Wednesday, May 15, 2024
Home » லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை தலைநகர் டெல்லி குலுங்கியது: டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு; 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைது; 144 தடை; துணை ராணுவம் குவிப்பு; தேர்தல் நெருங்கும் நேரத்தில் போராட்டம் வலுப்பதால் ஒன்றிய அரசு கலக்கம்

லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை தலைநகர் டெல்லி குலுங்கியது: டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு; 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைது; 144 தடை; துணை ராணுவம் குவிப்பு; தேர்தல் நெருங்கும் நேரத்தில் போராட்டம் வலுப்பதால் ஒன்றிய அரசு கலக்கம்

by Karthik Yash

புதுடெல்லி: கடந்த 2020-21ம் ஆண்டில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து, மீண்டும் போராட்டம் நடத்த 1 லட்சம் விவசாயிகள் திரண்டு வந்ததால் தலைநகர் டெல்லி குலுங்கியது. தடைகளை மீறி வர முயன்ற விவசாயிகள் மீது டிரோன் மூலம் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் டெல்லி எல்லை பகுதிகள் போர்க்களமாக மாறின. பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில எல்லைகளில் போலீசாரும் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் விவசாயிகள் போராட்டம் வலுவடைந்து வருவதால் ஒன்றிய அரசு கலக்கம் அடைந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் பெரும் போராட்டம் வெடித்தது. பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர். சுமார் 13 மாதங்கள் நீடித்த விவசாயிகள் போராட்டத்தால் ஒன்றிய அரசு கதி கலங்கியது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் விவசாயிகள் எதற்கும் அஞ்சாமல் போராடினர். கடும் குளிர், உறைபனியிலும் ஓயாமல் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் 800 விவசாயிகள் பலியாகினர்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் விவசாயிகள் போராட்டம் உலுக்கியது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இறுதியில், விவசாயிகளுக்கு பணிந்த ஒன்றிய அரசு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது. அதோடு, அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது. இதனால், 2021ம் ஆண்டு இறுதியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் தற்போது வரையிலும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்றித் தரவில்லை. தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கா விட்டால் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கங்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தன. அதோடு, ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தன. இதற்கிடையே, விவசாயிகளை சமாதானப்படுத்த விவசாய சங்கத் தலைவர்களுடன் ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் அர்ஜூன் முண்டா ஆகியோர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சில கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், முழுமையான முடிவு எட்டப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி டெல்லி சலோ போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்தன. அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தில் இருந்து பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட சுமார் 200 விவசாய சங்கங்களைச் சேர்ந்த 1 லட்சம் விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்தனர். கடந்த முறையைப் போலவே நீண்ட நாள் போராட்டத்திற்கு தயாராக 6 மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள், டெண்ட், டீசல், ஜெனரேட்டர் சகிதமாக விவசாயிகள் முழு முன்னேற்பாடுகளுடன் டிராக்டர்கள் மூலம் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.

முன்னெச்சரிக்கையாக ஒன்றிய அரசு டெல்லி எல்லைப் பகுதிகளில் போலீசாரையும், துணை ராணுவத்தையும் குவித்தது. 114 கம்பெனி துணை ராணுவப்படையினர் விவசாயிகளை தடுக்கும் பணியில் களமிறக்கப்பட்டனர். அரியானா, பஞ்சாப் போலீசாரும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்கும் விதமாக பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டனர். விவசாயிகள் பேரணி காரணமாக மற்ற சாலைகள் அனைத்தும் முற்றிலுமாக அடைக்கப்பட்டது. விவசாயிகள் டெல்லியின் உள்ளே நுழைவதை தடுக்கும் விதமாக மேற்குறிப்பிட்ட பாதைகளை தவிர மற்ற சாலைகள் அனைத்தும் சிமென்ட் தடுப்பு, முள் வேலிகள், இரும்பு கம்பிகளை முற்கள் போன்று பதித்தும், சாலைகளில் ஆணிகளை அடித்து வைத்தும், கன்டெய்னர்களை குறுக்கே வைத்தும், மணல் குவியல்கள், மணல் மூட்டை ஆகியவற்றை சாலையின் குறுக்கே வைத்தும் விவசாயிகளின் வருகையை போலீசார் தடுக்க தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில், 3 மாநில எல்லை வழியாக சுமார் 3,000 டிராக்டர்களுடன் வந்த 1 லட்சம் விவசாயிகளை அந்தந்த மாநில எல்லைகளிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டெல்லியிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாப்-அரியானா சம்பூ எல்லையில் தடைகளை தாண்டி விவசாயிகள் முன்னேற முற்பட்டதால் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த கான்கிரீட் தடுப்புகளை விவசாயிகள் டிராக்டர் மூலம் அகற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அரியானா போலீசார் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதிலுக்கு விவசாயிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதேப்போன்று உத்திரப்பிரதேச எல்லையில் விவசாயிகள் மீது போலீசார் தண்ணீர் பீச்சி அடித்து கலைக்க முயன்றனர். கடந்த முறை முக்கிய போராட்ட களங்களாக இருந்த சிங்கு, திக்ரி எல்லை பகுதிகளில் விவசாயிகளின் டிராக்டர்கள் தடுத்து நிறுத்தப்பட் டன. அப்பகுதியில் சாலைகள் அனைத்தும் சீல் வைத்து மூடப்பட்டிருந்தன. 3 மாநில எல்லையிலும் தடையை மீறி முன்னேற முயன்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இதனால் தலைநகர் டெல்லி குலுங்கியது. போலீசாரின் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளால், டெல்லியில் நுழைய முடியாத விவசாயிகள் மீண்டும் இன்று பேரணியை தொடர்வதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. விரைவில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த சமயத்தில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பட்சத்தில் அது நாடு முழுவதும் பரவும் வாய்ப்புள்ளது. இது பாஜவுக்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் ஒன்றிய அரசு நிலைமையை சமாளிக்க பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது.

* வாபஸ் கிடையாது
விவசாய சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதில், ‘‘எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தும் வரையில் எங்களது போராட்டத்தை வாபஸ் பெறப்போவது கிடையாது. மேலும் எல்லை பகுதிகளில் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து அங்கேயே தங்கி எங்களது போராட்டத்தை எத்தனை நாட்களானாலும் தொடர்ந்து நடத்துவோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

* கடும் நெரிசல்
டெல்லியின் எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை தொடர்ந்து டெல்லி நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக விமான நிலையம் செல்லும் பகுதி, நாடாளுமன்ற பகுதி, இந்தியா கேட், ஆஸ்ரம், லாஜ்பத் நகர், கெனாட் பிளேஸ் ஆகிய முக்கிய பகுதிகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது.

* தலைமை நீதிபதிக்கு கடிதம்
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து போராட்ம் நடத்த முயற்சி செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் எதிர்மறை உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது என்றும் உரிய உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆதிஷ் அர்வாலா கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

* ஒன்றிய அரசின் கோரிக்கை டெல்லி அரசு நிராகரிப்பு
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில், டெல்லியில் உள்ள பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்ற வேண்டும் என்று டெல்லி அரசுக்கு ஒன்றிய அரசு முன்னதாக பரிந்துரை செய்திருந்தது. ஆனால் அதனை நிராகரித்து டெல்லி அரசு நிராகரித்து விட்டது. இதுகுறித்து டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘விவசாயிகளின் போராட்டம் நியாயமானதாக கருதுகிறோம். இந்திய அரசியல் சாசனப்படி ஒவ்வொரு குடி மக்களுக்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. எனவே போராட்டம் நடத்தும் விவசாயிகளை கைது செய்வது தவறான நடவடிக்கையாக அமைந்து விடும். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு விவசாய சங்கங்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து அவர்களை கைது செய்து அதன் மூலமாக ஏற்கனவே பட்டுள்ள காயத்தில் உப்பை தெளிக்கக்கூடாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* விவசாயிகளின் 12 அம்ச கோரிக்கை
‘டெல்லி சலோ’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் 12 அம்ச கோரிக்கைகள்:
1. அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் சட்டம் இயற்ற வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி, பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
2. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
3. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ன்படி, வளர்ச்சித் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்று, 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். வளர்ச்சி அடைந்த பகுதியில் 10 சதவீத வீட்டு மனைகளை விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
4. உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா விலக வேண்டும். அனைத்து இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கும் (எப்டிஏ) தடை விதிக்க வேண்டும்.
5. 2021ல் நடந்த போராட்டத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி விவசாயிகளுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்.
6. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
7. 2020 டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதி இழப்பீடு மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
8. மின்சார திருத்த மசோதா 2020 ரத்து செய்யப்பட வேண்டும்.
9. கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் 200 நாட்களுக்கு வேலை, தினசரி ஊதியம் ரூ.700 ஆகியவற்றுடன் விவசாய வேலைகள் இணைக்கப்பட வேண்டும்.
10. மிளகாய், மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
11. பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலம், காடுகள் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
12. போலி விதைகள், பூச்சிக் கொல்லிகள், உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தவறு செய்தால் கடுமையான அபராதம் விதிக்கும் நடைமுறையை கொண்டு வந்து, விதையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

* மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்கள் நேற்று மூடப்பட்டது. குறிப்பாக நாடாளுமன்றம் அமைந்திருக்கக் கூடிய பகுதி, அருகில் உள்ள பெட்ரோல் நிலையங்கள், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செகரட்டிரியேட், பட்டேல் சவுக், உத்தியோக்பவன், ஜன்பத், பாரகம்பாசாலை, கடமை பாதை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய மெட்ரோ வாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. இதில் விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்றபடி வழக்கமாக மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருவதாகவும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளின் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும் வரையில் இந்த நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மீண்டும் பேச்சுவார்த்தை ஒன்றிய அரசு அழைப்பு
ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில், ‘‘விவசாயிகளின் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா வெளியேறுவது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்வது போன்ற விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை அவசியம். இதைப் பற்றி பிற தரப்புகளுடன் பேச வேண்டி உள்ளது. அதன்பிறகு தான் முடிவெடுக்க முடியும். பாஜ அரசு எப்போதுமே விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது. எனவே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் வர வேண்டும். ராகுல் காந்தி மீண்டும் பொய்களை பேசி மக்களை தவறாக வழிநடத்துகிறார். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஏன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் இயற்றப்படவில்லை?’’ என்றார்.

* காங். ஆட்சிக்கு வந்தால் எம்எஸ்பி சட்டம் அமலாகும்
சட்டீஸ்கரில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘சமீபத்தில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உரிமை தரப்பட வேண்டுமென்ற சுவாமிநாதனின் பரிந்துரையை பாஜ அரசு செய்யவில்லை. மத்தியில் இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு எம்எஸ்பிக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை எங்கள் அரசு வழங்கும். எங்கள் தேர்தல் அறிக்கையிலும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் இடம் பெறும்’’ என்றார்.

* இன்று கருப்பு நாள்
அரியானா மாநிலம் அம்பாலா அருகே ஷம்பு எல்லையிலும், ஜிந்த் மாவட்ட எல்லையிலும் அம்மாநில போலீசார் பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி விரட்டி அடித்தனர். இது குறித்து ஷம்பு எல்லையில் விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், ‘‘இந்திய வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை மோடி அரசு தாக்கிய விதம் வெட்கக்கேடானது. நாங்கள் மீண்டும் நாளை முன்னேறுவோம்’’ என்றார்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்க பிரதிநிதி ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், ‘‘போலீஸ் நடவடிக்கையால் சுமார் 60 விவசாயிகள் காயமடைந்தனர். எங்கள் கோரிக்கை மீது ஒன்றிய அரசு எந்த அக்கறையும் காட்வில்லை’’ என்றார். மற்றொரு விவசாய சங்கத் தலைவரான சுர்ஜித் சிங் பூல் கூறுகையில், ‘‘அரியானா போலீசார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக எங்கள் மீது ஆயிரக்கணக்கான கண்ணீர் புகை குண்டுகளை ஏவி மோசமாக விரட்டினர்’’ என்றார்.

* விவசாயிகளின் ரூ.1 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியாதா? காங்கிரஸ் கேள்வி
நன்கொடையாளர்களின் ரூ.14 லட்சம் கோடியை தள்ளுபடி செய்யும் போது விவசாயிகளின் ரூ.1 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியாதா என்று காங்கிரஸ் எழுப்பி உள்ளது. டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள் போராட்டம் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது,’ கண்ணீருடன் இருக்கும் விவசாயிகள் மீது ஒன்றிய அரசு கண்ணீர் புகை குண்டுகளை வீசுகிறது. வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை, ஆனால் அவருக்கு பாரத ரத்னா கொடுக்கிறது. விவசாயிகளுக்காக போராடிய சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களது கோரிக்கைகளுக்காக டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளை தலைநகருக்குள் செல்ல அனுமதிக்கால் கண்ணீர் குண்டு வீசி ஒன்றிய அரசு தாக்குகிறது’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: மூன்று ‘கறுப்பு’ விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்றபோது மோடி அரசு நிறைவேற்றுவதாக உறுதியளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டு விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நன்கொடை வழங்குபவர்களின் ரூ. 14 லட்சம் கோடி கடன்களை மோடி அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் உணவு வழங்கும் விவசாயிகளின் 1 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. 2008ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு விவசாயிகளின் ரூ.72,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தது. விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழியை மோடி அரசு நிறைவேற்றவில்லை என்பது அதன் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறுகையில்,’ மோடி அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை மறுத்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உத்தரவாதப்படுத்தும் சட்டத்தை அவர்கள் ஏன் அமல்படுத்தவில்லை. எம்எஸ் சுவாமிநாதன் விவசாயிகளின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்றார். அவர்களுக்கு உதவும் அவரது சூத்திரத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை. பிரதமர் அளித்த உறுதிமொழிகளை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கேலிக்கூத்து, மோசடி என்று அழைக்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பிப்ரவரி 16 அன்று ‘கிராம அளவில் பந்த்’ கடைப்பிடிக்க உள்ளனர். இது தொழிலாளர் வர்க்கத்தின் பெரிய போராட்டம்’ என்றார்.

You may also like

Leave a Comment

17 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi