புதுடெல்லி: இந்தியாவில் மொத்தம் 150 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. யானைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக யானைகளின் வாழ்விடங்கள், வழித்தடங்கள் பற்றி அவ்வவ்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2010ம் ஆண்டு ஒன்றிய அரசின் யானை அதிரடிப்படை கஜா அரசிடம் சமர்ப்பித்த அறிக்யைில் நாட்டில் 88 யானை வழித்தடங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தது. கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட கடைசி கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 30,000 யானைகள் உள்ளன. இது உலகின் மொத்த விலங்குகளில் 60 சதவீதத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 150 யானை வழித்தடங்கள் உள்ளதாக அண்மையில் உலக யானைகள் தினத்தில் வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிழக்கு மத்திய பகுதியில் அதிக எண்ணிக்கையில் 52 யானை வழித்தடங்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக வடகிழக்கு பகுதியில் 48ம், தெற்கு பகுதியில் 32 யானை வழித்தடங்களும் உள்ளன. வடக்கு பகுதியில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் 18 யானை வழித்தடங்களே உள்ளன.
இந்த நான்கு பகுதிகளிலும் மொத்தம் 150 யானை வழித்தடங்கள் உள்ளன. அவற்றில் 126 மாநிலங்களின் அரசியல் எல்லைகளுக்குள்ளும், 19 இரண்டு மாநிலங்களிலும் அமைந்துள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 26 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் யானைகள் மாநிலங்களை விட்டு வௌியேறி வேறு மாநிலங்களுக்குள் நுழைவதும் அதிகரித்துள்ளது” என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.