சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த வள்ளி (31), ஆயிஷா சித்திகா (30) ஆகிய இரு பெண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் மிகுந்த பதட்டத்துடனும், பயத்துடனும் காணப்பட்டதால் சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து இரு பெண் பயணிகளையும் சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தபோது, அவர்களுடைய உள்ளாடைக்குள் வைத்திருந்த பார்சல்களில் தங்க பசை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கப் பசை 2 கிலோ எடையும் அதன் மதிப்பு ரூ.1.25 கோடி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த இரண்டு பெண் பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த 2 பெண் பயணிகளையும் தங்கம் கடத்தும் கும்பல், கடத்தல் குருவிகளாக சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசிய நாட்டிற்கு அனுப்பி, இந்த தங்கத்தை கடத்தி வந்ததாக தெரிய வருகிறது. கடத்தல் கும்பல் வழக்கமாக ஆண்களை தான் அதிகமாக குருவிகளாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஆண் கடத்தல் குருவிகளை, சுங்கத்துறையினர் சுலபமாக அடையாளம் கண்டுபிடித்து விடுகின்றனர். இதனால் கடத்தல் ஆசாமிகள், குருவிகளாக தற்போது பெண்களையும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதோடு இதுவரையில் கடத்தலில் ஈடுபடாத புது முகப் பெண்களை, இதைப்போல் கடத்தல் தொழிலுக்கு ஈடுபடுத்துகின்றனர் என்று தெரிய வந்தது. இந்த இரு பெண்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய கும்பலை சுங்கத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.