ஷில்லாங்: மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா நேற்று காலை இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள தாவ்கி நகரில் நடக்கும் முக்கிய அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் புறப்பட்டார். அவருக்கு முன் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் சென்றன. அப்பர் ஷில்லாங் பகுதியில் உள்ள மலைப்பாதையில் அவரது கார் வந்தபோது அவரது பைலட் வாகனம் மீது எதிரே வந்த பிக்-அப் வேன் எதிர்பாராமல் மோதியது.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட இரு வாகனங்களின் முன்புறம் சேதம் அடைந்ததாகவும், இந்த சம்பவத்தில் முதல்வருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் கே. சங்மா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.