Sunday, June 2, 2024
Home » காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புதிய பள்ளி கட்டிடங்களுக்கு திறப்பு விழா: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்; எம்எல்ஏக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புதிய பள்ளி கட்டிடங்களுக்கு திறப்பு விழா: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்; எம்எல்ஏக்கள் பங்கேற்பு

by Karthik Yash

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களுக்கு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த கட்டிடங்களை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டுவதற்கான பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்‌.

இதனைத் தொடர்ந்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தாமல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை காணொலி மூலமாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் 2 வகுப்பறைக் கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் வகுப்பறைகளில் மாணவர்களை கவரும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், தமிழ் எழுத்துகள், எண்கள், பயனுள்ள தகவல்கள், தமிழ்நாடு வரைபடங்கள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தினை பார்வையிட்டு பள்ளி மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். பின்னர் பொதுமக்கள் அளித்த பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டு பரிசீலித்து உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், ஒன்றிய கவுன்சிலர் மோகனா இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், செம்பூண்டி ஊராட்சியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் மூலமாக ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ரூ.32 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

இந்த கட்டிடத்தினை முதல்வர் காணொலி வாயிலாக நேற்று திறந்தவுடன் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் உற்சாகத்துடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கி பேசுகையில், கிராமப்புற பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக தொடக்க பள்ளியில் இருந்தே ஊக்கத்தொகை வழங்குவது, கல்லூரிக்கு சென்றவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார்.

மகளிர் உரிமைத் தொகை உங்களில் பெரும்பாலானோர் வாங்கியிருப்பீர்கள். இப்படி பல்வேறு திட்டங்கள் கிராமப்புறங்களை சென்றடைய முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இந்த கிராமத்தில் இடைத்தரகர் இன்றி அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்ய, கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது இந்த அரசு. இந்த கிராமத்தில் உள்ள கிளியாற்றில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதற்கு நடவடிக்கை மேற்கொண்டு அணை கட்டப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் தம்பு, வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் மாலதி, ஒன்றியக் குழு உறுப்பினர் சிவபெருமான், ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் விமலா மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேடந்தாங்கல் ஊராட்சி: இதேபோன்று வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள விநாயநல்லூர் கிராமத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறையுடன் கூடிய பள்ளிக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி பாஸ்கர் ராவ், சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் வேணு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கௌதமி ஹரி கிருஷ்ணன், தலைமையாசிரியர் கோவிந்தன், ஊராட்சி செயலர் சாமிநாதன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் உள்ள மேலவளம் பேட்டை அரசினர் நடுநிலைப் பள்ளியில் ரூ.ரூ.22 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைத்தார். இதனையடுத்து பேரூராட்சி தலைவர் தசரதன், பள்ளி சிறுவர்களுடன் சேர்ந்து ரிப்பன் வெட்டி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, விவசாய அணி துணை அமைப்பாளர் அரசு, பள்ளி தலைமையாசிரியர் தாட்சாயினி, மன்ற உறுப்பினர் துர்கா தேவி உள்ளிட்ட கிராம மக்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் ஒன்றியம்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கொளத்தூர், குண்ணப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள், தண்டரை மற்றும் திருநிலை ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற செயலகக் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டிடங்களை காணொலி மோலம் திறந்து வைத்
தார். இதற்காக திருப்போரூர் ஒன்றியம் கொளத்தூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஊராட்சி முகமை கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், உதவி ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் கவிதா ஆகியோர் குத்து விளக்கேற்றி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

குண்ணப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற பள்ளிக் கட்டிட திறப்பு, தண்டரை மற்றும் திருநிலை ஆகிய ஊராட்சி மன்றக் கட்டிடங்கள் திறப்பு நிகழ்ச்சிகளில் திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன், துணைத்தலைவர் சத்யா சேகர், தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் பையனூர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றினர். இந்த நிகழ்ச்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொளத்தூர் ராஜேஸ்வரி, குண்ணப்பட்டு விஜி மோகன், தண்டரை ஜெயலட்சுமி, திருநிலை நாகம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அருண்குமார், வினோத், அபிராமி மதுரைவேல், ஒன்றிய ஆணையாளர் பூமகள் தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்:செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கபெருமாள் கோவில், செட்டிபுண்ணியம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.80 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 பள்ளிகளுக்கும் சேர்த்து 5 வகுப்பைறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவைகளை நேற்று முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார். பின்னர் பள்ளி கட்டிடங்களை செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் காட்டாங்கொளத்தூர் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆப்பூர் சந்தானம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜன், மாவட்ட பிரதிநிதி கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

3 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi