![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/4-l-13.jpg?type=webp&quality=80)
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதாவது கடந்த மாதம் 18ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.44,480, 20ம் தேதி சவரன் ரூ.44,640, 31ம் தேதி சவரன் ரூ.44,720 என்று அடுத்தடுத்து சாதனைகளை படைத்தது. தொடர்ந்து 5ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.45,520க்கு விற்பனையாகி சாதனை படைத்தது. 6ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.45,200, 7ம் தேதி ரூ.45,120, 8ம் தேதி ரூ.45,120 என விலை குறைந்தது. 10ம் தேதி சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,800க்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து தங்கம் 4 நாட்களில் சவரனுக்கு ரூ.720 குறைந்தது. அதன் பிறகு 11ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,040க்கு விற்கப்பட்டது. 12ம் தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,440க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் 13ம் தேதி கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.5,676க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.45,408க்கும் விற்கப்பட்டது. தமிழ்புத்தாண்டான நேற்று முன்தினம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் மட்டும் கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,720க்கும், சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,760க்கும் விற்கப்பட்டது.
இந்த அதிரடி விலை உயர்வின் மூலம் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. இப்படியே விலை உயர்ந்தால் தங்கம் விலை சவரன் ரூ.46 ஆயிரத்தை தொட்டு விடுமோ? என்ற ஏக்கம் நகை வாங்குவோரிடையே நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,650க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.45,200க்கும் விற்கப்பட்டது.
இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.