சென்னை: பாஜ கொடிக்கம்பம் விவகாரத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டனர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த மாதம் 20ந் தேதி பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகில் கொடிக்கம்பம் அமைத்தற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை காவல்துறை உதவியுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றனர். அப்போது பாஜவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் ஒரு கட்டத்தில் கொடிக் கம்பத்தை அகற்ற வந்த பொக்லைன் கண்ணாடியை அடித்து உதைத்த வழக்கில், பாஜ மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, சுரேந்திரகுமார், பால வினோத்குமார், செந்தில்குமார், கன்னியப்பன், பாலகுமார் ஆகிய 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பலமுறை அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 2 வாரத்திற்கு ஜாமினில் வெளியே வரும் 6 பேரும் கானத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறி இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி சனிக்கிழமை (11ம் தேதி) நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் நேற்று 2வது நாளாக கானத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர்.