சென்னை: பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காகிதமாக பார்க்காமல் அவர்களின் வாழ்க்கையாக பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை கூறினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ.35.83 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அவர் பேசியதாவது:
முதல்வரின் முகவரியில் தரப்படும் மனுக்களுக்கு தரமான பதில்கள் தருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை, குறைகளை மனுக்கள் மூலமாகத்தான் தெரிவிப்பார்கள். இந்த மனுக்களின் மீது குறித்த காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். மனுக்களுக்கு பதில் தந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இல்லாமல் உங்கள் துறைக்கானது அல்ல என்று தெரிந்தாலும் அந்த நபருக்கு வேறு ஏதேனும் வகையிலாவது உதவலாம் என்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் மனுதாரருக்கு உதவ வேண்டும்.
குறிப்பாக ஏழை, எளிய மக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோர் தரும் மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் அளிக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் தரும் மனுக்களை வெறும் கடிதமாக, பேப்பராக பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையாக பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அடிக்கடி தெரிவிப்பார். இதனை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு மிகச் சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.