Tuesday, May 14, 2024
Home » லயன் சுழலில் மூழ்கியது நியூசிலாந்து; 172 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

லயன் சுழலில் மூழ்கியது நியூசிலாந்து; 172 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

by MuthuKumar

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா 172 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 383 ரன் குவிக்க (கிரீன் 174* ரன்), நியூசிலாந்து 179 ரன்னுக்கு சுருண்டது (பிலிப்ஸ் 71, ஹென்றி 42, பிளண்டெல் 33).

204 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. 51.1 ஓவரில் 164 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (லயன் 41, கிரீன் 34, ஹெட் 29, கவாஜா 28). நியூசி. தரப்பில் பிலிப்ஸ் 5 விக்கெட் அள்ளினார். இதைத் தொடர்ந்து, 369 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்தது. ரச்சின் ரவிந்திரா 56 ரன், டேரில் மிட்செல் 12 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரச்சின் 59, பிளண்டெல் 0, பிலிப்ஸ் 7 ரன் எடுத்து லயன் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து 128 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.

ஸ்காட் 26 ரன், மேட் ஹென்றி 14, கேப்டன் சவுத்தீ 7 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் உறுதியுடன் போராடிய டேரில் மிட்செல் 38 ரன் எடுத்து (130 பந்து, 2 பவுண்டரி) ஹேசல்வுட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 196 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. வில்லியம் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸி. பந்துவீச்சில் நாதன் லயன் 27 ஓவரில் 8 மெய்டன் உள்பட 65 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஹேசல்வுட் 2, ஹெட், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸி. 172 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கேமரான் கிரீன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது.

முரளி, வார்ன் சாதனையை சமன் செய்தார் லயன்
நியூசிலாந்து அணியுடன் வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டில், ஆஸி. ஸ்பின்னர் நாதன் லயன் 2 இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் (4+6). இந்த சிறப்பான பந்துவீச்சின் மூலமாக அவர் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

* இலங்கையின் முத்தையா முரளிதரன், ஆஸி. சுழல் ஷேன் வார்ன் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தும் சாதனையை அதிகபட்சமாக 9 நாடுகளில் நிகழ்த்தி முதலிடத்தில் இருந்தனர். இந்த சாதனையை நாதன் லயன் நேற்று சமன் செய்து அவர்களுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். அவர் ஆஸி, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசி., பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
* டெஸ்ட் போட்டிகளில் லயன் 24வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட் கைப்பற்றும் 10வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் லயனுக்கு கிடைத்துள்ளது.
* டெஸ்ட் வரலாற்றில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலிலும் லயன் முதலிடம் வகிக்கிறார். அவர் இதுவரை 128 டெஸ்டில் 1501 ரன் (அதிகம் 47, சராசரி 12.72) எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீசில் கெமார் ரோச் 81 டெஸ்டில் 1174 ரன் குவித்து (அதிகம் 41, சராசரி 11.50) 2வது இடத்தில் உள்ளார்.
* ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 6வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. 2000ல் இருந்து நியூசி. சென்று விளையாடிய 11 டெஸ்டில் ஆஸி. 10ல் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

You may also like

Leave a Comment

nineteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi