Tuesday, June 18, 2024
Home » மீல்ஸ் சூப்பர்…மினி டிபனும் சூப்பர்…

மீல்ஸ் சூப்பர்…மினி டிபனும் சூப்பர்…

by Lavanya

வடபழனியைக் கலக்கும் பட்ஜெட் ஃப்ரெண்ட்லி உணவகம்!

வடபழனி குமரன் காலனி மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீ வாசம் பவன் அந்தப் பகுதியின் லேண்ட் மார்க்காகவே மாறி வருகிறது. காலை 7 மணியில் இருந்து 10 மணி வரை கிடைக்கும் மினி டிபன் இதற்கு ஒரு முக்கிய காரணம். பொங்கல், இட்லி, பூரி, மசாலா தோசை, ஸ்வீட், காபி ஆகியவை அடங்கிய மினி டிபன் இங்கு வெறும் 60 ரூபாய்தான். இதனால் குறைந்த விலையில் ஒரு தரமான டிபன் சாப்பிடுகிறோம் என்ற நிறைவான மனதுடன் இங்கு பலரும் வந்து செல்கிறார்கள். மினி டிபன் மட்டும் இல்லை. இங்கு கிடைக்கும் மினி மீல்ஸ், ஸ்பெஷல் மீல்ஸ், நார்த் இண்டியன் தாளி என பல ரெசிபிகளும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கின்றன. எல்லாமே பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாகவும், ஆரோக்கியம் பிளஸ் டேஸ்ட் கொண்டவையாகவும் இருக்கின்றன.

கடையை நிர்வகித்து வரும் முருகன், சக்திவேல் ஆகிய இளம் சகோதரர்களைச் சந்தித்தோம். வாடிக்கையாளர்களுக்கு எந்த டிஷ் வேண்டும் என்று வாஞ்சையோடு கேட்டு, அவர்கள் கேட்கும் டிஷ்களைப் பரிமாறிக்கொண்டே நம்மிடம் பேசினர்.“எங்க மாமா முருகனும், அக்கா கணேஷ்வரியும்தான் இந்த உணவகத்தை நடத்திக்கிட்டு வராங்க. எங்களுக்கு சொந்த ஊரு விருதுநகர் மாவட்டத்துல இருக்கிற காடனேரி என்கிற கிராமம்தான். மாமா எலக்ட்ரீசியனா வேலை பார்க்குறாரு. அவரு 15 வருசத்துக்கு முன்ன சென்னை வந்துட்டாரு. நாங்களும் இங்கயே வந்துட்டோம். சென்னைல இருந்த ஒரு ஹோட்டலுக்கு மாமா எலெக்ட்ரிஷியன் வேலைக்காக போயிருக்காரு. அப்போ திடீர்னு அந்த ஹோட்டலை மூடிட்டாங்க.

அங்க இருந்த பல வட மாநில தொழிலாளர்கள் வேலை இல்லாம தவிச்சாங்க. அவங்க மாமாவுக்கு பழக்கம்ங்குறதால, மாமா கிட்ட தங்களோட கஷ்டத்தைச் சொன்னாங்க. அப்ப நாம் ஏன் ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சி இவங்களுக்கு வேலை கொடுக்கக்கூடாதுன்னு மாமா நினைச்சாரு. நாங்க இப்போ இருக்குறது நெசப்பாக்கத்துல. இந்த ஏரியாவைப் பத்தி மாமாவுக்கு நல்லா தெரியும். வடபழனி குமரி காலனி பகுதில பெரிய அளவுக்கு நல்ல சைவ உணவகங்கள் இல்ல. இதனால மாமா இந்த இடத்துல போன வருசம் ஸ்ரீ வாசம் பவனை ஆரம்பிச்சாரு. ஆரம்பிக்கும்போதே சுவையான அதேசமயம் ஆரோக்கிய உணவுகளைத்தான் தரணும்னு முடிவு பண்ணாரு.

அதேவேளையில கொஞ்சம் நார்மலான விலைக்கு கொடுக்கணும், சாதாரண ஆட்கள் கூட நம்ம ஹோட்டலுக்கு வரணும்னு நினைச்சாரு. அதன்படியே எந்த மாதிரி டிஷ் கொடுக்கணும்னு தீர்மானிச்சாரு. மாமா அவரு வேலையைப் பார்த்துக்கிட்டே இந்த ஹோட்டலை நடத்துறாரு. நான் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் படிச்சி இருக்கேன். அண்ணன் முருன் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிருக்கான். ரெண்டு பேரும் இப்போ மாமாவுக்கு உதவியா இந்த ஹோட்டலைப் பார்த்துக்கிறோம்’’ என தங்களைப் பற்றியும், தங்களின் உணவகம் பற்றியும் சுருக்கமாக அறிமுகப்படுத்தினார் இளையவரான சக்திவேல்.

அவரைத் தொடர்ந்து முருகன் பேச ஆரம்பித்தார்.“சென்னையைப் பொருத்த வரைக்கும் எல்லாருமே பரபரப்பா இருப்பாங்க. காலையில அவசரம் அவசரமா வேலைக்கு ரெடி ஆவாங்க. இதுல சில பேரு காலையில் சாப்பிடாமக் கூட போவாங்க. இல்லன்னா எதையாவது கடமைக்கு சாப்பிடுவாங்க. சிலர் காசு இல்லாம சாப்பிடாம போவாங்க. காசு வச்சிருந்தும் நல்ல சாப்பாடு சிலருக்கு கிடைக்காது. நம்ம கடைக்கு வர எல்லாரும் தரமான ஒரு மார்னிங் டிபன் சாப்பிடணும்னு மினி டிபன் போட ஆரம்பிச்சோம். பொங்கல், ஒரு இட்லி, ஒரு பூரி, ஒரு மாசாலா தோசை, வடை, ஸ்வீட், மினி காபின்னு எல்லாம் சேர்த்து வெறும் ரூ.60தான். இதுமாதிரி நிறைய ஹோட்டல்கள்ல ஆரம்பிக்கும்போது தருவாங்க.

கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சதும் அப்புறமா அதுல ரேட் அதிகப்படுத்துவாங்க. நாங்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து இன்னிக்கு வரைக்கும் 60 ரூபாய்க்கு கொடுக்குறோம். அதுக்காக டேஸ்ட்டையும் குறைக்கல. பல பேர் எங்களோட மினி டிபனுக்கு ரெகுலர் கஸ்டமர் ஆகிட்டாங்க. இதுல இருக்குற லிஸ்ட்டை வெளில போய் சாப்பிட்டோம்னா குறைஞ்சது 100 ரூபாயாவது ஆகும்னு சிலர் எங்க காதுபட பேசி இருக்காங்க. இது எங்களுக்கு ரொம்ப சந்தோசத்தைக் கொடுக்குது. அது இல்லாம பிளைன் தோசை, நெய் ரோஸ்ட், மசாலா பொடி தோசை, ஆனியன் தோசை, ஊத்தாப்பம், கல் தோசைன்னு பல அயிட்டங்கள் மார்னிங் டிபனா இங்க கிடைக்குது. மதியத்துல மினி மீல்ஸ் கொடுக்குறோம்.

சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், ஸ்வீட், சப்பாத்தி, அப்பளம்னு எல்லாம் சேர்த்து ரூ.90க்கு கொடுக்குறோம். மீல்ஸ்ல நார்மல் மீல்ஸ், ஸ்பெஷல் மீல்ஸ்னு ரெண்டு டைப்ல கொடுக்குறோம். சாம்பார், ரசம், காரக்குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசத்தோட அன்லிமிட் மீல்ஸ் ரூ.100க்கு கொடுக்குறோம். இது நார்மல் மீல்ஸ்.சாம்பார், காரக்குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், துவையல், வடை, அப்பளம், ஊறுகாய், நெய், பருப்புப்பொடி, கோபி 65, சப்பாத்தி, அப்பளம்னு ஒரு மெகா காம்போவோட அன்லிமிட் மீல்ஸ் கொடுக்குறோம். இது ரூ.140. இதேமாதிரி 200 ரூபாய்க்கு நார்த் இண்டியன் தாளி கொடுக்குறோம்.

பனீர் பட்டர் மசாலா, கடாய் வெஜ், தால், ஸ்வீட், கோபி 65, ரைத்தா, ஆனியன், லெமன், வெஜ் பிரியாணி, ஜீரா, ரைஸ், நான் சேர்ந்ததுதான் இந்த நார்த் இண்டியன் தாளி. இது இல்லாம தினசரி ஸ்பெஷலா பட்டர் நானா, கடாய் பனீர், கோபி ப்ரைட் ரைஸ்னு ஒரு காம்போ கொடுக்குறோம். இது காலை 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரைக்கும், இரவு 7 மணியில் இருந்து 11 மணி வரைக்கும் கிடைக்கும். சூப்ல வெஜ் மேஞ்சூர் சூப், வெஜ் கிளியர் சூப், டொமொட்டோ சூப், ஹாட் அண்டு சார் சூப்னு பல வெரைட்டி கொடுக்குறோம். இது சாப்பிடுறவங்களுக்கு ஒரு டிப்ரன்ட் அனுபவத்தைக் கொடுக்கும். நைட்ல விருதுநகர் காம்போன்னு ஒரு காம்போ கொடுக்குறோம். அதுல 1 இட்லி, இடியாப்பம், மெதுவடைன்னு கொடுப்போம். இது இல்லாம ஒரு நாளைக்கு ஒரு சிறுதானிய தோசை கொடுப்போம்.

ஒரு நாளுக்கு ராகி தோசை, ஒரு நாளுக்கு கம்பு தோசை, பாசிப்பருப்பு, சோள தோசைன்னு மாத்தி மாத்தி கொடுப்போம். இதை சாப்பிட்டு முடிச்சபிறகு காபி கொடுப்போம். இத்தனை அயிட்டங்கள் சேர்த்து வெறும் 99 ரூபாய்தான். தோசையில வேற வேற வெரைட்டியும் கொடுக்குறோம். மஷ்ரூம் தோசை, பனீர் தோசை, கோபி தோசை, ஸ்பெஷல் ரவா தோசைன்னு அந்த லிஸ்ட் போகும். சாயங்காலம் 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரைக்கும் சோளாபூரி இங்க கிடைக்கும். இதுக்கு சென்னா மசாலா ரொம்ப நல்லா இருக்கும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, அரிசி, கொஞ்சம் பச்சை மிளகாய் சேர்த்து செஞ்ச சுவையான அடை அவியலும் கொடுக்குறோம். எங்களோட ஸ்பெஷல் டிஷ் ஒன்னும் இருக்கு.

அது வெஜிடபிள் தோசைதான். கேரட், பீன்ஸ், கிரீன் பீஸ், தக்காளி, சின்ன வெங்காயம், கோஸ், இட்லிப்பொடி, பொட்டட்டோ மசாலா மற்றும் நெய் கலந்து செய்ற இந்த ஒரு தோசையைச் சாப்பிட்டாலே வயிறு நெறஞ்சிடும். உடம்புக்கு ஆரோக்கியமாவும் இருக்கும். நாங்க ஹோட்டல் ஆரம்பிச்சதுல இருந்து இப்ப வரைக்கும் பலர் ரெகுலர் கஸ்டமரா வராங்க. தினமும் புது கஸ்டமர்களும் வராங்க. அவங்க சாப்பிட்டுட்டு மனசுக்கு திருப்தியா போறாங்க. இந்தத் தொழில்ல இது நமக்கும் நிம்மதி தர மாதிரி இருக்கு’’ என நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார் முருகன்.

அ.உ.வீரமணி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்.

 

You may also like

Leave a Comment

16 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi