Friday, April 19, 2024
Home » “மோடி அவர்களுக்கு திமுகவை குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை” -முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி!

“மோடி அவர்களுக்கு திமுகவை குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை” -முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி!

by Neethimaan

சென்னை: இந்திய ஒன்றிய ஆட்சி மாற்றமே இனிய பிறந்தநாள் பரிசாகும் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; பிறந்தது முதலே தி.மு.க.காரன் என்பதுதான் என் நிரந்தரப் பெருமிதம். அதற்குக் காரணம், நம்மை இன்றும் இயக்கும் ஆற்றலாக விளங்குபவர் கலைஞர். எனக்கு நினைவு தெரிந்த வயது முதல், என் பிறந்தநாளான மார்ச் 1-ஆம் நாளன்று தலைவர் கலைஞரையும், தாயார் தயாளு அம்மா அவர்களையும் வணங்கி வாழ்த்துகள் பெறுவதே என் முதல் கடமையாக இருக்கும். இப்போதும் தலைவர் கலைஞர் படத்தின் முன் வணங்குகிறேன். அம்மாவை அரவணைத்து வாழ்த்து பெறுகிறேன்.

உடன்பிறப்புகளாம் உங்கள் முகம் கண்டு உவகை கொள்கிறேன். உங்களின் வாழ்த்துகள்தான், நான் ஓயாமல் உழைத்திட ஊக்கம் தருகின்றன. நம் உயிர்நிகர் கலைஞரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சென்னை கடற்கரையில் பேரறிஞர் அண்ணா துயிலுமிடத்திற்குப் பக்கத்தில், சட்டப் போராட்டத்தின் வழியாக இடத்தைப் பெற்று, முத்தமிழறிஞர் கலைஞர் நிரந்தர ஓய்வெடுத்திடச் செய்தோம். அப்போது, கழகத்தின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமையவில்லை. அடுத்த மூன்றாண்டுக்குள் ஆட்சி அமைந்தபிறகு, தன் அண்ணன் அருகில் ஓய்வெடுக்கும் தலைவருக்கு நினைவிடம் எழுப்பிடத் தீர்மானித்தோம்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தை மறு உருவாக்கம் செய்தோம். கலைஞரின் நினைவிடத்தை ஒரு வரலாற்றுச் சின்னமாக வடிவமைத்து, பிப்ரவரி 26-ஆம் நாள் அதனைப் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைத்துள்ளேன். வருங்காலத் தலைமுறையினர் கலைஞரை அறிந்து கொள்வதற்கும், அவரால் தங்கள் முன்னோரும், தாங்களும் பெற்றுள்ள பயன்களைப் புரிந்துகொள்வதற்கும் ஏற்ற வகையில் நவீனத் தொழில்நுட்பங்களால் கட்டமைக்கப்பட்ட ‘கலைஞர் உலகம்’ எனும் அருங்காட்சியகத்துடன் அந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. தன்னை உருக்கி நவீன தமிழ்நாட்டைத் தலைவர் கலைஞர் எப்படி உருவாக்கினார் என்பதை முழுமையாக அறிந்துகொள்ள இந்த நினைவிடம் ஒன்றுபோதும் என்று சொல்லத்தக்க வகையில் அது அமைந்துள்ளது.

தாய்த் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் உயர்விலும் கலைஞர் இருக்கிறார். அவர் ஆட்சியின் திட்டங்கள் காரணமாக இருக்கின்றன. நம்மை வளர்த்தெடுத்த உயிர்நிகர் தலைவராம் கலைஞரின் வழியில்தான் உங்களின் ஒருவனான நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. நாளெல்லாம் திட்டங்கள்; பொழுதெல்லாம் சாதனைகள்; அதனால் பயன்பெறும் மக்களின் வாழ்த்துகள் என அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்போரும், மனச்சாட்சி விழிக்கும்போது மனதிற்குள் பாராட்டும் வகையிலான நல்லாட்சியை வழங்கி வருகிறோம். இத்தகைய திராவிட மாடல் ஆட்சியானது இன்று இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் மாபெரும் ஜனநாயகக் கடமை ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்திட நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மிகமிக முக்கியமானதாகும். பாசிசத்தை வீழ்த்திட, மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட மாநில உரிமைகளை மீட்டிட, ‘இந்தியா’ கூட்டணி வென்றிட வேண்டும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயகக் போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும். தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது.

அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா? ஒன்றிய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட்டும்.

பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர். நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் தடைக்கல் எழுப்புகிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம். உழவர்களை, நிலத்தில் இருந்து விரட்டுவது அது. குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மையினர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரானது. எதிர்க்கிறோம். எதை எதிர்க்கிறோமோ, அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டுத்தான் எதிர்க்கிறோம்.

ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடி அவர்களுக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை.

ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன். பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிக் கட்சிகளை பா.ஜ.க. தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது. ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ ஒலித்திடும் வகையில் உடன்பிறப்புகளின் களப்பணிகள் வீடு வீடாகத் தொடரட்டும். ‘நாற்பதும் நமதே – நாடும் நமதே’ என்கிற இலக்கினை அடைந்திடும் வகையில் உங்களின் உழைப்பு அமையட்டும்.

அது இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கட்டும். அதுதான் உடன்பிறப்புகளாகிய நீங்கள் உங்களில் ஒருவனான எனக்கு வழங்கிடும் இனிய பிறந்தநாள் பரிசாகும். கலைஞருக்கு அவரது நூற்றாண்டு விழாவில் நாம் அளிக்கும் உண்மையான பரிசாகும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

5 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi