சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ240 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருந்தது. கடந்த 19ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ55,120க்கு விற்பனையானது. இது தங்கம் வரலாற்றில் அதிபட்ச விலை. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. அதன் பிறகு கடந்த 23ம் தேதி சவரனுக்கு ரூ1,160 குறைந்து, ரூ53,600க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.
கடந்த 26ம் தேதி சவரனுக்கு ரூ360 அதிகரித்து ரூ54,040க்கும், 27ம் தேதி ரூ120 உயர்ந்து ரூ54,160க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ480 உயர்ந்தது. 28ம் தேதி(நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. இதனால் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் கிராமுக்கு ரூ30 குறைந்து ஒரு கிராம் ரூ6,740க்கும், சவரனுக்கு ரூ240 குறைந்து ஒரு சவரன் ரூ53,920க்கும் விற்கப்பட்டது.