பெரம்பூர்: சென்னை மற்றும் சுற்று வட்டார டிரைலர் லாரி, டிப்பர் லாரி, கன்டெய்னர் லாரி, மினி வேன் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆலோசனை கூட்டம், ராஜமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், காலாவதியான சுங்க சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும், ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் மீது போக்குவரத்து காவலர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும், ஆன்லைன் மூலம் அபராதம் போடுவதை கைவிட வேண்டும், கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் மூலம் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லாரிகள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் நவம்பர் 6ம் தேதி முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து வகையான லாரிகள் மற்றும் மினிவேன்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் இதில், 1 லட்சம் லாரிகள் வேலையில் ஈடுபட உள்ளதாகவும், லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.