
நாகை: அண்ணாமலை உளறுவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். சிதம்பரத்தில் இருந்து இன்று காலை காரில் பட்டுக்கோட்டைக்கு சென்ற அவர் வழியில் நாகை மாவட்டம் நாகூர் அருகே வாஞ்சூரில் அளித்த பேட்டி:
அண்ணாமலை இன்று ஒன்று சொல்வார், நாளை ஒன்று சொல்வார். அதனால் அவரது பேச்சை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளக்கூடாது. அவர் உளறுவதை நிறுத்த வேண்டும். அவர் ஒரு தலைவர் என்ற அடிப்படையில் பேசக் கற்று கொள்ள வேண்டும்.
புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியானதற்கு ஒன்றிய அரசு தான் காரணம். இதற்கு முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியின்போது அரியலூரில் ரயில் விபத்து நடந்தது. இதற்கு பொறுப்பேற்று அப்போது ரயில்வேத்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இப்போது நாட்டையே இருட்டடிப்பு செய்யக்கூடிய தலைவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். எது சொன்னாலும் கேட்பதில்லை. காதிலேயே வாங்கி கொள்வதில்லை.
நாடு நல்லா இருக்க வேண்டும் என்று ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார். ஆனால் அண்ணாமலை தனது உடல் நல்லா இருக்க வேண்டுமென நடைபயணம் மேற்கொள்ள போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.