய் தீரும் என்ற நம்பிக்கையும் பெற வைடூரியம் அணியலாம்.

ஆன்மிக உணர்வு செழிக்கும்

கேது, நல்ல இடத்தில் இருந்து நற்பலன் தரும் நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் ஆன்மிகத்தில் திளைப்பார். ஸ்தல யாத்திரை மேற்கொள்வர். பக்தி புத்தகங்கள் படித்து பாராயணம் செய்யத் தொடங்குவர். கோயில் விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார். தவம், யோகம், யாத்திரை போன்ற பற்றற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவார். இவரும் வைடூரியக் கல் பதித்த தங்கமோதிரம் ஒன்றைக் கை விரலில் அணிந்தால், ஆன்மிக அனுபவத்தில் மகிழ்ச்சியாகத் திளைப்பார் அல்லது துறவி போலாகி வீட்டை விட்டு, ஊரைவிட்டு பழனி, சதுரகிரி, வெள்ளியங்கிரி, திருவண்ணாமலை போன்ற இடங்களுக்குச் சென்று சாமியாராக சந்நியாசியாகப் போய்விடுவார்.

இளைஞர்கள் அணியலாம்

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்த இளைஞர்கள், வைடூரியம் அணிய வேண்டும். இதனால், இவர்களுக்கு படிப்பில் ஃபெயிலாகி விடுவோமோ என்ற அச்சம் நீங்கும். தற்கொலை மனப்பான்மை தோன்றாது. மனம் லேசாகி மகிழ்ச்சியில் திளைக்கும்.

தொழிலில் முன்னேற…

எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும், கேது தோஷம் இருந்தால், எந்நாளும் தன மோதிர விரலில் வைடூரியம் பதித்த மோதிரத்தை அணிவதால், தொழில் மேன்மை பெறும். செல்வச் செழிப்பு உண்டாகும். மனம் திடமாக இருந்து, நல்ல செயல் திட்டங்களை உருவாக்கி, திறம்பட செயல்பட உதவும்.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள்

வைடூரியக் கல் பதித்த மோதிரம் அல்லது தாயத்தை சிறு குழந்தைகள் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் மற்றும் முதியவர்களுக்கு அணிவிக்கலாம். அவர்களின் ஆன்மிகப் பயணமும் சிந்தனையும் தாறுமாறாகப் போய்விடாமல் நெறிப்படுத்தி செப்பனிடப்படும். வைடூரியம், மனதை ஒருநிலைப்படுத்தும் அச்சம், பதட்டம் ஆகியவற்றில் இருந்து விடுவிக்கும். ‘மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்’ என்பது திருமூலர் வாக்கு. மனதைச் செம்மைப்படுத்த வைடூரியம் உதவும்.

தொகுப்பு: பிரபா எஸ்.ராஜேஷ்

You may also like

Leave a Comment

20 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi