Monday, May 13, 2024
Home » லலிதையின் அருள்பெற்ற ஸ்ரீபாஸ்கரராயர்

லலிதையின் அருள்பெற்ற ஸ்ரீபாஸ்கரராயர்

by Kalaivani Saravanan

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 3

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

லலிதா சகஸ்ரநாமம் என்கிற மாபெரும் ஞானச் சுரங்கத்தையும், அதில் வரும் ஆயிரம் நாமங்களையும் பார்க்கும் முன்பு எந்தெந்த மகான்கள் லலிதா சகஸ்ரநாமங்கள் குறித்து உரைகளை கொடுத்துள்ளனர் என்பதை பார்க்கலாம். ஸ்ரீவித்யா என்கிற சக்தி வழிபாட்டினுடைய முக்கிய அங்கமாக இருப்பதே லலிதா சகஸ்ரநாமம். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கின்ற அந்த மாபெரும் சக்தியை உணர்வதற்குண்டான அனைத்து வழிகளையும் இந்த சகஸ்ரநாமம் காட்டுகின்றது.

அதாவது இந்த சகஸ்ரநாமமே அந்த வழியாகவும் இருக்கின்றது. அப்படி இந்த சகஸ்ரநாமம் எப்படி வழியாக ஒவ்வொரு ஜீவனையும் செலுத்துகின்றது என்பதைக் காட்ட ஒரு முக்கியமான அவதாரம் நிகழ்ந்தது. அந்த மகானின் திருப்பெயரே ஸ்ரீ பாஸ்கரராயர் என்பதாகும். இந்த மகானே லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஆச்சரியமான உரை எழுதியிருக்கின்றார். லலிதா சகஸ்ரநாமத்திலுள்ள நாமங்கள் என்ன சொல்கின்றன, அதற்குள் பிரம்ம சொரூபம் எப்படி ஒளிர்கின்றது என்பதையே சௌபாக்கிய பாஸ்கரம் எனும் பெயரில் அற்புதமான உரையாக எழுதினார்.

இவர்தான் இந்த உரையை எழுத வேண்டுமென்பதை அம்பாள் ஒரு லீலையாகச் செய்தாள். ஒருமுறை ஆதிசங்கரர் லலிதா சகஸ்ரநாம புத்தகத்திற்கு உரை (பாஷ்யம்) எழுத பெரிதும் ஆவலுற்றார். ஒவ்வொரு முறையும் லலிதா சகஸ்ரநாமத்தை எடுத்துக் கொண்டு வரச் சொல்லும்போது சட்டென்று அங்கே ஒரு சிறுமி தோன்றி விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தையே அவரிடம் கொடுத்தாள். இவ்வாறு மூன்று முறை அந்தச் சிறுமி லலிதா சகஸ்ரநாமத்தை கொடுக்காது விஷ்ணு சகஸ்ரநாமத்தையே அளித்தாள்.

ஆதிசங்கரர் புருவம் சுருக்கினார். இதென்ன விந்தை. நான் கேட்கது அம்பாளின் லலிதா சகஸ்ரநாமம், ஆனால், இந்தச் சிறுமி கொடுப்பதோ விஷ்ணு சகஸ்ரநாமம் என்று வியந்தார். ஆஹா… இதுதான் அம்பாளின் திருவுள்ளம்போலும்… என்று எண்ணி விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கே உரை எழுதினார். மேலும், தேவியே தனது சகஸ்ரநாமத்திற்கு பாஸ்கரராயர் என்பவர் தோன்றி வியாக்கியானம் எழுத வேண்டுமென்று தேவியே நினைத்தாள் என்றும் சொல்வதுண்டு. அதனாலேயே பாஸ்கரராயர் தனக்குக் கிடைத்த பாக்கியமாக இதைக் கருதி இந்த நூலுக்கு, சௌபாக்கிய பாஸ்கரம் என்று பெயரிட்டதாகவும் சான்றோர்கள் பகர்வர்.

பாஸ்கரராயர் மகாராஷ்டிர மாநிலத்தில் சாங்கலீ அல்லது பீட் என்ற ஊரிலோ பிறந்ததாக சொல்லப்படுகின்றது. இவருடைய காலம் கி.பி. 1675 முதல் கி.பி. 1785 வரை என்று கணக்கிட்டிருக்கிறார்கள். பாஸ்கரராயர் விஸ்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தையார் பெயர் ஸ்ரீகம்பீரராயர். தாயார் பெயர் கோனமம்பா என்பதாகும். பிறந்த குழந்தையின் முகம் இளஞ்சூரியனைப்போன்ற தேஜஸால் மின்னியது. குழந்தைப் பருவத்திலேயே தனது தந்தையாரிடமிருந்து வாக்தேவதா மந்திர உபதேசத்தைப் பெற்றார். இதனாலேயே மிகவும் கடினமான சாஸ்திர, வேத, வேதாந்த நூல்களில் பிறர் அதிசயிக்கும் வகையில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

இவரது தந்தையார் இவரை காசிக்கு அழைத்துச் சென்றார். ஞான கங்கையின் படித்துறையில் தந்தையும் மகனும் நின்று அந்த அருட்காற்றை சுவாசித்தனர். காசியிலேயே உபநயனம் என்கிற பூணூல் வைபவத்தை நடத்தினார். எப்படியாவது வேத, வேதாந்தங்களையும் கிரமமாக கற்றுத் தரவேண்டுமென ஆசைப்பட்டார். ஏனெனில், குழந்தைப் பிராயத்திலேயே வேதாந்தம் கற்காமலேயே இயல்பான ஞானத்தை கைவரப் பெற்றிருந்தார். உள்ளுக்குள் உறையும் பிரம்ம ஞானத்தின் தன்மையை அறிந்திருந்தார். ஆனால், இனி அதை கிரமமாக ஒரு கல்வியாக கற்க வைக்க வேண்டுமென்றும் அவர் தந்தையார் ஆசைப்பட்டார்.

நாராயணபேட் என்கிற பிரசித்தி பெற்ற நகரத்திற்கு திரும்பினார்கள். லோகாபள்ளி என்கிற கிராமத்தில் ஸ்ரீநரசிம்மயஜ்வா என்பவரிடன் வேதங்களை கற்றுக் கொடுக்குமாறு தன் மகனோடு கம்பீரராயர் கைகூப்பி நின்றார். அடுத்த சில வருடங்களில் வேத வித்து விருட்சமாகி நிமிர்ந்தது. பின்னர், குஜராத்தைச் சேர்ந்த சிவதத்த சுக்லர் என்பவரிடம் பாஸ்கராயர் பூர்ணாபிஷேக தீட்சை பெற்று ஸ்ரீவித்யா என்கிற அம்பாளின் உபாசனையிலுள்ள் அனைத்து மந்திர, தந்திர, முத்திரைகளையும் கற்றுக் கொண்டார். முழுமையான ஸ்ரீவித்யா உபாசகரானார். பின்னர், கங்காதர வாஜ்பேயி என்பவரிடம் கௌட தர்க்க சாஸ்திரத்தை பயின்றார். அவருள் லலிதை வந்தமர்தாள். சகஸ்ரநாமங்களும் நட்சத்திரங்கள்போல இதயத்தில் பிரகாசித்தன.

இதற்குப் பிறகு ஆனந்தி என்கிற பெண்ணை மணந்து அந்தப் பெண்ணுக்கு ஸ்ரீவித்யா தீட்சை அளித்தாள். பத்மாவதியம்மாள் என்ற தீட்சா நாமத்தை சூட்டினாள். ஒருமுறை குஜராத்திற்கு விஷயம் செய்தபோது வல்லப சம்பிரதாயத்தைச் ஏந்த வித்வானை வாதத்தில் வென்றார். அடுத்த மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த சந்நியாசியையும் வாதத்தில் ஜெயித்தார். இதன் மூலம் சந்நியாசியின் பூர்வாசிரம உறவினரின் மகளான பார்வதி என்கிற பெண்ணை மணந்தார். இரு மனைவியரோடும் காசிக்குச் சென்று சோமயாகம் செய்தார். பாஸ்கரராயரின் வாழ்வில் காசியில் நடந்த முக்கிய விஷயமே, இவர் எப்பேற்பட்ட லலிதையின் பக்தராவார் என்று அறிய முடிகின்றது. அந்த லலிதாம்பாளே அவரின் இதயத்தில் அமர்ந்து இவரது வாக்கின் மூலமாக வெளிப்பட்டாள்.

காசியில் உள்ள சில பண்டிதர்களுக்கு ஸ்ரீவித்யா என்கிற சக்தி வழிபாடு குறித்த கேலிகளும் அசூயையும் இருந்தது. சக்தி வழிபாட்டிலுள்ள வாமாசாரம் என்கிற நிந்திக்கப்பட்ட மார்க்கத்தைத்தான் பாஸ்கரராயர் பிரசாரம் செய்து வருகின்றார். அதனால் இவருக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று அனைத்து பண்டிதர்களும் தயாராக இருந்தனர். இதை பாஸ்கரராயரும் அறியாமல் இல்லை.

‘‘என்னோடு வாதம் புரிய விரும்பும் பண்டிதர்கள் தாராளமாக வரலாம்’’ என்று அங்குள்ளோருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது ஆச்சரியமாக பரமஹம்ஸராகவும் மகாஞானியாகவும் காசியில் திகழ்ந்த குங்குமானந்த நாதர் என்ற மகானையும் அழைத்துக் கொண்டு யாகசாலைக்கு வந்தனர். குங்குமானந்தர் இவரைக் கண்டவுடன் ஆஹா… அந்த தேவியே இவருக்குள் அமர்ந்திருக்கிறாள் என்று ஆனந்தித்தார். குங்குமானந்தரின் சிறப்பு என்னவெனில் இவரின் மீது பூசப்படும் விபூதியெல்லாம் குங்குமமாகி விடுமாம். அதனாலேயே இவருக்கு குங்குமானந்தர் என்று பெயர் வந்தது. அப்பேற்பட்ட குங்குமானந்தரும் பாஸ்கரராயரை கூர்மையாக பார்த்தபடி இருந்தார்.

வாதம் தொடங்கியது. முதலில் சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிஷதங்களிலிருந்து விவாதிக்கப்பட்ட அனைத்திற்கும் அநாயசாமாக பதிலளித்தபடி இருந்தார். இவர் கூறும் பதிலைக் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போயினர். இவ்வளவு சுலபமாக பதில் அளிக்கின்றாரே, கொஞ்சம் கடினமான கேள்வியாகக் கேட்போமே என்று அந்தப் பண்டிதர்கள், சகஸ்ரநாமத்திலுள்ள 237வது நாமத்திலுள்ள, ‘‘மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா’’ என்ற நாமத்திலுள்ள அறுபத்து நான்கு கோடி யோகினீ தேவதைகளின் பெயர்கள், உற்பத்தி, அவற்றின் முழு சரித்திரத்தையும் சொல்ல முடியுமா என்று கேட்டுவிட்டு, இவர் எப்படி இதற்குப் பதிலளிக்கப்போகிறார் என்று அகங்காரமாக அமர்ந்தனர்.

பாஸ்கரராயர் கண்களை மூடினார். உள்ளிருந்து அம்பாள் சிரித்தாள். அந்தச் சிரிப்பலையினூடாக சொல்லலையும் எழுந்தெழுந்து வந்தன. ‘‘இதோ சொல்கிறேன்…’’ என அவர் ஒவ்வொரு யோகினியின் பெயர்களையும் சொல்லத் தொடங்கினார். நீங்கள் முடிந்தால் எழுதிக் கொள்ளுங்கள் என்றும் கட்டளை இட்டார். மடைதிறந்த வெள்ளம்போல அறுபத்து நான்கு கோடி யோகினிகளின் பெயரும் தீப்பொறிபோல வந்தபடி இருந்தன. அந்தப் பண்டிதர்களால் எழுத மாளாது களைத்துப் போயினர். வருடக் கணக்கில் கூட இவர் சலிக்காது சொல்வார் போலிருக்கிறதே என்று முகம் இருண்டு அமர்ந்தனர். சிலர் எழுத முடியாது ஏடுகளை ஓரம் வைத்தனர். சில கண்களில் நீர் வழிந்தபடி அமர்ந்தபடி அமர்ந்திருந்தனர். என்ன செய்வது என்று திகைத்து அமர்ந்திருந்தனர்.

இறுதியில் குங்குமானந்தரே அந்த பண்டிதர்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். ‘‘பண்டிதர்களே… உங்களால் இவரை வெல்ல முடியாது. இவர் அம்பாளின் அனுக்கிரகத்தைப் பெற்ற உபாசகர். இவரது தோளில் அம்பாள் அமர்ந்திருக்கிறாள். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் அவளே பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்’’ என்று சொன்னதோடு மட்டுமல்லாது குங்குமானந்தர் அபிஷேக தீர்த்தத்தை எடுத்து அங்கிருக்கும் பண்டிதர்களின் கண்களில் தெளித்தார்.

இப்போது அவரைப் பாருங்கள் என்றார். அவர்கள் அப்படிப் பார்க்கும்போது அம்பாள் அவரின் தோளின் மீது அமர்ந்திருந்தாள். அவர்கள் வியந்தனர். பேச முடியாமல் தழுதழுத்தனர். குளிரக் குளிர தரிசித்தனர். பின்னர் அனைத்துப் பண்டிதர்களும் பாஸ்கரராயரை வணங்கினர். மன்னிப்பு கேட்டு சாஷ்டாங்கமாக அவரின் திருவடி பரவி விடைபெற்றனர். பாரத தேசமெங்கும் பாஸ்கரராயரின் புகழ் பரவியது. காசியிலிருந்து மெல்ல மகாராஷ்டிரம், தஞ்சை என்று நகர்ந்தபடி இருந்தார். ஆங்காங்கு அற்புதங்களும் நடந்தபடி இருந்தன. அவை என்னென்ன என்பதை அடுத்த இதழில் பார்க்கலாம்.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi