Wednesday, April 24, 2024
Home » கல்யாண வரம் அருளும் நந்திகேஸ்வரர்

கல்யாண வரம் அருளும் நந்திகேஸ்வரர்

by Lavanya

மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சித்தந்து, மழு என்னும் படையைத் தாங்கி, ஆடல் செய்தருளிய காரணத்தால், “மழுவாடி’’ என்ற பெயர் வந்தது. கால மாற்றத்தால் மழவர்பாடி என்று திரிந்தது. பிரம்ம லோகத்திலிருந்த சிவலிங்கத்தைப் புருஷாமிருக முனிவர் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பிரம்மா, அதைப் பெயர்த்தெடுக்க இயலாதபடி, ஈசன் வைரம் பாய்ந்த தூண்போல நின்றார். ஆதலால், “வஜ்ரஸ்தம்ப மூர்த்தி’’ என்ற திருநாமம் பெற்றார். மேலும், மழுவாடீசர், வைத்தியநாதர் என்றும் பல்வேறு பெயர்கள் ஈசனுக்கு உண்டு. வசிஷ்டர், தன் மனைவியான அருந்ததியுடன் இத்தலத்தில் தங்கி, ஈசனை வழிபட்டு வந்தார். பெருமானும் அவருக்குத் திருவருள் புரிந்ததுடன், அழகான பெண் மகவையும் அருளினார். அக்குழந்தைக்கு ஊர்மிளா தேவி எனப் பெயரிட்டனர்.இதே நேரத்தில், திருவையாறு எனும் தலத்தில் சிலாத மகரிஷி என்றொருவர் வாழ்ந்து வந்தார். சிவ நெறியில் பிறழாதவர்.

ஒருநாள், வேள்வி செய்வதற்காக நிலத்தை உழுதபோது, அழகிய பெட்டியில் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டார். குழந்தை யார் எனப் புரிந்து கொண்டார். உச்சிமுகர்ந்தார். குழந்தையை நெஞ்சோடு அணைத்து வீடு நோக்கி நடந்தார். மனைவியிடம் குழந்தையை கொடுக்க, அவள் மட்டிலாத மகிழ்ச்சி பெற்றாள்.குழந்தையை மாற்றி மாற்றி கொஞ்சினார்கள். ஊரை அழைத்து கொண்டாடினார்கள். பெரியோர்கள், குழந்தையின் அங்க லட்சணத்தைப் பார்த்து வியந்து, வணங்கிவிட்டுச் சென்றார்கள். குழந்தைகள் இருவரும் வெவ்வேறு இடங்களில் வளர்ந்தார்கள். வளரவளரசிவக்கொழுந்தாய் சிவந்தார்கள். காலத்தை எதிர்நோக்கி கனிந்திருந்தார்கள். திருமண நேரம் வர காத்திருந்தார்கள். ஈசனும் அந்நேரத்தை குறித்துக் கொண்டார். தெரிவிக்க ஆயத்தமானார். வசிஷ்டரும் தன் மகளுக்கு மணப்பருவம் நெருங்கியதை உணர்ந்தார். திருவையாறிலுள்ள சிலாத முனிவரின் புதல்வரான நந்திகேஸ்வரருக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தார்.

அவ்விஷயத்தை பெரியோர்கள் மூலம் தெரியப்படுத்தினார். சிலாத முனிவர், தன் சுற்றத்தோடு மழபாடிக்கு எழுந்தருளினார். ஊரே திரண்டு நிற்க, சகல தேவர்களும் எழுந்தருள, ஈசனும் அம்பாளும் கருணையை மழையாய் பொழிந்தார்கள். ஊரே வேத மணம் கமழ்ந்தது. பங்குனி மாதம், புனர்பூச நன்னாளில், நந்திகேஸ்வரருக்கும் ஊர்மிளா தேவி என்ற சுயம்பிரபா தேவிக்கும் வெகு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை இக்கோயிலில், நந்திகேஸ்வரரின் திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது. கல்யாண தினத்தன்று, திருவையாறு பஞ்சந்தீஸ்வரர், அன்னை தர்மசம்வர்த்தினி சமேதராக விடியற்காலையே திருவையாறிலிருந்து கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு, மேளதாளங்களுடன் கொள்ளிட நதியைக் கடந்து, பிற்பகல் திருமழபாடி எழுந்தருளுகிறார். திருமழபாடித் திருக்கோயிலில், சுந்தராம்பிகா சமேதராக வைத்தியநாத ஸ்வாமி எழுந்தருளியிருப்பார்.

இவர்கள் முன்னிலையில் சிலாத முனிவருடைய திருக்குமாரரான நந்திகேஸ்வரனுக்கும், வசிஷ்ட முனிவரின் அருமைப் புதல்வியான சுயம்பிரபா தேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு கோலாகலமாக நடைபெறும். இந்த வைபவத்தைக் கண்டுகளிக்க, மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். திருக்கல்யாணம் முடிந்தவுடன், பஞ்சந்தீஸ்வரர் திருவையாறுக்கு எழுந்தருளுவார். இத்திருக்கல்யாண வைபோகத்தைக் கண்டுகளித்தால், கல்யாணமாகாதவர்களுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் நடப்பதைக் கண்கூடாகக் காண்கிறார்கள். இக்கோயிலில், நவக்கிரகங்கள் இல்லை. மாறாக ஸ்வாமி சந்நதியில் மூன்று குழிகள் இருக்கின்றன. அதற்கு நாள்தோறும் அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும். சிபிச் சக்கரவர்த்திக்கு கிரக தோஷங்கள் நீங்கிய தலம். நான்கு திசைகளிலும் ஐயப்பன், ஐயனார் கோயில்கள் உள்ளன. இத்தலத்து ஈசனை மறந்து, கடந்து சென்ற சுந்தரரை, ‘மழபாடியை மறந்தாயோ’ என்று சிவபெருமான் அவருடைய கனவில் வந்து நினைப்பூட்டிய ஒப்பற்ற சிறப்புடைய சிவத்தலம்.

கல்யாணசுந்தரர், அதிகார நந்தி, சுயம்பிரபா தேவி, அகத்தியர், சுந்தரர் முதலியோர் சிலை வடிவமாக இருக்கின்றனர். இவை மிகவும் பழமையானவை. நடராஜ மூர்த்தி மண்டபத்தில், பல சித்திர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.இக்கோயிலில், தட்சிணாமூர்த்திக்கு இரண்டு சிலைகள் உள்ளன. பழமையான வெண்கலப் பாவை விளக்கொன்றுள்ளது. ஐயடிகள் காடவர்கோன் நாயனார், இந்தத் தலத்தை குறித்துப் பாடல்கள் இயற்றி யிருக்கிறார். அதுபோல, கமலை ஞானப் பிரகாச தேசிகர், திருமழுவாடிப் புராணம் என்ற அழகிய நூலை இயற்றியிருக்கிறார். இக்கோயிலில், நாள்தோறும் காலை, உச்சி, மாலை, அர்த்த சாமம் ஆகிய நான்கு காலங்களில் அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும், மாசி மக உற்சவம் பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. திருமழபாடி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. திருவையாறிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலம், கொள்ளிட நதிக்கு அருகேயே அமைந்துள்ளன. அரியலூர், திருவையாறு, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

ஜெயசெல்வி

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi