ஊட்டி : ஈட்டி எறியும் போட்டியில் கோத்தகிரி கீரின் வேலி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதல் இரண்டு இடங்களை தக்க வைத்து கொண்டனர்.கோத்தகிரி வட்டார குறு மைய அளவிலான ஆண்களுக்கான தடகள போட்டிகள் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் நடந்தது. இதில், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஆகிய ஓட்ட பந்தயம் நடந்தது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
இந்த போட்டியில் கேர்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். இப்போட்டிகளை உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் பெரியசாமி துவக்கி வைத்தார். இதில், ஈட்டி எறியும் போட்டியில், கோத்தகிரி கிரீன் வேலி மெட்ரிக் பள்ளி மாணவன் சமீர் ராய் முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியை சேர்ந்த மாணவர் சந்தோஷ்குமார் 2ம் இடத்தையும், கோத்தகிரி சிஎஸ்ஐ பள்ளி மாணவர் கவுதம் 3ம் இடத்தையும் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.