துபாய்: சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸி. ஓபன் முடிவடைந்துள்ள நிலையில், அந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்று எதிர் பார்க்கப்பட்ட நம்பர் 1 வீரர் ஜோகோவிச்(செர்பியா), வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோர் பைனலுக்கு கூட முன்னேறவில்லை.
நடப்பு சாம்பியனாக இருந்த ஜோகோவிச் அரையிறுதியில் இளம் வீரர் யானிக் சின்னரிடம் (இத்தாலி) தோற்று வெளியேறினார். அதனால் 1200 புள்ளிகளை இழந்தாலும் 9,855 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். காலிறுதி வரை முன்னேறிய கார்லோஸ் (ஸ்பெயின்) கூடுதலாக 400 புள்ளிகளை பெற்றாலும் 9,255புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடர்கிறார். பைனல் வரை முன்னேறிய மெத்வதேவ் (ரஷ்யா), பட்டம் வென்ற சின்னர் முறையே 3, 4வது இடங்களில் தொடர்கின்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் 3வது சுற்றுடன் வெளியேறினார். அதனால் 110 புள்ளிகளை மட்டுமே இழந்ததால் 9770 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்கிறார். கோப்பையை தக்கவைத்த அரினா சபலென்கா (பெலாரஸ்) அதே 8905 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
* ரோகன் போபண்ணா சாதனை
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரலேியாவின் மேத்யூ எப்டன் இணை அரையிறுதியில் வென்றபோதே போபண்ணா முதல் இடத்தை உறுதி செய்தார். போபண்ணா – எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் இருவரும் தலா 2000 புள்ளிகளை முழுமையாக பெற்றனர். அதனால் இருவரும் தலா 8,450 புள்ளிகளுடன் தரவரிசையில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். மிக மூத்த வயதில் நம்பர் 1 ஆன வீரர் என்ற சாதனையையும் போபண்ணா படைத்துள்ளார்.