சென்னை: பால் மற்றும் பால் உப பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு வழங்கி வரும் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இணைப்பு பாலமாக திகழ்ந்து வருகிறது. பொது மக்களின் தேவைக்கேற்ப பால் மற்றும் பால் உப பொருட்களை சந்தை படுத்தி விற்பனை செய்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் இடம் பிடித்துள்ளது. பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, லஸ்ஸி, மோர், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
ஆவின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு எளிய வகையில் சென்றடைய பல்வேறு அரசு அலுவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் ஆவின் பாலகம் அமைத்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது கே.கே நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ஆவின் பாலகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இஎஸ்ஐசி நல்வாழ்வு நண்பர்கள் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ பயானாளிகளுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ பிரபாகர ராஜா, இஎஸ்ஐசி மருத்துமவனை முதல்வர் காளிதாஸ் டி.சவான் மற்றும் மருத்துவமனை மற்றும் ஆவின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.