சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் கூறியதாவது: பட்ஜெட் உரையாற்றிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘மருத்துவக் கட்டமைப்பைப் பயன்படுத்தி நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்போம். இதுவரை 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் அமைத்துள்ளோம்’’ என்று பெருமை பேசியிருக்கிறார். ஆனால், மற்ற எய்ம்ஸ் மருத்துவனைகளோடு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி நிர்மலா சீதாராமன் வாயே திறக்கவில்லை. கடந்த 2015ல் ஒன்றிய பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டவே 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பிறகு எந்த கட்டுமான பணிகளும் நடக்கவில்லை.
ஒரு காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் செங்கற்களைத் திரட்டினர். அது போல இந்த எம்ய்சுக்கு செங்கல் அனுப்புவதை மக்கள் இயக்கமாக நடத்தினால் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கனவு நிஜமாகும்.அந்தவகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் செங்கல் அனுப்பும் பணியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி., எஸ்டி., பிரிவு முன்னெடுக்கும். செங்கல் அனுப்பும் இயக்கத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் திரண்டு நம் உரிமையைப் போராடிப் பெற வேண்டும் என்றார்.