Sunday, May 12, 2024
Home » நாயன்மார் பூஜித்த திருமால்

நாயன்மார் பூஜித்த திருமால்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

“சிலந்தியும் ஆனைக்காவில் – திரு நிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே, கோச்செங்கணானும் ஆக,
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலம் தனில் பிறப்பித்திட்டார் – குறுக்கை வீரட்டனாரே’’

நாலாம் திருமுறையில், நாற்பத்தி ஒன்பதாம் பதிகத்தில் மூன்றாவது பாடல் இது. திருநாவுக்கரசு சுவாமிகளால், அருளிச் செய்யப்பட்ட பாடல் இது.திருவானைக்காவிற் பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரைஉடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டு மன்னர் மரபிலே “கோச்செங்கண்ணான்’’ என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்துவிட்டார் என்பது மேலே நாம் கண்ட பாடலின் திரண்ட பொருளாகும். கயிலாயத்தில் புஷ்பதந்தன் மற்றும் மாலியவான் என்ற இரு சிவ கணங்கள் இருந்தார்கள். இருவருக்குள் யார் சிறந்த சிவ தொண்டு புரிகிறார்கள் என்ற பிணக்கு ஏற்பட்டது. வாய் சண்டை முற்றியது. மாலியவான், புஷ்பதந்தனை யானையாகும் படி சபித்தார். புஷ்ப தந்தன் மாலியவானை சிலந்தியாகும் படி சபித்தார்.

இருவரும் காவிரி பாய்ந்து வளம் சேர்க்கும், வெண் நாவலங்காட்டிலே முறையே சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்தார்கள். அந்தக் காட்டிலே எழுந்தருளி இருந்த சிவலிங்கபிரானுக்கு யானையாக பிறந்த புஷ்பதந்தன், துதிக்கையில் நீரை முகந்து கொண்டு வந்து அபிஷேகம் செய்து வந்தது. சிலந்தியாக பிறந்த மாலியவான், சிவலிங்கபிரான் மரத்தின் நிழலில் இருந்ததால், மரத்தில் இருந்து காய்ந்த சருகுகள் அவர் மீது விழாத படி வாயில் இருந்து வரும் நூலால் பந்தலிட்டது.

மறுநாள் பூஜைக்கு வந்த யானை, சிலந்தி வலையை அசுத்தம் என்று எண்ணி பிடிங்கி எறிந்தது. அதனை தொடர்ந்து வரும் சிலந்தி மீண்டும் பந்தலிடும். மீண்டும் யானை வந்து அதை தகர்க்கும் இப்படியே பல நாட்கள் சென்றது. இதனால் கோபமடைந்த சிலந்தி, யானையின் துதிக்கை வழியே அதன் மூளைக்குள் சென்று கடித்தது. யானை வலி தாங்காமல் அலறிய படி மரித்தது.

இறைவன் திருக்காட்சி தந்து யானைக்கு சாப விமோசனமும், சிவபதமும் தந்தார். ஆனால் சிலந்தி பூமியில் இன்னமும் சில காலம் தங்கி ஈசனுக்கு தொண்டு புரிய விரும்பியது. ஆதலால், சோழர் குலத்தில் பிறந்து பல ஆலயங்கள் எழுப்ப இறைவன் அருளினார். சோழ மாமன்னனாக திகழ்ந்த, சுபதேவனுக்கும், அவன் மனைவி கமலவதிக்கும் வெகு நாட்களாக குழந்தை பாக்கியமே இல்லை. ஆகவே, பிள்ளை வரம் வேண்டி தில்லை நடராஜரை இருவரும் சரண் புகுந்தார்கள்.

ஈசன் திருவருளால் மாலியவான், கமலவதி மகாராணியின் வயிற்றில் கருவாக சென்று அடைந்தான். நாட்கள் சென்றது. கமலவதிக்கு பேறு வலி வந்தது. ஆனால், ஜோதிட வல்லுனர்கள் இன்னமும் ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறந்தால், குழந்தை உலகை எல்லாம் ஆளும் பெரும் அரசனாக திகழும் என்று சொன்னார்கள். அதைக் கேட்ட பேரரசி, தன்னை தலை கீழே கட்டி தொங்க விடுமாறு தோழிகளுக்கு உத்தரவிட்டாள். தோழிகளும் அஞ்சியபடியே அரசியின் கட்டளையை நிறைவேற்றினார்கள்.

உரிய நேரம் வந்ததும் மகாராணியின் கட்டு அவிழ்க்கப்பட்டது. குழந்தையும் குறித்த நேரத்தில் பிறந்தது. ஆனால் பல காலம் தாய் தலை கீழாக இருந்ததால், குழந்தையின் கண்கள் சிகப்பாகி இருந்தது. குழந்தையை கொண்டு வந்து அரசியின் கையில் கொடுத்தார்கள். அரசியும் குழந்தையை கையில் வாங்கி “என் செங்கண்ணா’’ என்று குழந்தையை அழைத்த படியே உயிரைவிட்டாள். தாயை இழந்த குழந்தையை, சுபதேவன் ஒரு குறையும் இன்றி வளர்த்தான்.

வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், போர்க்கலை, சாஸ்திரங்கள் என அந்தக் குழந்தை அனைத்தையும் கற்று தேர்ந்தது. கோசெங்கட் சோழன் என்ற பெயரோடு தக்க நேரத்தில் முடி சூட்டிக் கொண்டார். எழுபது சிவாலயங்களை கருங்கல் கோயிலாக கட்டினார். அனைத்து கோயிலையும் மாட கோயிலாக கட்டினார். அதாவது, யானையால் எளிதில் கோயில் சந்நதிக்குள் நுழைய முடியாத படி, கட்டினார். சென்ற ஜென்மத்தில் யானையால் தனது தொண்டுக்கு விளைந்த இடையூறு இனி நிகழவே கூடாது என்று அவர் இப்படி செய்தார். இது இப்படி இருக்க, அவரை கண்டு பொறாமை கொண்ட சேரனும், பாண்டியனும் சதி செய்து அவரை போரில் வீழ்த்தினர்.

தோல்வியால் மனமுடைந்த சோழன், தனது தாய்க்கு ஆரூடம் சொன்ன, நீல கண்ட ரித்விக்கை அடைந்தார். “நீங்கள் சொன்ன நாழிகையில் என்னை ஈன்றெடுக்கும் பொருட்டு என் தாய், தனது உயிரையே நீத்தார்கள். நீங்கள் குறித்த நாழிகையில் நான் பிறந்தால், மாமன்னனாக திகழ்வேன் என்று நீங்கள்தான் சொன்னீர்கள். ஆனால் இப்போது நான் சேரன் முன்பும் பாண்டியன் முன்பும் தோற்று நிற்கிறேன்! இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’’ என்று அவரை கேட்டான்.

அவன் சொன்னதை கேட்ட ரித்விக் புன்னகை பூத்தார். “கவலை படாதீர்கள் மன்னா! திருநரையூரில் வீற்றிருக்கும் ஸ்ரீநிவாச பெருமானை பூஜியுங்கள்! நீங்கள் ஆசைப்பட்டதைப் போல வெற்றி வாழ்வை வாழலாம்’’ என்று அறிவுரை சொன்னார். அவர் சொன்னது படியே திருநரையூர் சீனிவாசனை ஊன் உருக, உயிர் உருக, வழிபட்டான் கோ செங்கட் சோழன். அவனது பக்தியில் உள்ளம் இறங்கி, அந்த கார்முகில் வண்ணன் காட்சி தந்து, அவனுக்கு ஒரு தெய்வீக வாளை பரிசாக தந்தார். அந்த வாளை கொண்டு எதிரிகளை எதிர்த்து போராடி அவர்களை முறியடித்து வெற்றிவாகை சூடினான் சோழன்.

திருமாலின் கருணையால், விரும்பியதை அடைந்த சோழன், திருநறையூர் நம்பிக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தான். அதற்குரிய வேலைகளும் செவ்வனே நடந்து வந்தது. இறுதியாக குடமுழுக்கு நடத்தும் முன்பு, வைணவ ஆகமப் பெரியவர்கள் கோயிலை வந்து மேற்பார்வை இட்டார்கள். இதுவரை, எழுபது சிவன் கோயில்களை கட்டியே பழக்கப்பட்ட சோழனது சிற்பிகள், திருநரையூர் நம்பியின் கோயிலையும், வைணவ ஆகமம்படி கட்டாமல், சைவ ஆகமம்படி கட்டிவிட்டார்கள். மேற்பார்வையிட வந்த வைணவ பெரியவர்கள் அதை சுட்டிக் காட்டினார்கள். அதைக் கண்ட சோழன் பெரிதும் மனம் வருந்தி, நொந்து போனான்.

கட்டியது அனைத்தையும் தகர்த்துவிட்டு மீண்டும் புதிதாக கட்ட தீர்மானித்தான். அப்போது ஆகாசத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. “அப்பனே செங்கண்ணா! கலக்கம் வேண்டாம். ஆகமம்படி கோயில் இல்லாவிட்டாலும், நீ கட்டிய கோயிலை நான் உள்ளது படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆசிகள். வாழிய நீ! வளர்க உன் தொண்டு’’ என்று மாலவன் குரல் கோயில் கர்ப்ப கிரகத்தில் இருந்து கேட்டது. அந்த தெய்வீக குரலைக் கேட்டு, கைகளை தலை மேல் குவித்து, மெய் சிலிர்த்து உடல் நடுங்க ஆனந்த கண்ணீர் வடித்தார் சோழன்.

மேலே நாம் கண்ட சரிதத்தை, திருமங்கை ஆழ்வார்,
“செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’’

– என்றும்

“தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’’

– என்றும் பாடிப் பரவுகிறார்.

திருநரையூர் என்றும் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்தத் தலம், கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பத்து கி.மீ தொலைவில் உள்ளது. இந்த திருத்தலத்தில் நாச்சியாருக்கே முதல் மரியாதை, முன்னுரிமை எல்லாமே. முதலில் நாச்சியாருக்கு பூஜைகள் முடிந்த பின்பே, இறைவனுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது. கோயிலின் தலைவி நாச்சியார்தான், என்று உணர்த்துவது போல, கோயிலின் சாவி கொத்தும் நாச்சியாரிடம்தான் இருக்கிறது. விழா காலங்களில் முன்னே நாச்சியார் செல்ல, அவரை பின் தொடர்ந்துதான் திருமால் செல்கிறார். இந்த திருத்தலத்தின் மற்றொரு சிறப்பாக விளங்குவது கல் கருடன் ஆவார்.

விழா காலங்களில் இவர் மீது திருமாலை வைத்து, பவனி வரச் செய்வார்கள். அப்போது, தனது சந்நதியில் மிகவும் லேசாக இருக்கும் இந்த கருடனின் திரு உருவம் சந்நதியை விட்டு வெளியே வரவும், கொஞ்சம் கொஞ்சமாக எடை அதிகரிக்கிறது. அதே போல, மீண்டும் சந்நதிக்குள் கொண்டு வரும் வேளை கொஞ்சம் கொஞ்சமாக எடை குறைகிறது. இந்த அதிசயம் இன்றளவும் நடந்து வருகிறது. இந்த கோயிலுக்கு இன்னமும் பெருமைகள் ஏராளம் ஏராளம். அதை ஆயிரம் நா படைத்த ஆதி சேஷனாலும் சொல்லிவிட முடியாது. அதிசயம் அநேகம் முற்ற நாச்சியார் கோயில் சீனிவாசனை சேவித்து, கோ செங்கட் சோழனை போல நாமும் பெறுதற்கு அரிய பல பேறு பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

You may also like

Leave a Comment

9 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi