
புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் 6 நாள்கள் உகாண்டா,மொசாம்பிக் நாடுகளுக்கு செல்கிறார். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் 12ம் தேதி வரை உகாண்டாவில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின்போது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெனரல் ஜேஜி ஒடாங்கோ மற்றும் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சாரம் மூலம் இயங்கும் குடிநீர் விநியோக திட்டத்தையும் அவர் துவக்கி வைக்கிறார். மேலும், உகாண்டாவில் வர்த்தக, தொழில்துறை மற்றும் இந்திய வம்சா வளியினருடன் அவர் கலந்துரையாடுகிறார்.
அதன்பின் 13ம் தேதி மொசாம்பிக் செல்லும் அவர் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வெரோனிகா மேகாமோவை சந்தித்து பேசுகிறார். மேலும் அந்நாட்டின் அமைச்சர்கள்,நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடல் நடத்துகிறார். மொசாம்பிக்கில் வாழும் இந்தியர்களையும் அவர் சந்தித்து உரையாற்றுவார். இந்த சுற்றுபயணத்தின் மூலம் இந்தியாவுக்கும், உகாண்டா, மொசாம்பிக் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். வரும் 15ம் தேதி சுற்றுபயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்புவார் என்று தெரிவித்துள்ளது.