புதுடெல்லி: இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் சரத்பவார் வீட்டில் இன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம்ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதலில் பாட்னாவிலும், அதைத்தொடர்ந்து பெங்களூருவிலும், கடைசியாக ஆக.31 மற்றும் செப்.1ல் மும்பையிலும் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
அதன்பின் தொகுதி பங்கீடு குறித்தும், பிரசார யுக்தியை விரைவுபடுத்தவும் தனித்தனியாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக இந்த மாத இறுதிக்குள் இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடிக்க முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. இதற்கான முதல் கூட்டம் இன்று மாலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் டெல்லி இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மொத்தம் 14 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அமலாக்க இயக்குனரகம் விசாரணைக்கு இன்று அபிஷேக் பானர்ஜி ஆஜராக உள்ளதால் அவர் பங்கேற்க மாட்டார். மற்ற தலைவர்கள் சரத்பவார் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தி தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.