Sunday, April 21, 2024
Home » குறைவற்ற வாழ்வருளும் குபேரன்

குறைவற்ற வாழ்வருளும் குபேரன்

by Porselvi

சிவபெருமான் – பார்வதிதேவி திருமணத்தின்போது, ஈசனின் ஆணைக்கேற்ப அகத்திய முனிவர் தென்னாட்டுக்கு வந்தார். வடக்கையும் தெற்கையும் சமமாக்கினார். நிறைவாகப் பொதிகை மலையில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். இதற்கு நடுவே அகத்தியப் பெருமானுக்கு ஈசனின் தன் திருமணக் கோலத்தை எண்ணற்ற தலங்களில் அருளினார். பொதிகையில் உற்பவித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான `பொருநை’ எனப்படும் `தாமிரபரணி’ நதியின் இரு கரைகளிலும் 200-க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பும், புராணப் பழமையும் கொண்ட சிவாலயங்கள் உள்ளன. இவற்றில் பல ஆலயங்கள் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்கிற பெருமைக்குரியவை. காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற ஆலயங்கள் இருப்பதைப் போன்றே தாமிரபரணியின் இரு கரைகளிலும் அருமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள `அரிகேசவநல்லூர்’. தற்போது `ஹரிகேசநல்லூர்’ என்று அழைக்கிறார்கள். இங்குள்ள பெரியநாயகி சமேத அரியநாதர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், அரிதாகக் காணப்படும் குபேரன் சந்நதியும், ஜேஷ்டா தேவியின் சந்நதியும் இங்குதான் அமைந்திருக்கின்றன. இந்த ஊருக்குள் நவநீத கிருஷ்ணசுவாமி ஆலயமும் உள்ளது. அரிகேசரி பாண்டியன், வயல்களின் நடுவே இயற்கை கொஞ்சும் சூழலில் ஆலயத்தை அமைத்துள்ளான். கோயிலின் தொன்மையே தனித்த கம்பீரத்தைக் கொடுக்கிறது. பக்தர்களின் வருகை மிகக் குறைவாகவே இருப்பினும், உள்ளூர் அன்பர்களின் ஒத்துழைப்போடு பிரதோஷம் போன்ற விழாக்கள் சிறப்புற நடைபெற்று வருகின்றன. நூறு ஆண்டுகட்கு முன்பாக 1900-ல் குடமுழுக்கு நடைபெற்றதை ஆலய அர்த்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆலயத்தின் முகப்பில் கோபுரம் ஏதும் இல்லை. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி, அடுத்து மண்டபம் கடந்து உள்ளே நுழைந்தால், ஆகமக் கோயிலுக்கு உரிய சூரியன், சந்திரன், ஜுரதேவர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகள் சந்நதிகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது, ஜடாவர்மன் குலசேகரபாண்டியன் கல்வெட்டாகும். 12-வது நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் இங்குள்ள இறைவன் அரிகேசரிநல்லூரில் உள்ள அரிகேசரி `ஈசுவரமுடைய நாயனார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்தச் சிவாலயத்தைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் அரிகேசரி நல்லூர் என்றழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர். இடக்காலை வலதுகாலின் மீது மடித்து வைத்தபடி திகழ்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியுள்ளார். பொதுவாக தட்சிணாமூர்த்தி சிலைகளில் பின் இரு கரங்களில் அட்சமாலை அல்லது அக்கினி மற்றும் டமருகம் (உடுக்கை) காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்திலுள்ள இடைகால் (தென் திருவாரூர்) தியாகராஜப் பெருமான் ஆலயம், தென் திருபுவனம் புஷ்பவல்லி சமேத புஷ்பவனநாதர் ஆலயம், ஹரிகேசவ நல்லூர் அரியநாதசுவாமி ஆலயம், திருப்புடை மருதூர் நாறும்பூநாதர் ஆலயம், அத்தாளநல்லூர் மூன்றீசுவரர் ஆலயம் ஆகியவை பஞ்ச குருத் தலங்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றன. அவற்றில் இந்தத் தலம் மூன்றாவதாகத் திகழ்கிறது. இந்த பஞ்ச குருத் தலங்களிலுள்ள தட்சிணாமூர்த்தியின் திருமேனிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த ஆலயங்களில் குருப் பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சந்நதிக்கு எதிராக உள்ள சப்த கன்னியர் சந்நதியில் வீரபத்திரருக்குப் பதிலாக ‘ருரு’ பைரவர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த ருரு பைரவரை மனமாறத் தொழுதால் அஷ்டமா சித்திகளும் கிட்டும் என்ற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடையே நிலவுகிறது.வெளிச்சுற்றில் தென்புறம் ஜேஷ்டா தேவியின் பெரிய உருவம். மாந்தன் மாந்தியோடு காட்சியளிக்கிறான். பாண்டி நாட்டுக் கோயில்களில் ஜேஷ்டா தேவி சந்நதிகளைச் சாதாரணமாகக் காண முடியாது. வடக்குச் சுற்றில் இறைவன் சந்நதிக்கு வடகிழக்கே, அஷ்ட திக்பாலர்களில் வடதிசைக்குரியவனும், சிவபெருமானின் நெருங்கிய நண்பருமான செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப் பெரிய கற்சிலை ஒன்று காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப் பெரிய உருவத்துடன் குபேரன் காட்சி அளிக்கிறார். இங்கு குபேரன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால், இந்த ஊர் ஒரு காலத்தில் அளகாபுரி என்று பெயர் பெற்றிருந்ததாம். இந்தக் குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து குபேரனை வழிபடுகின்றனர்.

அரியநாதர் ஆலயத்தில் இறைவனுக்குத் தனிக் கோயிலும், அந்த ஆலயத்தின் வடகிழக்கில் இறைவி பெரியநாயகி அம்மைக்கு என்று விமானத்துடன் கூடிய தனிக்கோயிலும் அமைந்துள்ளன. தேவியின் ஆலயம் பிற்காலத்தில் தனியே கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பெரிய என்ற அடைமொழிக்கேற்ப பெரிய திருமேனியோடு இறைவி காட்சி தருகிறாள். சுமார் ஏழு அடி உயரமான இறைவியின் சிலை கலை நுணுக்கமும் வனப்பும் மிக்கது. இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளன. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி – அம்பாசமுத்திரம் சாலையில் திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வீரவநல்லூரை அடைந்து அங்கிருந்து 3 கி.மீ. பயணித்தால் ஹரிகேசநல்லூரை அடையலாம்.

You may also like

Leave a Comment

twelve + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi