
செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள பெண்கள் விடுதியை ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அருகே திருத்தேரியில், சிம்யா பிரசாத் முகர்ஜி ரூபன் பில்டிங் எனப்படும் அரசு கட்டிடம் உள்ளது. இங்கு, வேலைப்பார்க்கும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு புதிதாக 100 பெண்கள் தங்குவதற்கு உண்டான புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் பெண்கள் தங்கி வருகின்றனர். ஒருவருக்கு மாதம் ரூ.1,500 வாடகை வீதம் என கல்பனா சாவ்லா பெண்கள் தங்கும் விடுதி என்ற பெயரில் பெறப்படுகிறது.
இந்த விடுதியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஸ்ரீசைலேஷ்குமார், தமிழக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகம்மது மற்றும் மகளிர் திட்டம் மேலாண் இயக்குனர் திவ்யதர்ஷிணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராணி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், விடுதியில் தங்கியுள்ள பெண்களிடம் இங்கு தங்களுக்கு போதுமான வசதி பாதுகாப்பு எப்படியுள்ளது என கேட்டறிந்தார். இந்த கட்டிடத்தில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தயாரித்த பல்வேறு கைவினை பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், இருளர் பழங்குடி மக்களின் மரபுவழி மருந்துகள் ஆகியவையும் பார்வையிட்டனர்.